புத்தகம்: நளினி ஜமீலா - ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை
எழுத்தாளர்: தமிழில் குளச்சல் மு.யூசுப
சாதாரணமாக ஒருவரின் சுயசரிதைகளை படிக்கும் போது அவரை போல் வாழ தோன்றும்... உத்வேகம் பிறக்கும். ஆனால் நளினி ஜமீலாவை படிக்கும் போது இந்த சமூகத்தின் மீதான கோவம் அதிகரிக்கும். தலைசாய்ந்து படுத்து தூங்க ஒரு முழம் இடம் கூட இல்லாத ஒரு பாலியல் தொழிலாளியின் கண் வழியே இந்த சமூகம் விரியும். பெண்கள் எவ்வளவு கொடூரமாக அடிமைப்படுத்தப்பட்டு கிடக்கிறார்களென்பதை போகிற போக்கில் சாதாரணமாக நம்மில் கடத்தியிருப்பார்.
இன்று மெத்த படித்தவர்கள் அதிகம் இருக்கும் கேரளாவில் விதை நெல்லுக்கும், அறுவடை நெல்லுக்கும் கணக்குப் பார்க்கும் அளவிற்கு பெண் படித்தால் போதும் என்ற குடும்பத்தில் பிறந்தவர் நளினி ஜமீலா. வாய்ப்புகள், வசதிகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவருக்கு படிப்பு என்பது எட்டாக்கனியாகவே இருந்தது.
அவருடைய அண்ணன் படிப்பதைப் பார்த்து குடும்பத்தில் இருப்பவர்களிடம் சண்டை போட்டுதான் பள்ளியில் சேர்ந்தார். அதுவும் மூன்றாவது வரை மட்டுமே அவரால் படிக்க முடிந்தது. தந்தையின் ஊதாரிதனம், இயலாமையால் சொந்தவீட்டிலேயே ஒண்டிக்குடித்தனம் நடத்தினர் அவருடைய பெற்றோர். அதனால் படிப்பு அவளுக்கு கனவாகவே போய்விட்டது. ஒவ்வொரு முறை பள்ளிக்கூடத்தை கடக்கும் போதும் அவர் கண்ணில் தாரை தாரையாய் கண்ணீர் கொட்டும். இயலாமை ஆற்றாமை வெளிப்படும். தந்தையின் செயல்பாடுகளால் அதிகமான கடன் ஏற்பட்டு அவருடைய அண்ணனால் ஏமாற்றப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்.
குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற சூழலில் மண் வேலைக்கு செல்வார். கிடைக்கும் வீடுகளில் எடுபிடி வேலைகள் செய்வார் . ஒருமுறை நண்பர்கள், நன்கு அறிந்தவர்கள் வீட்டுக்கு செல்லும்போது அவர்களின் உறவினரும் அண்ணனின் ஆசிரியருமான நபர் நளினி ஜமுனாவுக்கு பாலியல் தொல்லை தருவார். யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டுவார். அதன்பின் அந்த வீட்டிற்கு செல்லவே அச்சம் ஏற்படும். வீட்டு வேலையை விடுகிறார். அதற்கான காரணத்தையும் அந்த குடும்பத்தில் இருந்தவர்களுக்கு சொன்னார். ஆனால் நளினி ஜமீலா மீதே குற்றம் திரும்பியதும்.
அறிவு உண்மையை ஆராய்ந்துவேலையை விடவைத்தாலும் வயறு சும்மா இருக்காதே.. மீண்டும் வேலைக்கு செல்கிறார். அங்கேயும் அவருக்கு பாலியல் தொல்லைகள் நின்றபாடில்லை. மண் வேலை செய்யும் இடத்தில் கிறிஸ்தவ பையன் ஒருவரை காதலிப்பார். அதனால் வீட்டில் பிரச்சனை ஏற்படும். ஒரு வேளை திண்பதற்கு சோறு இல்லை என்றாலும் சாதி மதம் முக்கியமாக இருக்கும். அந்தளவிற்கு மதம் , சாதி மனிதனை பழக்கி வைத்துள்ளது என்பதை இந்த இடத்தில் உணரமுடியும். காதலித்த பெண்ணுக்காக காத்திருந்து காத்திருந்து பின் இரண்டு ஆண்டுகளில் அவன் தற்கொலை செய்து கொள்வான்.
வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து நளினி ஜமீலாவை குடும்பத்தினர் விரட்டுகின்றனர். வீட்டிலோ வறுமை தேகத்திலோ வழமை.. அதை பொறுக்க முடியாத சில பெண்களால் இவரின் பெயர் ஊர் முழுவதும் தவறாக பேச செய்கிறது. யாருடைய பேச்சையும் காதில் வாங்காமல் தனக்கு சரி என தோன்றுவதை மட்டுமே செய்வார். 18 வயதில் வீட்டை விட்டு வெளியேற்ரப்படுவார்.
போக்கிடமின்றி தன்னை காதலித்த ஒருவனை தேடி செல்வாள். அவன் வேலை செய்த இடத்தில் காத்திருப்பாள். அவன் வரமாட்டான். அவனுடைய நண்பன் உதவுவதாக கூறி வீட்டிற்கு அழைத்து செல்வான். அங்கு காதலின் நண்பனுக்கு மனைவியாகும் சூழல் உருவாகிறது.
கணவன் ஒரு சாராய வியாபாரி. அவனோடு சேர்ந்து சாராயம் விற்கிறாள். குடிக்கு அடிமையான அவனின் அடியில் இருந்து தப்புவதற்கு இவளும் குடிக்க தொடங்குகிறாள். திருமணமான மூன்று ஆண்டுகளில் அவன் உயிர் இழக்கிறான்.
இரண்டு குழந்தைகளோடு பரிதவித்து நிற்கிறாள். ஆண் குழந்தை உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழக்க, குழந்தையை காப்பாற்ற கூட பணம் இல்லாமல் தவித்து வேதனையில் நிற்கிறாள். வேறு என்ன செய்வது என அவளுக்கு தெரியவில்லை . அவளுக்கு மூலதனம் அவளுடைய அழகு மட்டுமே . அதை வைத்து வியாபாரம் செய்யத் தொடங்குகிறார் . ஆம் பாலியல் தொழிலாளியாக மாறுகிறார்.
இந்த இடத்தில் அவர் மீது கோபம் வருவதற்கு பதில் என்மனம் அவர் மீது அனுதாபம்தான் கொண்டது. ஒரு தேவத்தூதன் வந்து அவரை காப்பாற்றி உதவி செய்திடமாட்டானா என்றுதான் கவலைக்கொள்ள செய்தது.
கணவன் இறந்த பிறகு மிகப் பெரிய தொகையை கேட்டு நச்சரிக்கும் மாமியார்... விரட்டிவிட்ட குடும்பம்.. எங்கு சென்றாலும் சதைபிண்டமாக மட்டுமே பார்க்கும் சமூகம்.. இந்த பிரச்னைகளில் இருந்து விடுபட தோழி மூலம் பாலியல் தொழிலுக்குள் நுழைகிறார். அதன்பின் அவர் சந்திக்கும் பிரச்சினைகள்... தாயாய் மகளை கொஞ்சி மகிழ முடியாத இயலாமை...என சமூகத்தால் விரட்டி அடிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வலிநிறைந்த சாட்சியாய் இருக்கிறார் நளினி ஜமீலா.
2006ஆம் நளினி ஜமீலாவின் சுயசரிதை வெளியான போது கேரளாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை எற்படுத்தியது. அதனால் அந்த புத்தகம் மீண்டும் திருத்தி எழுதப்பட்டது. சாதாரண பாலியல் தொழிலாளியின் கதை இந்த சமூகத்தை இந்தளவிற்கு பதற செய்ததற்கு என்ன காரணம்? அதிலிருந்த உண்மை..
ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என பல வரைமுறைகளை வைத்துள்ள இந்த சமூகம். ஒரு ஆண் எப்படி இருக்கக்கூடாது என்பதை ஒரு இடத்தில்கூட சொல்வதில்லை.
எல்லா வேதனைகளையும் கடந்து ஒரு சாதனை பெண்ணாக துணிந்து இந்த சமூகத்தை எதிர்கொண்டிருக்கிறார்.
ஜூவாலாமுகி, A peep into the silenced ஆகிய குறும்படங்களை இயக்கியுள்ளார். பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவி, குறும்பட இயக்குனர், பெண்ணியவாதி, எழுத்தாளர் என பரிணாமித்து இன்று சமூகத்தில் கம்பீரமாய் வலம் வருகிறார் நளினி ஜமீலா.
No comments:
Post a Comment