Saturday, August 28, 2021

 குறளோவியம்  

-  கலைஞர் மு. கருணாநிதி


அதிகாரம் - 110    குறிப்பறிதல் ;

பாடல்கள் - 1091, 1094


வைத்தியர் ஊசி குத்துகிறார்;

உடலில் வலி ஏற்படுகிறது.  

ஆனால் அந்த ஊசி வழியே 

உடலுக்குள் செல்கிற மருந்து, 

நோய் தீர்க்கப் பெரிதும் உதவுகிறது. 


வைத்தியரிடம் வேதனை தரும் ஊசியும் இருக்கிறது; நோய் வேதனையை நீக்கும் மருந்தும் அதனுள் இருக்கிறது!.  


இதனை ஓர் அழகிய பெண்ணின் இரு விழி பார்வையுடன் ஒப்பிடுகிறார்.  ஒரு விழி பார்வையால் அவனுக்கு வேதனை உண்டாக்கினாள். மறு விழி பார்வையால் அந்த வேதனையை போக்கினாள் என அவளின் பார்வையின்  சிறப்பை கீழ்கண்ட குறளின் மூலம் விளக்குகிறார். 


"இருநோக்கு இவளுன்கண் உள்ளது ஒரு நோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து"


அப்படி அவள் பார்க்கிறாளே  என்பதற்காக  அந்த இளைஞன் வாளாதிருந்து விட்டானா என்ன? அவனோ ஓர் வம்புகார இளைஞன், காதல் மயக்கத்தில் என்னென்ன சொல்கிறான் பாருங்கள்:


" நான் அவளை பார்க்கும் போது என்னை பார்க்காமல் நிலத்தை பார்கிறாள். நான் அவளை பாராதிருக்கும்போது என்னை பார்த்து மகிழ்கிறாள் " என்று கூறுகிறான்.  இது எவ்வளவு பெரிய பொய் பாருங்கள்;


இவன்தான் அவளை பார்க்கவில்லையே பின்னர் அவள் இவனை பார்ப்பது மட்டும் இவனுக்கு  எப்படி தெரியும்? அதேபோல் இவன் அவளை பார்க்கும் போது நிலத்தை நோக்குகிறாளாமே ; அது  எப்படி? இவனை பார்த்து விட்டு தானே அவள் வேறு பக்கம் நோக்கி திரும்ப முடியும்?  


இந்த பார்வைக்குத் தான் 'பார்க்காமல் பார்க்கும் பார்வை' என்று பெயர் போலும் என்கிறார். 


அவர்கள் கண்களை வேறு பக்கம் திரும்ப அவர்களே முயன்றாலும் அது முடியாமல் ஒருவரையொருவர் பார்த்து கொள்கிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறார் வள்ளுவர் கீழ்க்கண்ட குரளில் 


"யான்நோக்குங் காலை நிலன்நோக்கும்       நோக்காங்கால் 

தான்நோக்கி மெல்ல நகும்"


(மெல்ல நகும் - உள்ளுக்குள் மகிழ்ச்சி யடைவாள்) 


இக் குறளோவியத்தில் கலைஞரின் கற்பனை வளம் மிக அபாரமாக உள்ளது. அனைத்து வயதினரையும் வசீகரிக்கும் விதத்தில் உள்ளது. வாசிக்கும் போது குறளோவிய காட்சிகள் கண்முன்னே நிகழ்வது போன்று  தோன்றுகிறது..

 குறளோவியம் - கலைஞர் கருணாநிதி


வெகு நாட்களாக தேடி கிடைக்காத பொக்கிஷமான இந்நூல் 26 ஆம் ஆண்டின் திருமண நாள் பரிசாக என் கணவரிடமிருந்து இன்று கிடைத்தது.


 நூலை வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து கீழே வைக்க இயலவில்லை. இந்நூலில் 300 குறளோவியங்கள் இடம் பெற்றுள்ளன. 354 குறட்பாக்கள்  பயன்படுத்தி இருக்கிறார். 


 திருக்குறளுக்கு எவ்வளவோ பேர் உரை எழுதி இருந்தாலும் கலைஞர் அவர்களின் அற்புதமான கற்பனா சக்தி நிறைந்த கதைகளுடன் பகுத்தறிவு சிந்தனை கலந்த இக்குறளோவியம் படிப்போர் மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதோடு  மட்டுமல்லாமல் பசுமரத்தாணி போல் பதிந்து போய்விடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. 


 நான் வாசிக்கும் இந்நூலின் சிறப்புகளை நாளை முதல் முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Thursday, August 26, 2021

புத்தனாவது சுலபம் - எஸ். ராமகிருஷ்ணன்

 


சிறுகதை என்பது நீந்திக் கொண்டிருக்கும் மீனைச் சித்திரம் வரைவது போன்றது, அது ஒரு சவால் என்று தோழர் எஸ். ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 பல சிறுகதைகள் உள்ளடக்கிய இந்த நூல் 'புத்தனாவது சுலபம்' . 

வேறுபட்ட கோணங்களில் எழுதியிருக்கிறார், ஒவ்வொரு சிறுகதையின் முடிவிலும் நெஞ்சைத் தொடும் கனமான ஒரு கிளைமேக்ஸ் வைத்து எழுதியுள்ளார். 


'இரண்டு குமிழ்கள்' எனத் தொடங்கும் சிறுகதை கைதி சபீனா மற்றும் பெண் போலிஸ் நிர்மலா பற்றிய ஒரு தொடர் என்று சொல்லலாம். செய்யாத குற்றத்திற்காக சபீனாவை கோர்ட்டு வரை கொண்டு செல்வார்கள். மிக அழகான மனதை தொட்ட கதை. 


'பொய்த்தொண்டை' சிறுகதையில் வரும் வைத்தி அண்ணா கதை சில உண்மையான நிகழ்வுகளை நினைவுக் கூறியது . படித்ததில் பிடித்தது மற்றும் வைத்தி அண்ணாவிற்கு ஏன் இந்த நிலை என்று வருந்தும் அளவுக்கு இருந்தது. 


இறுதியாக காதலின் பிடியில் சிக்கிய கோகிலவாணியின் கதை, காதலித்தவனும் கிடைக்காமல், தன்னைக் காதலித்த ஒருவன் கொண்ட அன்பினால் ஆசிட் வீசும் அளவிற்கு பரிதாபமான நிலையை அடைகிறாள் கோகிலவாணி. 


 காதல் என்றால் வசை, அடி, உதை, எரிப்பு, கொலை இவைதான் காதலின் சின்னங்களா? வன்முறையில்தான் காதல் வேர் ஊன்றியிருக்கிறதா? என்ற நினைவுடன் ரயிலின் பயணத்தில் இருட்டிற்கு கண்கள் முளைத்து அவள் அழுவதைப் பார்த்துக்கொண்டே செல்கின்றன இரண்டு மின் மினிப்பூச்சிகள். 


இளவம்பஞ்சு ஒருபோதும் காற்றைக் கண்டு பயப்படுவதில்லை. அது மரத்திலிருந்து விடுபட்டுப் பறக்கிறது. அந்த விடுபடலை யாராலும் தடுக்கவே முடியாது. காற்றில் பறந்து உலகின் முடிவற்ற நிலப்பரப்புகளை நோக்கி அது பயணிக்கிறது. 

பிள்ளைகளும் அப்படித்தான். அவர்களுக்கு வீடு போதுமானதில்லை. உலகை நோக்கி பறந்து போகவே செய்வார்கள். அதைத் தந்தையால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு தந்தையும் புத்தனை பாதுகாத்த தந்தையைப் போல உலகிடமிருந்து பிள்ளையைப் பாதுகாக்கவே செய்கிறான். ஆனால் உலகம் தான் கடைசியில் வெல்லுகிறது. 


இந்த நூலில் அமைந்துள்ள அனைத்து சிறுகதைகளும் ஏதோ ஒன்றை சொல்லிக்கொடுக்கும். 


எப்படி இந்த சமூகத்தில் பெண் பிள்ளைகள் தன்னை பாதுகாத்துக் கொள்கிறார்கள். அவர்களின் நிலை, வாழ்க்கை முறை, தைரியமான நடை, சில நேரங்களில் நினைக்கத் தோன்றும் முதிர்ச்சி அடைந்த குணத்துடன் முன்னேறி செல்கிறார்கள் என்று. 


அவரவர் வாழ்க்கையில் நிகழும் சின்னச் சின்ன நிகழ்வுகளை எவ்வாறு  கடந்து செல்ல வேண்டும் என்ற ஒரு முழு உணர்வு ஏற்படும் கதைகளின் இறுதியில். மிக அருமையான நூல். படித்ததில் மகிழ்ச்சி. 


டாக்டர். வெ. இறையன்பு


இவரது படைப்புகளுக்கே தனி புத்தகம் போட வேண்டும் கடினமான பணியிலும் இவ்வளவு எழுத்துக்கள்.. நவீன கால சிற்பி..

சகல கலா வல்லுனர்...


வெ. இறையன்பு (Dr V. Irai Anbu, IAS) என்பவர் ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார். எழுத்தாளர், கல்வியாளர், தன்னம்பிக்கை பேச்சாளர் என இவருக்கு பல முகங்கள் உண்டு.


நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்த இறையன்பு பள்ளிக்காலம் தொட்டே அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தன்னை மாற்றிக்கொண்டார்.


இவருடைய திறமை மற்றும் அனுபவம் காரணமாக நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின்னால் அதன் மறுசீரமைப்புப் பணிகளைக் கையாளுவதற்காக அந்நாட்டு திட்டக்குழுவின் ஆலோசகராக அழைக்கப்பட்டார்.


2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் நாள் மு. க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இறையன்பு தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.


விவசாயத்தில் இளங்கலைப் பட்டம்

வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம்

ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம்

தொழிலாளர் மேலாண்மையில் முதுகலைப் பட்டம்

உளவியலில் முதுகலைப் பட்டம்

வர்த்தக நிர்வாகத்தில் முனைவர் பட்டம்

ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம்

மேலாண்மையில் முதுமுனைவர் பட்டம்

இந்தி மொழியில் பிரவீன்

சமஸ்கிருதத்தில் கோவிதஹா

விவசாய இளங்கலைப் பட்டத் தேர்வில் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.

1987-இல் நடைபெற்ற குடியுரிமைப் பணித் தேர்வில் அனைத்திந்திய அளவில் 15-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்தார்.

 

இவரது படைப்புகள்


இலக்கியத்தில் மேலாண்மை

ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்

படிப்பது சுகமே

சிற்பங்களைச் சிதைக்கலாமா

பணிப் பண்பாடு

ஆத்தங்கரை ஓரம்

சாகாவரம்

வாய்க்கால் மீன்கள்

நரிப்பல்

Steps to Super Student

சிம்மாசன சீக்ரட்

துரோகச் சுவடுகள்

ஏழாவது அறிவு பாகம்-1

ஏழாவது அறிவு பாகம்-2

ஏழாவது அறிவு பாகம்-3

அரிதாரம்

ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்

பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்

அழகோ அழகு

சின்னச் சின்ன வெளிச்சங்கள்

உள்ளொளிப் பயணம்

ஓடும் நதியின் ஓசை பாகம்-1

ஓடும் நதியின் ஓசை பாகம்-2

மென்காற்றில் விளை சுகமே

முகத்தில் தெளித்த சாரல்

முடிவு எடுத்தல்

நேரம்

காகிதம்

வனநாயகம்

வரலாறு உணர்த்தும் அறம்

ஆர்வம்

ஆணவம்

மருந்து

மழை

திருவிழாக்கள்

இணையற்ற இந்திய இளைஞர்களே

ரயில் பயணம்

விவாதம்

பொறுமை

எது ஆன்மிகம்

வாய்க்கால் மீன்கள்

பூனாத்தி

வேடிக்கை மனிதர்கள்

முதல் தலைமுறை

நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும்

வாழ்க்கையே ஒரு வழிபாடு

சறுக்கு மரம்

உழைப்பால் உயர்வோம்

சின்னச் சின்ன மின்னல்கள்

திருப்பாவைத் திறன்

திருவெம்பாவை

அன்புள்ள மாணவனே

உச்சியிலிருந்து தொடங்கு

தர்மம்

இயற்கை

மலர்கள்

முதிர்ச்சி

நட்பு

தரிசனம்

சந்தித்ததும் சிந்தித்ததும்

Ancient Yet Modern – Management Concepts in Thirukkural

சுய மரியாதை

இல்லறம் இனிக்க

எது சரியான கல்வி

அச்சம் தவிர்

அவ்வுலகம்

நின்னிலும் நல்லன்

போர்த்தொழில் பழகு

பத்தாயிரம் மைல் பயணம்

வையத் தலைமைகொள்

சிதறு தேங்காய்

வியர்வைக்கு வெகுமதி

மேலே உயரே உச்சியிலே

மனிதன் மாறிவிட்டான்

உன்னோடு ஒரு நிமிஷம்

எப்போதும் இன்புற்றிருக்க

உலகை உலுக்கிய வாசகங்கள்

கேள்வியும் நானே பதிலும் நானே

செய்தி தரும் சேதி

Comparing Titans – Thiruvalluvar and Shakespeare

Random Thoughts

Effective Communication : The Kambar Way

கல்லூரி வாழ்க்கை

நினைவுகள்

பிரிவு

சேமிப்பு

சிக்கனம்

சுத்தம்

தாமதம்

தவம்

தூக்கம்

உடல்

காதல்

கருணை

தனிமை

வாழ்க்கை

வைராக்கியம்

அழகு

நம்பிக்கை

மூளைக்குள் சுற்றுலா

காற்றில் கரையாத நினைவுகள்

நமது அடையாளங்களும்

நளினி ஜமீலா - ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை

 


 

புத்தகம்: நளினி ஜமீலா - ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை

எழுத்தாளர்: தமிழில் குளச்சல் மு.யூசுப


சாதாரணமாக ஒருவரின் சுயசரிதைகளை படிக்கும் போது அவரை போல் வாழ தோன்றும்... உத்வேகம் பிறக்கும். ஆனால் நளினி ஜமீலாவை படிக்கும் போது இந்த சமூகத்தின் மீதான கோவம் அதிகரிக்கும். தலைசாய்ந்து படுத்து தூங்க ஒரு முழம் இடம் கூட இல்லாத ஒரு பாலியல் தொழிலாளியின் கண் வழியே இந்த சமூகம் விரியும். பெண்கள் எவ்வளவு கொடூரமாக அடிமைப்படுத்தப்பட்டு கிடக்கிறார்களென்பதை போகிற போக்கில் சாதாரணமாக நம்மில் கடத்தியிருப்பார்.


இன்று மெத்த படித்தவர்கள் அதிகம் இருக்கும் கேரளாவில் விதை நெல்லுக்கும், அறுவடை நெல்லுக்கும் கணக்குப் பார்க்கும் அளவிற்கு பெண் படித்தால் போதும் என்ற குடும்பத்தில் பிறந்தவர் நளினி ஜமீலா. வாய்ப்புகள், வசதிகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவருக்கு படிப்பு என்பது எட்டாக்கனியாகவே இருந்தது.

 அவருடைய அண்ணன் படிப்பதைப் பார்த்து குடும்பத்தில் இருப்பவர்களிடம் சண்டை போட்டுதான் பள்ளியில் சேர்ந்தார். அதுவும் மூன்றாவது வரை மட்டுமே அவரால் படிக்க முடிந்தது. தந்தையின் ஊதாரிதனம், இயலாமையால் சொந்தவீட்டிலேயே ஒண்டிக்குடித்தனம் நடத்தினர் அவருடைய பெற்றோர். அதனால் படிப்பு அவளுக்கு கனவாகவே போய்விட்டது.  ஒவ்வொரு முறை பள்ளிக்கூடத்தை கடக்கும் போதும் அவர் கண்ணில் தாரை தாரையாய் கண்ணீர் கொட்டும். இயலாமை ஆற்றாமை வெளிப்படும். தந்தையின் செயல்பாடுகளால் அதிகமான கடன் ஏற்பட்டு அவருடைய அண்ணனால் ஏமாற்றப்பட்டு வெளியேற்றப்படுவார்கள். 

குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற சூழலில் மண் வேலைக்கு செல்வார். கிடைக்கும் வீடுகளில் எடுபிடி வேலைகள் செய்வார் . ஒருமுறை நண்பர்கள், நன்கு அறிந்தவர்கள் வீட்டுக்கு செல்லும்போது அவர்களின் உறவினரும் அண்ணனின் ஆசிரியருமான நபர் நளினி ஜமுனாவுக்கு பாலியல் தொல்லை தருவார். யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டுவார். அதன்பின் அந்த வீட்டிற்கு செல்லவே அச்சம் ஏற்படும். வீட்டு வேலையை விடுகிறார். அதற்கான காரணத்தையும் அந்த குடும்பத்தில் இருந்தவர்களுக்கு சொன்னார். ஆனால் நளினி ஜமீலா மீதே குற்றம் திரும்பியதும்.


அறிவு உண்மையை ஆராய்ந்துவேலையை விடவைத்தாலும் வயறு சும்மா இருக்காதே.. மீண்டும் வேலைக்கு செல்கிறார். அங்கேயும் அவருக்கு பாலியல் தொல்லைகள் நின்றபாடில்லை. மண் வேலை செய்யும் இடத்தில் கிறிஸ்தவ பையன் ஒருவரை காதலிப்பார். அதனால் வீட்டில் பிரச்சனை ஏற்படும். ஒரு வேளை திண்பதற்கு சோறு இல்லை என்றாலும் சாதி மதம் முக்கியமாக இருக்கும்.  அந்தளவிற்கு மதம் , சாதி மனிதனை பழக்கி வைத்துள்ளது என்பதை இந்த இடத்தில் உணரமுடியும். காதலித்த பெண்ணுக்காக காத்திருந்து காத்திருந்து பின் இரண்டு ஆண்டுகளில் அவன் தற்கொலை செய்து கொள்வான்.


வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து நளினி ஜமீலாவை குடும்பத்தினர் விரட்டுகின்றனர். வீட்டிலோ வறுமை தேகத்திலோ வழமை.. அதை பொறுக்க முடியாத சில பெண்களால் இவரின் பெயர் ஊர் முழுவதும் தவறாக பேச செய்கிறது. யாருடைய பேச்சையும் காதில் வாங்காமல் தனக்கு சரி என தோன்றுவதை மட்டுமே செய்வார். 18 வயதில் வீட்டை விட்டு வெளியேற்ரப்படுவார்.


போக்கிடமின்றி தன்னை காதலித்த ஒருவனை தேடி செல்வாள். அவன் வேலை செய்த இடத்தில் காத்திருப்பாள். அவன் வரமாட்டான். அவனுடைய நண்பன் உதவுவதாக கூறி வீட்டிற்கு அழைத்து செல்வான். அங்கு காதலின்  நண்பனுக்கு மனைவியாகும் சூழல் உருவாகிறது.


கணவன் ஒரு சாராய வியாபாரி. அவனோடு சேர்ந்து சாராயம் விற்கிறாள். குடிக்கு அடிமையான அவனின் அடியில் இருந்து தப்புவதற்கு இவளும் குடிக்க தொடங்குகிறாள். திருமணமான மூன்று ஆண்டுகளில் அவன் உயிர் இழக்கிறான். 

இரண்டு குழந்தைகளோடு பரிதவித்து நிற்கிறாள். ஆண் குழந்தை உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழக்க, குழந்தையை காப்பாற்ற கூட பணம் இல்லாமல் தவித்து வேதனையில் நிற்கிறாள். வேறு என்ன செய்வது என அவளுக்கு தெரியவில்லை . அவளுக்கு மூலதனம் அவளுடைய அழகு மட்டுமே . அதை வைத்து வியாபாரம் செய்யத் தொடங்குகிறார் . ஆம் பாலியல் தொழிலாளியாக மாறுகிறார்.


இந்த இடத்தில் அவர் மீது கோபம் வருவதற்கு பதில் என்மனம் அவர் மீது அனுதாபம்தான் கொண்டது. ஒரு தேவத்தூதன் வந்து அவரை காப்பாற்றி உதவி செய்திடமாட்டானா என்றுதான் கவலைக்கொள்ள செய்தது. 


கணவன் இறந்த பிறகு மிகப் பெரிய தொகையை கேட்டு நச்சரிக்கும் மாமியார்... விரட்டிவிட்ட குடும்பம்.. எங்கு சென்றாலும் சதைபிண்டமாக மட்டுமே பார்க்கும் சமூகம்.. இந்த பிரச்னைகளில் இருந்து விடுபட தோழி மூலம் பாலியல் தொழிலுக்குள் நுழைகிறார்.  அதன்பின் அவர் சந்திக்கும் பிரச்சினைகள்... தாயாய் மகளை கொஞ்சி மகிழ முடியாத இயலாமை...என சமூகத்தால் விரட்டி அடிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வலிநிறைந்த சாட்சியாய் இருக்கிறார் நளினி ஜமீலா. 


2006ஆம் நளினி ஜமீலாவின் சுயசரிதை வெளியான போது கேரளாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை எற்படுத்தியது. அதனால் அந்த புத்தகம் மீண்டும் திருத்தி எழுதப்பட்டது. சாதாரண பாலியல் தொழிலாளியின் கதை இந்த சமூகத்தை இந்தளவிற்கு பதற செய்ததற்கு என்ன காரணம்? அதிலிருந்த உண்மை..


ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என பல வரைமுறைகளை வைத்துள்ள இந்த சமூகம். ஒரு ஆண் எப்படி இருக்கக்கூடாது என்பதை ஒரு இடத்தில்கூட சொல்வதில்லை. 

எல்லா வேதனைகளையும் கடந்து ஒரு சாதனை பெண்ணாக துணிந்து இந்த சமூகத்தை எதிர்கொண்டிருக்கிறார். 

ஜூவாலாமுகி, A peep into the silenced ஆகிய குறும்படங்களை இயக்கியுள்ளார். பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவி, குறும்பட இயக்குனர், பெண்ணியவாதி, எழுத்தாளர் என பரிணாமித்து இன்று சமூகத்தில் கம்பீரமாய் வலம் வருகிறார் நளினி ஜமீலா. 

Sunday, August 22, 2021

இன்று எங்கள் திருமண நாள்

 காதலின் வெற்றி 

திருமணத்திலா இருக்கிறது 

இல்லை

உண்மையில் திருமணத்திற்கு 

பிறகான ஆயிரமாயிரம் 

சவால் களில் இருக்கிறது 

ஒருவர் துயரை மற்றொருவரிடம்

பகிர்ந்து கொள்வதில். 

குழப்பமான மனநிலையில்

பிரச்சனைகளில் உழலும் போது

ஒருவருக்கொருவர்

உறுதுணையாய்  நின்று 

மனோதிடம்  ஊட்டுவதில்  

மனத் தெளிவுடன் வாழ்வதில் உள்ளது

ஆயிரம் சவால்களை இன்முகத்துடன்

எதிர்கொண்டு உடைத்தெறிவதில்

பணம் சார்ந்ததல்ல வாழ்க்கை 

மனம் சார்ந்தென புரிந்து

மனத் தெளிவுடன் வாழ்வதில் உள்ளது

Sunday, August 15, 2021

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

 மொத்த வாழ்க்கையே வெறும் 29 வருஷம்தான்.. சினிமாவுக்கு பாட்டு எழுதியதோ 5 வருஷம்.. 180 பாட்டுக்கள்தான் எழுதியிருக்கிறார்.. வாழ்நாளில் மொத்தமாக ஈட்டிய காசு, ஒரு லட்சத்து சொச்சம்தான்.. இதுவே பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சுவடு.


படிப்பு ஒன்னும் பெரிசா இல்லை.. வறுமை ஒரு பக்கம் பிச்சு திண்ண, கிடைத்த வேலையை செய்திருக்கிறார்.. விவசாயம் பார்த்தார்.. மாடு மேய்த்தார்.. மாம்பழம் விற்றார்.. உப்பள தொழில் செய்தார்.. இப்படி 17 வகையான வேலை பார்த்துள்ளார்.. ஆனாலும் கையில் காசு தங்கவில்லை.. 


பிறகுதான், சென்னைக்கு கிளம்பி வந்து வாய்ப்பு தேடி, அதில் வெற்றியும் பெற்றார். மக்கள் திலகம் எம்ஜிஆர் நாயகனாக உருவெடுக்க காரணமாக இருந்தது சாட்சாத் பட்டுக்கோட்டையார்தான்!


"நாடோடி மன்னன்" படத்தை முதன்முதலாக டைரக்ட் செய்கிறார் எம்ஜிஆர்.. யார் யாரையோ வைத்து பாட்டு எழுதுகிறார்.. ஆனாலும் திருப்தி இல்லை. கடைசியில் பட்டுக்கோட்டையாரிடம், "உன்கிட்ட பாட்டு இருந்தா குடு கல்யாணம்" என்று கேட்டதுமே , ஒரு பாட்டை நீட்டுகிறார்.


அதில், "சும்மா கிடந்த நிலத்தை" என்று ஆரம்பித்து, "தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது, சிந்திச்சு முன்னேற வேணுமடி" என்ற வரிகளை படித்து பார்த்தார் எம்ஜிஆர்... பிறகு சிரித்துகொண்டே, "நீ ரொம்ப விவரம் கல்யாணம்.. என் காசுல உன் கட்சி கொள்கையை எழுதிடலாம்னு பார்க்கிறியா?" என்று கிண்டலாக கேட்டார்.


ஆனால் கடைசிவரை எம்ஜிஆர் இந்த கவிஞனை மறக்கவே இல்லை.. "என்னுடைய நாற்காலியில் நான்கு கால்களில் 3 கால்கள் யாருடையது என்று எனக்கு தெரியாது.. ஆனால், அதில் ஒரு கால் என் தம்பி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துடையது" என்று புகழ்ந்து கொண்டே இருந்தார்.


சென்னையில் ஒருநாள் இவர் பஸ்ஸில் போயிட்டிருந்தார்.. அப்போது வழியில் ஓர் இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, பழுது பார்க்கும் வேலை நடந்துள்ளது.. அதனால், சிவப்புக்கொடி ஒன்றும் நடப்பட்டிருந்தது...!


அதை பார்த்த கல்யாணசுந்தரம் அருகிலிருந்தோரிடம், ‘‘எங்கே எல்லாம் பள்ளம் விழுந்து அது மேடாக நிரப்பப்பட வேண்டுமோ, அங்கே எல்லாம் சிவப்புக்கொடி பறந்துதான் அந்த பணிகள் நடக்க வேண்டும் போலும்’’ என்றார்.


பாடல் எழுத தொடங்கும்போதெல்லாம், ‘வாழ்க பாரதிதாசன்’ என்று தலைப்பில் எழுதிவிட்டுத்தான் பாட்டு எழுதுவாராம்.. பாரதிதாசன் தலைமையில்தான் இவருக்கு கல்யாணமும் நடந்துள்ளது.


அன்றைய தினம், பக்தி, காதல், வீரம், என்றிருந்த சினிமா பாடல்களுக்கு நடுவில், புரட்சி, பொதுவுடைமை, முற்போக்கு, பகுத்தறிவு, போன்றவற்றினை புகுத்தி பாடல்களின் தடத்தையே மாற்றினார். 


இவர் சொல்லாத தத்துவம் கிடையாது.. சொல்லாத அறிவுரை கிடையாது.. எழுதாத காதல் கிடையாது.. மொத்தத்தில் அவர் இல்லாமல் தமிழே கிடையாது என்ற நிலை உருவானது!


ரொம்ப சிம்பிளான வார்த்தைகளை வைத்துதான் பாட்டு எழுதினார்.. ஆனால் அவைகளில், இனிமை, சிந்தனை சிதறல், அழகியல் நடை, கருத்துசெறிவு, உணர்ச்சி கொந்தளிப்பு, காதல் என அனைத்தையும் வஞ்சனையில்லாமல் நிரப்பி நிரப்பி தந்தார்..!


இவரது ஒவ்வொரு பாட்டும் தமிழகத்தின் தெருக்களிலும் திண்ணைகளிலும் வாசிக்கப்பட்டன - நேசிக்கப்பட்டன.


"குறுக்கு வழியில் வாழ்க்கை தேடும் திருட்டு உலகமடா" என்று அறுதியிட்டு சொன்ன தீர்க்கதரிசி!!  "இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனால் பதுக்கிற வேலை இருக்காது" என்று வர்க்க அரசியலை பேசிய மகான்!


இவரது ஒவ்வொரு வரிகளும் சமுதாய அவலத்தின் செவிற்றில் ஓங்கி அறைந்தது.. தனி மனித தன்னம்பிக்கையை உயர்த்தி பிடித்தது.. முதலாளித்துவத்தை வார்த்தைகளாலேயே குத்தி குத்தி கிழித்தது. 


"கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே, நீ கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே" என்று இவர் எழுதிய காதலும்கூட பொதுவுடைமை பேசியது!


கடைசிவரை சில்லறை விமர்சனங்களில் சிக்காத இந்த கலைஞனின் வாழ்வு, நம் பாரதியைபோலவே இளமையில் முடிவுக்கு வந்தது காலத்தின் கொடுமைதான்...!


மூளைக்கு போகும் ரத்தக்குழாய் வெடித்து சிதறியதால் 29 வயசிலேயே இறந்துவிட்டார்.. இவருக்காக பட்டுக்கோட்டையில் மணிமண்டபம் ஒன்றை திறந்து வைத்த கலைஞர் கருணாநிதிக்கு என் கோடி நன்றிகள்..!


உழைக்கும் வர்க்கத்தின் ஆசைகளையும் ஆவேசத்தையும், ஆதங்கத்தையும் பாடல் வரிகள் மூலம் எழுதி எழுதி தீர்த்தார் இந்த அலங்காரமற்ற மனிதன்.


சமுதாய இருட்டை கழுவிய, இந்த நெருப்பு சூரியனின் பாடல்கள் ஒவ்வொன்றும் எல்லா காலங்களுக்கும் பொருந்தக்கூடியது என்பதை, இந்த தமிழ் சமூகம் என்றென்றும் நன்றியோடு நினைத்து பார்ப்பது அவசியம்

Monday, August 2, 2021

விசாரணை கவிதை

 



‘விசாரணை-சோவியத் காதல் கவிதை 


‘என் காதலா உனக்கு வேண்டும்?’

— ‘ஆமாம்’

‘என் காதல் கறை படிந்தது’

–‘பரவாயில்லை’

‘உன்னிடம் சிலவற்றை உரைக்க வேண்டும்’

— ‘நல்லது! உரைக்கலாம்’

‘உன்னிடமிருந்து சிலவற்றைத்

தெரிந்து கொள்ள வேண்டும்!’

–‘கேள்!’

‘நான் உனக்கே உரியவளானால்…’

— ‘மிகவும் நல்லது!’

‘நீ எனக்குத் தேவைப்பட்டால்….’

–‘கடைக்கண் காட்டினால் போதும்’

‘உன்னை நான் ஏமாற்றிவிட்டால்…’

— ‘பொருட்படுத்தமாட்டேன்’

‘ஆபத்து ஏற்பட்டால்….’

— ‘தலை கொடுக்கவும் தயார்’

‘பாடச் சொன்னால்….’

— ‘பாடுவேன்’

‘ஒரு நண்பனை இழக்கச் சொன்னால்….’

— ‘பாதகமில்லை’

‘யாரையாவது கொல்லச் சொன்னால்…’

— ‘கொன்று விடுவேன்’

‘உன்னைச் சாகச் சொன்னால்…’

— ‘செத்து விடுவேன்’

‘நம் கப்பல் நாசமாகிவிட்டால்….’

— ‘நீ நீரில் மூழ்க விடமாட்டேன்’

‘வலி வேதனைக்கு அஞ்சமாட்டாயா?’

— ‘அஞ்சமாட்டேன்’

‘தடையாக ஒரு சுவர் இருந்தால்…’

— ‘அதைத் தகர்த்தெறிவேன்’

‘ஒரு முடிச்சு இருந்தால்…’

— ‘அதை வெட்டிவிடுவேன்’

‘என்றென்றும் என்னை நீ நேசிப்பாயா?’

— ‘சாகும் வரை நேசிப்பேன்’

‘என் காதலா உனக்கு வேண்டும்?’

— ‘ஆமாம், ஆமாம்’

‘இளைஞனே!

ஒரு போதும் உன்னை நான்

நேசிக்க மாட்டேன்’

— ‘ஏனோ?’

‘நான் அடிமைகளை விரும்புவதில்லை!’

———– ராபெர்த் ரஷ்தேஸ்த்வென்ஸ்க

உள்மன காயங்கள்

 


என்னை நான் எவ்வளவோ 

கட்டுப்படுத்தி வெளியே சிரித்தாலும்  ...

ஏமாற்றங்களால் ஏற்ப்பட்ட 

காயங்கள் உள்ளுக்குள் 

வலித்துக் கொண்டு தான் இருக்கிறது.

என்னை வற்புறுத்தி கட்டாயபடுத்தி 

யாராலும் எதுவும் செய்து விட முடியாது

 என்று நினைத்திருந்தேன்.


ஏனோ நான் என்னை அறியாமலே

 இரக்கப்பட்டு எல்லாவற்றையும்

 மற்றவர்களுக்காக விட்டுக்

 கொடுத்து விடுகிறேன்.


நான் முடிவெடுப்பதை பார்த்தால் 

அறிவாளி போல் இருக்கும்.

அன்புக்காக ஏங்கி அடிமையாகும்

 அடி முட்டாள் தான் நான்

என்னை நான் இதுவரை

 திருப்திபடுத்தியதில்லை 


என் ஒவ்வொரு காலப்பகுதியும்

 என் அன்பை ஒவ்வொருவருக்கு

 பங்கிட்டு கொடுக்கிறது.


என் கூட இருப்பவர்கள் சந்தோசமாய்

 இருந்தால் நான் என்னை இழப்பதில்

 பெருமை அடைவேன்.


ஆனால் அவர்கள் நலன் மட்டுமே

 முக்கியமாகக் கருதி 

வாழ்கிறார்கள் என்று நான்

 உணரும் போது கிடைக்கும்

 தனிமையில் நான் 

என்னை வருத்துகின்றேன்.


என்னதான் நான் என்னை

 சமாதானப்படுத்தி சந்தோசமாக

 இருப்பதாக காட்டிக்கொண்டாலும் 


சில பொய்களும் துரோகங்களும்

 என்னை தினமும் உள்ளுக்குள்

 அழவைத்து கொண்டுதான் இருக்கிறது.