Saturday, August 28, 2021

 குறளோவியம்  

-  கலைஞர் மு. கருணாநிதி


அதிகாரம் - 110    குறிப்பறிதல் ;

பாடல்கள் - 1091, 1094


வைத்தியர் ஊசி குத்துகிறார்;

உடலில் வலி ஏற்படுகிறது.  

ஆனால் அந்த ஊசி வழியே 

உடலுக்குள் செல்கிற மருந்து, 

நோய் தீர்க்கப் பெரிதும் உதவுகிறது. 


வைத்தியரிடம் வேதனை தரும் ஊசியும் இருக்கிறது; நோய் வேதனையை நீக்கும் மருந்தும் அதனுள் இருக்கிறது!.  


இதனை ஓர் அழகிய பெண்ணின் இரு விழி பார்வையுடன் ஒப்பிடுகிறார்.  ஒரு விழி பார்வையால் அவனுக்கு வேதனை உண்டாக்கினாள். மறு விழி பார்வையால் அந்த வேதனையை போக்கினாள் என அவளின் பார்வையின்  சிறப்பை கீழ்கண்ட குறளின் மூலம் விளக்குகிறார். 


"இருநோக்கு இவளுன்கண் உள்ளது ஒரு நோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து"


அப்படி அவள் பார்க்கிறாளே  என்பதற்காக  அந்த இளைஞன் வாளாதிருந்து விட்டானா என்ன? அவனோ ஓர் வம்புகார இளைஞன், காதல் மயக்கத்தில் என்னென்ன சொல்கிறான் பாருங்கள்:


" நான் அவளை பார்க்கும் போது என்னை பார்க்காமல் நிலத்தை பார்கிறாள். நான் அவளை பாராதிருக்கும்போது என்னை பார்த்து மகிழ்கிறாள் " என்று கூறுகிறான்.  இது எவ்வளவு பெரிய பொய் பாருங்கள்;


இவன்தான் அவளை பார்க்கவில்லையே பின்னர் அவள் இவனை பார்ப்பது மட்டும் இவனுக்கு  எப்படி தெரியும்? அதேபோல் இவன் அவளை பார்க்கும் போது நிலத்தை நோக்குகிறாளாமே ; அது  எப்படி? இவனை பார்த்து விட்டு தானே அவள் வேறு பக்கம் நோக்கி திரும்ப முடியும்?  


இந்த பார்வைக்குத் தான் 'பார்க்காமல் பார்க்கும் பார்வை' என்று பெயர் போலும் என்கிறார். 


அவர்கள் கண்களை வேறு பக்கம் திரும்ப அவர்களே முயன்றாலும் அது முடியாமல் ஒருவரையொருவர் பார்த்து கொள்கிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறார் வள்ளுவர் கீழ்க்கண்ட குரளில் 


"யான்நோக்குங் காலை நிலன்நோக்கும்       நோக்காங்கால் 

தான்நோக்கி மெல்ல நகும்"


(மெல்ல நகும் - உள்ளுக்குள் மகிழ்ச்சி யடைவாள்) 


இக் குறளோவியத்தில் கலைஞரின் கற்பனை வளம் மிக அபாரமாக உள்ளது. அனைத்து வயதினரையும் வசீகரிக்கும் விதத்தில் உள்ளது. வாசிக்கும் போது குறளோவிய காட்சிகள் கண்முன்னே நிகழ்வது போன்று  தோன்றுகிறது..

No comments:

Post a Comment