Thursday, February 2, 2023

வில்லோடு வா நிலவே

 நூல்: வில்லோடு வா நிலவே 

ஆசிரியர்: வைரமுத்து

 விலை:  ரூ. 200/-

வெளியீடு: சூர்யா லிட்டரேச்சர். 


இந்நாவலை பற்றி கவிஞர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். 

“ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சேர அரச குடும்பத்தில் வருணபேதம் வந்து புகுந்த வேளையில் அதை எதிர்த்தாடிய ஓர் இளைய சேரன் கதை! இதைக் கதையாகவும் வாசிக்கலாம், கவிதையாகவும் நேசிக்கலாம்”

என்கிறார். 


வரலாற்றில் தன்னை மிகவும் நெருடிய, கவர்ந்த ஓர் உண்மையை அடிப்படையாக வைத்து, கற்பனை கலந்து இந்த நாவலைப் படைத்திருக்கிறார் கவிஞர்.


சேரலாதன் பற்றிய அறிமுகமும், நற்செள்ளையின் வருணனையும், இருவருக்குமிடையேயான உரையாடல்கள் என திருப்பும் பக்கமெல்லாம் நம்மை அதன் போக்கில் ஈர்த்துக் கொள்ளும் நூல்.


 எடுத்துக் கொண்ட அனைத்து கதாப்பாத்திரங்களிலும் சரி், மடலேறுதல், போர் புரிதல், காதல் காட்சிகள், அரசியல் சூழ்ச்சிகள் போன்ற இடங்களிலும் சரி, தொடக்கம் முதல் முடிவு வரை வைரமுத்து அவர்களுக்கே உரித்தான எழுத்தாளுமையைக் கொண்டு , உரைநடையுடன் கூடிய கவிதையைக் கலந்து வாசிப்போரை கதைக் களத்திற்கே சென்று இரசிக்கும் படியாக காட்சிப்படுத்தியுள்ளார்.


மொழி, மண், இனம், நாகரீகம், காதல், காமம், சூழ்ச்சி, பண்பாடு, வரலாறு, வீரம், கொடை, நட்பு என புறநானூற்றில் வரும் ஒரு சில குறிப்புகளை வைத்து, வரலாற்றுக் கதையை வசீகரிக்கும் எழுத்துக்களால் நிரப்பியுள்ளார் இந்நூல் ஆசிரியர்.


சேரப்படைக்கும், கடம்பர்களுக்கும் ஏற்பட்ட போரில் வெற்றி பெற்றவர் யார்?, நச்செள்ளையின் குடும்பத்தினரின் மரணத்திற்கான பிண்ணனி மற்றும் சூழ்ச்சி என்ன?, நச்செள்ளை சேரலாதன் காதல் கைகூடியதா? வருணாசிரம விதிகளைத் தாண்டி நச்செள்ளையை அரச குடும்பம் ஏற்றுக்கொண்டதா?, என்ற பல வினாக்களின் விடையாய் கவிப்பேரரசர் வைரமுத்து அவர்களின் கைவண்ணத்தில் படைக்கப்பட்ட வரலாற்று நூல்தான் "வில்லோடு வா நிலவே".


வஞ்சியை ஆண்டுவரும் மாமன்னன் செங்குட்டுவனின் இளைய தம்பியும், தொண்டி நகரின் மன்னனுமான சேரலாதன் , சேரத்தளபதியும் தன் உயிர் நண்பனுமான உம்பற்காடன் மூலமாக, அழகின் மொத்த உருவமாக இருக்கும் நச்செள்ளை என்னும் கதை நாயகியை அறிகிறான்.


பெண்ணிய இலக்கணத்திற்கு அடையாளமாகவும், தாய், தந்தையின் கொடிய மரணத்திற்கு வஞ்சி அரசர்களை பழிதீர்க்கும் பண்புடன் கொல்லன் குடி மலையனாள் வளர்க்கப்பட்ட வீரமங்கை நச்செள்ளை. தமிழ் புலமையில் பெரும் திறமை பெற்று , அரசையும் அரச குலத்தையும் மட்டும் எக்காரணம் கொண்டும் பாடமாட்டேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு  வரும் பாவை. 


நச்செள்ளை(காக்கைப் பாடினியார்) என்னும் தமிழ்ப் பேரழகியைக் காண சேரலாதன் , மன்னனாக அல்லாமல் சாதாரண குதிரை வீரனாக , வேட்டையின் போது அம்பாரியைத் தொலைத்து அதைப் பெறுவதைப் போல் கொல்லன்குடி மலையனின் இருப்பிடத்தை நோக்கி புறப்பட்டவன், பெண்கவியான நச்செள்ளையை காண்கிறான். அவள் தோற்றத்தில் மயங்கி அவனையறியாமல் மனதைத் தொலைக்கிறான் சேரலாதன் 


அடிக்கடி சந்திக்கும் சூழ்நிலைகளை ஏற்படுத்தி தனது காதலை நச்செள்ளையிடம் வெளிப்படுத்துகிறான் சேரலாதன். ஒவ்வொரு முறையும் காதல் இருந்தும் அதை காட்டிக் கொள்ளாமல் சினம் கொண்டு மறுக்கிறாள் நச்செள்ளை.  மன போராட்டங்களுக்கிடையே நடப்பதறியாமல் தவிக்கும் நச்செள்ளை சேரலாதன் மடலேறுவதைக் கண்டு அண்ணணையும் எதிர்த்து காதலை ஏற்கிறாள். அடுத்த கனம் கண்முன்னே அண்ணன் மலையனின் தலை துண்டிப்பை காணும் அவலம். அதே சமயம் போருக்கு ஆயத்தமாக வேண்டிய சூழ்நிலை சேரலாதனுக்கு.


மறுபக்கம் அரச குலத்தில் பிறக்காத குலபெண் பட்டத்தரசியாக கூடாது என்பதற்காக அவளை கொல்ல எத்தனை எத்தனை சூழ்ச்சிகள்.  குலபெருமை அரசமரபு குலத்திற்கே இழுக்கு என அரசனையே பலிகொடுக்க நடக்கும் சூழ்ச்சியில் உயீர் தோழன் உம்பற்காடன்.. வில்களை மார்பில் தாங்கி மன்னனுக்காக உயிர் துறக்க.....


உயிரற்ற நண்பனின் உடலை சுமந்து அந்த உடலோடு தன் மணிமுடியையும் தன் அண்ணன் செங்குட்டுவனிடம் ஒப்படைத்து அரச பதவிகளை துறந்து காதல் மனைவி நச்செள்ளையுடன் கானகம் சேர்கிறான் மன்னன் சேரலாதன்.


கதை முழுவதும் அழகிய தமிழ்ச் சொற்றொடர்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. அவற்றும் சில  ....


"நித்தம் விரிவடையும் சேர அரசின் பரப்பாய் எத்தனை அழகாய் விரிகிறது உன் சித்திரவிழி..."  


"தாய்மண் மீது அவ்வளவு பற்றா உங்களுக்கு ? " " என் தாயை தந்த மண் என்பதால் ஒரு மடங்கு பற்று. இந்தத் தமிழையும் தந்த மண் என்பதால் இரு மடங்கு பற்று !"


"பழுத்த பழங்களையும் வெடித்த மலர்களையும் அணில்களும் வண்டுகளும் அப்படியே விடுவதில்லை. அணிலுக்கு பழத்தின் மீது அன்பொன்றுமில்லை. வண்டுக்கு மலர் மீது வாஞ்சை ஒன்றுமில்லை. எப்படியேனும் குடிக்க வேண்டும்"    


"குவளைக் கண்கள்; வள்ளைக் காது;எட்பூ மூக்கு;செண்பகத் தோள்கள்; தாமரைத் தனங்கள்;முல்லைப் பற்கள்; காந்தள் விரல்கள்;"


"நீ என்னை கவிதை எழுதச் சொல்லும் கவிதை. எங்கே என் கவிதையே! ஒரு கவிதை சொல்."


"அவசரப்படாதீர்கள், மழைத்துளியை மறைத்து வைத்திருக்கும் மேகம்தான் இடியையும் எங்கோ ஒளித்து வைத்திருக்கிறது."


"நெருப்பு என்பது வைத்தவுடன் பற்றிக்கொள்கிறது. கண்ணீர் என்பது பார்த்தவுடன் தொற்றிக்கொள்கிறது."


எல்லா மீறல்களும் குற்றங்கள் அல்ல. மழைத்துளிகள் மேகத்தை மீறினால் பூமிக்கு நன்மை என்று பொருள்.


"இந்தக் காதல் வயப்பட்டவனுக்கெல்லாம் மொழி எப்படியோ வயப்பட்டு விடுகிறது அறிவு வயப்படுவதில்லை."


"தொண்டி கடற்கரையின் அலைகள் கிளிஞ்சல்களை தூக்கி எறிவது போல் நான் அரச பதவியை இங்கே இப்போதே கழற்றி எறிகிறேன்."


நிச்சயம் படியுங்கள். தமிழின் சுவை நூலெங்கும் சிதறி கிடக்கிறது.

No comments:

Post a Comment