Wednesday, September 15, 2021

நீட் தற்கொலைகள் தவறான முடிவு

 

அரசியல் என்பது எப்போதும் நிகழ்ந்து கொண்டிருப்பது.  அதில் ஆயிரம் மாற்றங்கள் வரும்.  ஆனால் மாணவர்களின் கடமை என்பது அவர்களுக்கு முன்னால் தரப்பட்டிருக்கும் பாடத் திட்டத்தை படிப்பது மாத்திரமே. 

 இல்லாவிடில் வேறு பாடத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  இல்லை மிகப் பெரிய அநீதி இழைக்கப் படுகிறது என நினைத்தால் அன்று இந்தி எதிர்ப்புக்காக மாணவர்கள் களம் இறங்கி போராடியது போல் களமிறங்க வேண்டும்.

 தற்கொலை செய்து கொள்வது எந்த வித த் திலும் ஆதரிக்க தக்கதல்ல.  பெற்றோர்கள் கல்வியாளர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். 

 குழந்தைகளுக்கு விருப்பமில்லாத கல்வியை அல்லது அவர்களால் முடியாது என அச்சப்படும் கல்வியை அவர்கள் அடைந்தே தீர வேண்டும் என்று நிபந்தனை விதிக்காதீர்கள்.  பிள்ளைகளில் சிலர் மருத்துவர்களாகா விட்டால் நட்டமொன்றுமில்லை.  ஆனால் அனைத்து குழந்தைகளும் தங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும்.

தோழர் எனும் சொல்

 *தோழர் என்ற சொல்*


*1400 -ஆண்டுகளுக்கு* *முன் உருவான உறவும்,  *வார்த்தையும்தான்*  *"தோழர்"*. 


ஆண்டான் அடிமைக் காலத்தில் அடிமை முறையினை ஒழிக்க, ஆதிக்கத்தில் இருந்த திருச் சபைக்கும், அரசனுக்கும் எதிராக கலகம் செய்த கலகக்காரர் , சிலுவையில் ஏற்றி   கொல்லப்பட்ட புரட்சியாளர்  *"இயேசு"* கூட தன்னுடன் இணைந்து நின்ற சக போராளிகளை *"சீடர்கள்"* என்று  குறிப்பிட்டதாகவே வேதாகமம் கூறுகிறது. 


14-நூற்றாண்டுகளுக்கு முன் பாலைவன காட்டரபிகளின் மனிதத்துக்கெதிரான அடிமை முறை, பெண்ணடிமைத்தனம், விபச்சாரம், வட்டி போன்ற சமூகக் கொடுமைகளையும், சிலை வணக்கம் போன்ற மூடத்தனங்களையும்  எதிர்த்து நின்று, ஆயுதமேந்திய யுத்தத்தால்  ஒரு புரட்சிகர அரசினை நிறுவிய இறுதி நபி என அழைக்கப்படும் *முகமது நபியவர்கள்தான்* முதன் முதலாக  தன்னுடன் உறுதுணையாக நின்று போரிட்ட தம் சகாக்களை *"தோழர்கள்"* என்றழைத்தார்.


எங்கெல்லாம் சமூக கொடுமைகள் இருக்கிறதோ, எங்கெல்லாம் அடக்குமுறை அரசுகள், மக்கள் விரோத அரசுகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் அதை எதிர்த்த களத்திலே, மாற்றத்துக்கான போரிலே முன் நிற்பவர்கள் தம் உடன் நிற்பவர்களை *"தோழர்"* என்றழைப்பது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.. 

உலகம் முழுவதுமுள்ள மார்க்சிய சிந்தனையாளர்கள் தங்களை ஒருவருக்கொருவர் தோழர் என அவரவர் மொழியில் அழைப்பது  வெறும் அலங்காரத்துக்காக அல்ல... மாற்றுச் சிந்தனை கொண்டவர், பொதுநல சிந்தனையாளர்  என்பதன் அங்கீகாரம் அது. அம்பேத்கரிய, பெரியாரிய சிந்தனையாளர்களும் கூட தம் அரசியல் பயண சகாக்களை தோழர் என்றழைப்பதன் காரணமும் அவர்கள்  மனித நேய சிந்தனையாளர்கள், சமூக மாற்றத்துக்கான செயல்பாட்டாளர்கள் என்பதால்தான்.


*"தோழர்"* என்ற  உறவுச் சொல் கேட்டதும் யாருக்கெல்லாம் *காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது* போல் இருக்கிறதோ அவர்களெல்லாம் பெரும்பான்மை மக்களின் மீது தம் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளத் துடிக்கும்  ஆளும் அதிகார  கூட்டத்தவராகவோ, அல்லது அவர்களின் வால்  பிடித்து வாழும் கழிசடை அரசியலுக்கு முட்டு  கொடுப்பவராகவோதான் இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 


மக்களுக்காக வாழ்ந்து மடிந்த மாவீரர்கள் உயர்த்திப் பிடித்த *"தோழர்"* எனும் உறவை முன் நிறுத்துவோம். *உழைக்கும் மக்களிடம் எல்லையற்ற, எதிர்பார்ப்புகளற்ற  அன்பை பகிர்வோம்.*

Wednesday, September 1, 2021

குறளோவியம்

 குறளோவியம் - 

கலைஞர் மு. கருணாநிதி


காலை நேரம், புலவர் கபிலர், பசும் புல் ஒன்றைப் பார்க்கிறார். தரையுடன் ஒட்டிக்கிடக்கும் அந்தச் சிறிய புல்லின் நுனியில், திணையின் அளவைக் காட்டிலும் குறைவான ஒரு பனித்துளி யையும் அவர் காண்கிறார்.


 பனித்துளியை உற்று நோக்குகிறார்.  அந்த பனித்துளியின் அளவுக்குள் - ஆங்கருகே  ஓங்கி உயர்ந்து நிற்கும் பனைமரம் முழுவதும் தெரிகிறது! அந்தக் காட்சி கபிலரைக் கற்பனைச் சிறகடித்துப் பறக்கச்  செய்கிறது! "ஆகா! ஒரு சிறு பனித்துளிக்குள்ளே பக்கத்தேயுள்ள பனைமரம் முழுவதும் தெரிகின்றதே;


 இதே போலத்தான் வள்ளுவரின் குறட்பாவுக்குள்ளும் இந்த வையகத்துக்குத் தேவையான பெரும் பொருள் பொதிந்து கிடக்கிறது" என்கிறார். 


குர்ஆன், பைபிள், பகவத்கீதை போன்றவை, மார்க்க மத நூல்களாகப்  போற்றப் படுகின்றன! 


குறள், ஒரு குறிப்பிட்ட மதத்தின் அல்லது மார்க்கத்தின் வழி காட்டும் நூலாக இல்லாமல், பொதுவான வாழ்க்கை நெறி வகுக்கும் நூலாகத் திகழ்கிறது.