என் சகோதரி அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியம் "யாராச்சும் என்னை ரெண்டு நாள் உட்கார வச்சு ஒரு கஞ்சி மட்டும் கொடுத்தா கூட போதும்".அப்போதெல்லாம் எனக்கு அவ்வளவு சிரிப்பாக இருக்கும்.என்ன இவளுக்கு இப்படி ஒரு ஆசையென்று. ஆனால் இப்போது எனக்கே அப்படி யாராவது உணவளித்தால் போதுமென்றிருக்கிறது.
இதற்கும் எல்லா நேரமும் சமையலறையோடு இருக்கும் வாழ்க்கை முறை எனக்கில்லை. நான் விரும்பும்போது வெளியில் உணவுண்ண முடியும்.எந்த நேரடி கட்டுப்பாடுகளும் பொருளாதார இடர்ப்பாடுகளும் இல்லை. இருந்தும் ஒரு குடும்பத்தின் தலைமை பொறுப்பாளராக நான் மாறிய பின் எனக்குள் நிகழ்ந்த சமையலறை குறித்த மனமாறுதல்களும் கண்ணோட்டமும் நானே நம்ப முடியாத வகையில் இருந்தது. கிட்டத்தட்ட நான் வகைப்படுத்தியிருந்த எண்ணங்களுக்கு முற்றும் நேரெதிரானவை அவை.
விடுமுறை நாட்களில் ஓய்வுக்காக உணவகங்களில் வாங்கி சாப்பிட முடிவெடுக்கும் போதெல்லாம் நான் பதற்றம் கொள்கிறேன். அதை இங்கேயே செய்து விடலாம் என்று மறுத்து முன் செல்லும் போது அரிதான விடுமுறை முழுக்க சமையலறையில் விரயமாகி விடும். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் அந்த ஓய்வின்மையை நான் விரும்பினேன். அவ்வாறு உணவு சமைத்து பரிமாறும் போது மட்டுமே நான் என் கடமையை சரிவர செய்கிறேன் என்று எண்ணம் கொள்கிறேன். எத்தனை பிற்போக்கானது. ஆனால் அதுவே உண்மையானது.
நான் பேசிய அத்தனை முற்போக்கான சொற்களும் உதிர்ந்து நான் வெறும் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு இந்திய குடும்பப் பாங்கான பெண்ணின் பிம்பமென மட்டுமே எஞ்சுகிறேன்.
அம்பையின் எழுத்துக்கள் என் மனதிற்கு மிக நெருக்கமானது. எவரவர் எனக்கு பிரியமானவரோ அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப நான் வடிவமைக்கப்படுகிறேன்.ஏனெனில் நான் அனைவரின் நுண்ணுணர்வுகளோடும் எளிதில் பொருந்தி விடுவேன். இயல்பான கட்டுக்கோப்பும் வகுக்கப்பட்ட பழக்கவழக்கங்களும் கொண்ட நடுத்தர இல்லத்தினரின் அத்தனை குணங்களையும் என் இயல்பில் நான் கொண்டிருந்தேன். ஆனால் என் உள்ளம் இதற்கெல்லாம் அப்பாற்ப்பட்டு தனித்திருந்தது.அது வழக்கமான வரையறைக்குள் அடங்கவில்லை. அப்போது அம்பையின் எழுத்துக்கள் என்னை நானே கண்டடைய வகை செய்தன. என் மிக அரிதான மன ஓட்டங்கள் அதில் இயல்பாய் அமைந்திருக்கும்.கூட்டு அமைப்பில் வாழ்ந்தாலும் நான் என்னளவில் தனியவள்.எனக்கே எனக்கான கனவுகளும் பெருமிதங்களும் அகங்காரமும் சிறுமையும் கொண்டவள். எனக்கான தருணங்களை ரசிப்பவள்.பறத்தலே அடையாளமென கொண்டிருக்க விரும்புபவள். அம்பையின் கதைகளில் அப்படிப்பட்ட பெண்களை நாம் காணலாம்.
அம்பையின் "வீட்டின் மூலையில் ஒரு சமையலறை"மிக மிக யதார்த்தமான என் மனதிற்கு நெருக்கமான சிறுகதை. கதைக்களம் ராஜஸ்தான் கூட்டுக் குடும்பத்தினை மையப்படுத்தியது.தாங்கள் நன்றாக சாப்பிடுவோம் என்பதில் பெருமைக் கொண்டிருக்கும் ஆண்கள். அவர்களை நன்றாக வைத்திருக்கிறோம் என்று பெருமைக் கொண்டிருக்கும் குடும்பத் தலைவி.அத்தனை பெரிய வீட்டில் போனால் போகிறதென்று ஒட்ட வைத்தது போல் ஒரு சமையலறை.ஒரே ஜன்னல். ஜன்னல் வழியாக பார்த்தால் தெரியும் வகையில் அழகிய பச்சை மலைகள். ஆனால் எப்போதும் மலைகளை பார்க்க முடியாத படி துணிகள் உலர்த்தப்படும் கம்பிகள் கட்டப்பட்டிருக்கும். பாத்திரங்களை சமையலறைக்குள் கழுவினால் தரை முழுக்க தண்ணீர் பரவி விடும்.
அந்த இருண்ட காற்றோட்டமில்லாத சமையலறையில் தான் கணக்கில்லா பூரிகளும் சப்ஜிகளும் இனிப்புகளும் வேறு பலகாரங்களும் செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. மிக அறிவாளியான வங்கியில் வேலை பார்க்கும் மருமகளும்,படித்த பிற மொழிகள் பல அறிந்த மமருமகளும்,காதல் திருமணம் செய்துக் கொண்ட புத்திக் கூர்மையும் மாற்று சிந்தனைகளும் கொண்ட தென்னகத்தின் மருமகளும் அந்த அடுக்களையில் டீ போட்டுக் கொண்டும் சப்பாத்திகள் உருட்டிக் கொண்டும் புலாவ் செய்துக் கொண்டும் தங்கள் விடுமுறைகளை ஓய்வாக செலவிடுகிறார்கள். அந்த சமையலறையை விரிவாக்கம் செய்யும் வேண்டுகோள் ஏளனத்தோடு பயனில்லாத செலவு என நிராகரிக்கப் படுகிறது. அதற்கு பதிலாக மேலும் துணி உலர்த்தும் கம்பிகள் ஜன்னலுக்கு வெளியே தெரியும் மலைகளை மறைத்துக் கட்டப்படுகிறது.
சுற்றுலா செல்ல முடிவு செய்யும் போது பெண்கள் நான்கு மணி இருளுக்குள்ளாக எழுந்து பூரி சுடுகிறார்கள். அப்போது அவர்கள் பேசுவது தொந்தரவு தருவதாகவும் தூக்கத்தினை கெடுப்பதாகவும் இருப்பதாக வீட்டு ஆண்களால் கூறப்படுகிறது. சுற்றுலா செல்லும் இடத்தில் சுட சுட பக்கோடா போடுவதற்காக சிறு அடுப்பு எடுத்துச் செல்லப்பட்டு குழந்தைகளை அடக்கியவாறு அங்கும் அவர்கள் சமைக்கிறார்கள். அந்த வீட்டின் தலைவி ஜீஜி உடல்நலம் குன்றி மயக்கம் அடைகிறாள். தன்னிலை அடைந்தவுடன் அவள் முதலில் அன்றிரவு சமைக்க வேண்டிய உணவுகளை பட்டியலிடுகிறாள்.மருமகள்களை அழைத்து வெகு வேகமாக தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள். தான் சிறு வயதில் திருமணம் செய்து நகைகள் அணிந்து அந்த வீட்டிற்கு வந்தது பற்றியும், தன் அம்மா நன்றாக அலங்கரித்துக் கொள் சமையலறையை கைப்பற்றிக் கொள் என்று தனக்கு அறிவுறுத்தியதாகவும், சிறு வயதில் 3கிலோ ஆட்டா பிசைந்ததனால் கை ரத்தம் கட்டியதாகவும் தன் வாழ்வின் நிகழ்வுகளை கடைசி மருமகளிடம் தன்னை மீறிய நிலையில் சொல்லிக் கொண்டே வருகிறாள்.
தன் முதல் மகன் மாடியில் இருந்து தவறி விழும் போது தான் சமையலறையில் இருந்ததாகவும், அவன் இறப்பு சடங்குகள் முடிந்த பிறகு வந்து மீதமான பூரிகளை பொறித்ததாகவும் எந்த உணர்வுமற்ற குரலில் கூறுகிறாள். அதை கேட்டு அதிரும் இளைய மருமகள் அவள் காதருகில் குனிந்து இந்த நகைகளுக்கும் புடவைக்கும் அடியில் இருக்கும் உண்மையான ஜீஜியின் விருப்பங்களை கண்டடைந்து அதை நோக்கி இந்த சமையலறையில் இருந்து விடுபட்டு போகுமாறு கூறுகிறாள். தனக்கென பிடித்தவை எவையென்றே ஜீஜிக்கு தெரியவில்லை. அவள் மன ஆழத்தில் சென்று அவளையே கண்டடையுமாறு மருமகள் உரைப்பதுடன் முடிகிறது சிறுகதை.
இதுவரை இக்கதையினை நிறைய முறை படித்திருக்கிறேன். முதன்முறையாக உணர்ந்த அதே மனப்பாரத்தை ஒவ்வொரு முறையும் உணர்கிறேன். ஒவ்வொரு முறையும் இக்கதையுடன் பொறுத்தி பார்க்க எனக்கு தெரிந்த பெண்கள் நினைவில் வந்துக் கொண்டே இருக்கிறார்கள்.
சமையலறையுடனான பெண்கள் பந்தம் நம் சமூகத்தில் உணர்வு சார்ந்து கட்டமைக்கப்பட்டு விட்டது. ஆதலால் அந்த அமைப்பிலிருந்து சிறிது பிசகி இளைப்பாறுதல் கூட பெண்களை குற்றவுணர்வு கொள்ள செய்து விடுகிறது.இது மாறும் என்பதை விட மேம்பட்டு பரிணாமிக்கும் என்றே தோன்றுகிறது. செயல்கள் இலகுவாகலாம் ஆனால் முற்றொழிய வாய்ப்பில்லை.எத்தனை தூரம் பறந்தாலும் பெரும்பாண்மையான இந்திய பெண்களின் வேர்கள் வீடுகளிலே நிலைக் கொள்கின்றது.