மனிதர்கள் மிகவும் சுயநலம் மிக்கவர்களாக மாறிக்கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோமா?என்ற சந்தேகம் எனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது.
கவலைகளும்,துயரங்களும் மனித வாழ்க்கையில் புதிதானதோ, அரிதானதோ இல்லை. அது எதிர்கொள்ளும் நம்பிக்கையை இன்னொரு மனிதன் வழங்குவான் என்ற நம்பிக்கையில் தான் நாம் அத்தனையும் தாண்டி ஓடிக் கொண்டிருக்கின்றோம்.
அந்த நம்பிக்கையையும் பாதுகாப்பையும் இன்னொரு மனிதனுக்கு வழங்கும் இடத்தில் நாம் எப்போதும் இருக்கிறோம் என்பதை நாம் நிச்சயம் உணரத்தான் வேண்டும்.
தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட காலகட்டத்தில் நமது வாழ்க்கையும் கூட ஒரு இயந்திரமயமாகி விட்டது போலத்தான் இருக்கிறது.
தனிமை மீது ஒரு மனிதருக்கு இருந்த அச்சங்களும் ,வருத்தங்களும் மாறிப்போய் தனிமை மீது அத்தனை விருப்பத்துடனும் எதிர்பார்ப்புடன் இருக்கும் மனிதர்களை கொண்ட காலகட்டம் இது.
செல்லும் இடமெல்லாம் மனிதர்கள் தனித்தனியாகவே அமர்ந்திருக்கிறார்கள் ,தனித்தனியாக பாட்டு கேட்கிறார்கள், தனித்தனியாகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள் தனித்தனியாகவே சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு ஆழமான உறவே இங்கு யாருக்கும் யாருடன் இல்லையோ? என்று தோன்றுகிறது. ஒரு உறவின் மீது இயல்பாகவே வரக்கூடிய ஒரு பொறுப்புணர்வு அர்ப்பணிப்பு புரிதலும் யாருக்குமே இல்லை.
தன்னை தவிர தனது விருப்பங்களை தவிர வேறு எதுவும் பெரிதில்லை என்று நினைப்பதும் விளைவுகள் தான் இத்தனை முதிர்ச்சியற்ற உறவுகளும் அதன் நிமித்தம் வரும் சிக்கல்களும்.
இந்த வாழ்க்கை என்பது அப்படி சுய நலமாக வாழ முடிவதில்லை.நம்மீது பிரியத்துடன் உள்ளார்ந்த அன்புடன் இருக்கும் மனிதர்களை தவிர நாம் வேறு எதையும் பெரிதாக சம்பாதிப்பதற்கு இங்கு வரவில்லை.
நம்மை நெருங்கி இருக்கும் ஒரு மனிதர் கொடுக்கும் நம்பிக்கையால் மட்டுமே இந்த வாழ்க்கை நிமித்தம் பெறக்கூடிய பல்வேறு நெருக்கடிகளில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
எந்த அளவிற்கு அன்பையும் ,காதலையும் நாம் இன்னொருவரிடம் இருந்து எதிர்பார்க்கிறோமோ அப்படியே முழுமையாக நாமும் இருக்க வேண்டியது அவசியம். நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் அல்ல,உங்களது உடல் மொழியால் துயரத்தில் இருக்கும் உங்களுக்கு நெருக்கமானவருக்கு நினைவூட்டுவது அவசியம்.வெற்று அறிவுரைகளை விட உங்கள் உடல்மொழி அத்தனை முக்கியமானது.
மீளா துயரில் இருக்கும் ஒருவரை நோக்கி நீளும் உங்கள் கரங்களை விட இந்த உலகத்தில் புனிதமானது வேறொன்றுமில்லை.
புத்தகம்: மனம் ,மனிதன், சமூகம்
ஆசிரியர்: டாக்டர் சிவபாலன்
No comments:
Post a Comment