Wednesday, March 9, 2022

பெண்மை

 பெண்மை  - எஸ்.ராமகிருஷ்ணன்


''மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டுக்கு வேலை பார்க்க வந்த சிறுமியிடம், அந்த வீட்டின் உரிமையாளரான தாத்தாவும் பாட்டியும், 'நீ குடியிருக்கும் குடிசைப் பகுதியில் ஒரு சிறுமிக்கு ஒரு நாயை திருமணம் செய்து வைத்துள்ளார்களே, இது கேவலமாக இல்லையா’ என்று ஒரு கேள்வியைக் கேட்டார்கள். 'அப்படிச் செய்தால் என்ன தப்பு’ என்று அந்தப் பெண் கேட்டாள். '18 வயதுக்குள் திருமணம் செய்வது சட்டப்பூர்வமாக தப்பு’ என்று சொன்னார்கள். 'மனிதனைத் திருமணம் செய்தால்தான் தப்பு. நாயைத் திருமணம் செய்தால் தப்பில்லை. நாயைத் திருமணம் செய்தது நல்லதுன்னுதான் சொல்வேன். நாய் ஒருநாளும் குடித்துவிட்டு வராது. என்ன சமைத்துப்போட்டாலும் சாப்பிடும். அதை, இதை சமைத்துப்போடு என்று சொல்லாது. அதற்குச் சாப்பாடு போட்டால் விசுவாசத்தோடும் நன்றியோடும் இருக்கும். ஆனால் மனிதர்கள் அப்படி இல்லையே!


படித்தவர்களுக்கு நாங்கள் செய்வது தவறாகத் தெரியும். மழை வருவதற்காக எங்கள் பகுதியில் செய்யப்பட்ட சடங்கு அது. அதைத்தான் பேப்பரில் கல்யாணம்னு போட்டிருக்கிறார்கள. இந்தியாவில் நடக்கும் சடங்குகளில் இதுவும் ஒன்று. அவ்வளவுதான், அது நிஜமில்லை. செய்தால் என்ன தவறு என்று பெண்களை யோசிக்க வைக்கின்ற சமூகமாக இந்தியா இருக்கிறதென்றால், அதற்கு ஆண்கள்தான் வெட்கப்பட வேண்டியதே தவிர, பெண்கள் அல்ல..!’ என்று சொன்னாள் அந்தப் பெண். அந்தத் தாத்தாவும் பாட்டியும் அமைதியாகிவிட்டார்கள்.


பெண்கள் கல்வியிலும், அறிவிலும் இயற்கையாகவே மேலோங்கி இருந்தார்கள். 'பாஸ்கரா’ என்ற கணிதமேதை இருந்தார். அவர் மகள் பெயரில் புத்தகம் எழுதியிருந்தார். புத்தகத்தின் பெயர் 'லீலாவதி.’ லீலாவதி கேட்ட கேள்விகளையும் பதில்களையும்தான் அவர் புத்தகமாக வெளியிட்டார். அறிவிலும், கணிதத்திலும் உயர்ந்த ஞானம்பெற்ற பெண்ணாக இருந்தாள் லீலாவதி. அப்படிப்பட்ட பெண்ணுக்கு அந்தக் காலத்தில் புத்தகம் எழுத அனுமதியில்லை என்பதால் பாஸ்கராவே அந்தப் புத்தகத்தை எழுதினார். புத்தகத்தை வெளியிடத் தடை போட்டார்கள். 'கணித சூத்திரம்’ என்றுதான் வெளியிட வேண்டும். உன்னுடைய பெண்ணின் பெயரில் வெளியிடக் கூடாது. 'கணிதத்தில் சிறந்தவள்’ என்ற அடையாளமே இருக்கக் கூடாது’ என்று சொன்னார்கள். எங்கே இந்த இந்திய சமூகம் லீலாவதியை அங்கீகரித்துவிடும் என்பதற்காக இன்னொரு மாபெரும் வேலையைச் செய்தார்கள். அந்தப் பெண்ணுக்கு ஜாதக தோஷம், திருமணமே நடக்காது. அதனால் ஏங்கிப்போன மகளுக்கு ஆறுதலாக ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார் என்று ஒரு கட்டுக்கதையைச் சொன்னார்கள். ஒரு பெண்ணுக்கு ஜாதக தோஷம் என்று சொல்லிவிட்டால் அத்தனை அறிவும் ஒன்றுமே இல்லாமல் போய்விடுகிறது. ஏன் இந்திய சமூகம் பெண்ணை, ஓர் அடிமைத்தனமாக வீட்டுக் கணக்கு, பால் கணக்கு எழுத வைத்திருக்கிறது. இந்தியப் பண்பாடு பெண்ணைக் கண்காணிப்பதிலும் அடக்குமுறைபடுத்துவதிலும் அறிவை மட்டுப்படுத்துவதிலும்தான் இருக்கிறது.


பெண்கள் சுடிதார் அணிந்திருக்கிறீர்கள். இந்த உடையை முதன்முதலில் அணிந்த பெண் யார் தெரியுமா? அதுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றை நான் தேடிப் பார்க்கும்போது ஆச்சர்யமான உண்மை இருந்தது. அந்தப் பெண் ஔரங்கசீப்பின் மகள் ஜாஃபர்நிஷா. அவள்தான் சுடிதாரை முதன்முதலில் அணிந்தாள். குதிரை ஏற ஆசைப்பட்டாள் ஜாஃபர்நிஷா. தினமும் காலை குதிரை ஏறும்போது, குதிரையின் இரண்டு பக்கங்களிலும் கால்போட்டு உட்கார வேண்டும். குதிரையில் போகும்போது முகத்திலும், மார்பிலும் காற்று வீசும். முகத்தை மூடிகொள்வதற்காக துப்பட்டா அணிந்தாள். அந்த இரட்டை ஆடையைத்தான் நீங்கள் இப்போது அணிந்திருக்கிறீர்கள். அப்போது ஔரங்கசீப் சொன்னார், 'பெண்கள் ஆடை அணிவது அவர்களது செளகரியத்தைப் பொறுத்துத்தானே தவிர, பண்பாட்டை, கலாசாரத்தை ஒத்தது அல்ல..!’ என்று.


சுடிதார் ஜாஃபர்நிஷாவுக்கு எங்கேயிருந்து வந்தது? ரஷ்யாவில் வணிகம் செய்யக்கூடிய ரஷ்ய பெண்கள், வெளியூர் செல்லும்போது நிறைய ஆடைகளை எடுத்துப்போக முடியாததால் சுடிதாரை அணிந்தார்கள். ரஷ்யர்களிடமிருந்து ஔரங்கசீப் மகளுக்கு வந்தது. பின்னர், டெல்லிக்கு வந்து ஒவ்வோர் மாநிலமாகக் கடந்து தமிழ்நாட்டுக்கும் வந்தது. ஓர் ஆடைக்குப் பின்னால்கூட இந்தியாவில் பெரிய வரலாறு இருக்கிறது.


100 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்குப் பிரசவம் பார்ப்பதற்கு ஒரு பெண் மருத்துவர்கூட கிடையாது. ஆண் மருத்துவர்கள்தான் இருந்தார்கள். மருத்துவர்கள் இல்லாமல் கிராமத்தில் பெண் மருத்துவச்சிகள் மூலம் மருத்துவம் பார்க்கப்பட்டு நிறைய பெண்கள் இறந்துபோயிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் ஒரு பெண் தனியாக பள்ளியில் படித்து, தனியாகத் தேர்வு எழுதி 15 பேரில் தமிழ்நாட்டில் முதல் பெண் மருத்துவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. முத்துலெட்சுமி வகுப்பறைக்குப் போனால், 'இந்தப் பெண் டாக்டராகி என்ன செய்யப் போகிறாள், இவளுக்கு எதுவுமே கற்றுத்தராதீர்கள்’ என்று சொல்லி எதுவுமே கற்றுத்தர மாட்டார்கள். ஆனால் முத்துலெட்சுமி, வீட்டிலும் நூலகத்திலும் புத்தகங்களைப் படித்து அறுவைச் சிகிச்சை பாடத்தில் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் கோல்டு மெடல் வாங்கினார். கஷ்டப்பட்டு படித்து டாக்டராகிய முத்துலெட்சுமியை மருத்துவம் பார்க்கக் கூடாது என்று தடை விதித்தார்கள். பெண்ணிடம் வைத்தியம் பார்ப்பதா என்று ஏளனம் பேசினார்கள். ஏழை எளிய மக்களுக்கு வைத்தியம் பார்க்கலாமே என்று அரசு மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தார்.


இவரிடம் மருத்துவம் பார்க்க வரும் பெண்கள் முக்காடு போட்டுத்தான் வருவார்கள். மருத்துவரிடம் போவதே தெரியக் கூடாது. அதுவும் பெண் மருத்துவரிடம் போவது தவறு என்று கருதினார்கள். அதன் பிறகு சென்னை சட்டமன்ற உறுப்பினராகி தேவதாசி முறையை ஒழித்தார். பெண் கல்வியை சட்டமாக்கினார். பெண் சுதந்திரத்துக்குப் பாடுபட்டார். நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது இவருடைய வாழ்க்கையைத்தான்!''

No comments:

Post a Comment