Tuesday, January 25, 2022

மனம் மனிதன் சமூகம் - டாக்டர் சிவபாலன்

 மனிதர்கள் மிகவும் சுயநலம் மிக்கவர்களாக மாறிக்கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோமா?என்ற சந்தேகம் எனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது.


 கவலைகளும்,துயரங்களும் மனித வாழ்க்கையில் புதிதானதோ, அரிதானதோ இல்லை. அது எதிர்கொள்ளும் நம்பிக்கையை இன்னொரு மனிதன் வழங்குவான் என்ற நம்பிக்கையில் தான் நாம் அத்தனையும் தாண்டி ஓடிக் கொண்டிருக்கின்றோம்.


 அந்த நம்பிக்கையையும் பாதுகாப்பையும் இன்னொரு மனிதனுக்கு வழங்கும் இடத்தில் நாம் எப்போதும் இருக்கிறோம் என்பதை நாம் நிச்சயம் உணரத்தான் வேண்டும்.


 தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட காலகட்டத்தில் நமது வாழ்க்கையும் கூட ஒரு இயந்திரமயமாகி விட்டது போலத்தான் இருக்கிறது.


 தனிமை மீது ஒரு மனிதருக்கு இருந்த அச்சங்களும் ,வருத்தங்களும் மாறிப்போய் தனிமை மீது அத்தனை விருப்பத்துடனும் எதிர்பார்ப்புடன் இருக்கும் மனிதர்களை கொண்ட காலகட்டம் இது.


 செல்லும் இடமெல்லாம் மனிதர்கள் தனித்தனியாகவே அமர்ந்திருக்கிறார்கள் ,தனித்தனியாக பாட்டு கேட்கிறார்கள், தனித்தனியாகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள் தனித்தனியாகவே சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.


 ஒரு ஆழமான உறவே இங்கு யாருக்கும் யாருடன் இல்லையோ? என்று தோன்றுகிறது. ஒரு உறவின் மீது இயல்பாகவே வரக்கூடிய ஒரு பொறுப்புணர்வு அர்ப்பணிப்பு புரிதலும் யாருக்குமே இல்லை.


தன்னை தவிர தனது விருப்பங்களை தவிர வேறு எதுவும் பெரிதில்லை என்று நினைப்பதும் விளைவுகள் தான் இத்தனை முதிர்ச்சியற்ற உறவுகளும் அதன் நிமித்தம் வரும் சிக்கல்களும்.


இந்த வாழ்க்கை என்பது அப்படி சுய நலமாக வாழ முடிவதில்லை.நம்மீது பிரியத்துடன் உள்ளார்ந்த அன்புடன் இருக்கும் மனிதர்களை தவிர நாம் வேறு எதையும் பெரிதாக சம்பாதிப்பதற்கு இங்கு வரவில்லை.


 நம்மை நெருங்கி இருக்கும் ஒரு மனிதர் கொடுக்கும் நம்பிக்கையால் மட்டுமே இந்த வாழ்க்கை நிமித்தம் பெறக்கூடிய பல்வேறு நெருக்கடிகளில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். எந்த அளவிற்கு அன்பையும் ,காதலையும் நாம் இன்னொருவரிடம் இருந்து எதிர்பார்க்கிறோமோ அப்படியே முழுமையாக நாமும் இருக்க வேண்டியது அவசியம். நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் அல்ல,உங்களது உடல் மொழியால் துயரத்தில் இருக்கும் உங்களுக்கு நெருக்கமானவருக்கு நினைவூட்டுவது அவசியம்.வெற்று அறிவுரைகளை விட உங்கள் உடல்மொழி அத்தனை முக்கியமானது.


 மீளா துயரில் இருக்கும் ஒருவரை நோக்கி நீளும் உங்கள் கரங்களை விட இந்த உலகத்தில் புனிதமானது வேறொன்றுமில்லை.


புத்தகம்:மனம் ,மனிதன், சமூகம் ஆசிரியர்:டாக்டர் சிவபாலன் இளங்கோவன்

Friday, January 21, 2022

சிறிய உண்மைகள்

 சிறிய உண்மைகள்  - எஸ் ராமகிருஷ்ணன்


பகுதி 25   - காஃப்காவின் எலி


 இப்பகுதியில் என்னைக் கவர்ந்த  சில பகுதிகள் 

 

பால்ய வயதில் உலகம் மிகப் பெரியதாக இருந்தது வீதி மிகப்பெரியதாக இருந்தது மரங்கள் மிக உயரமாக இருந்தன அடிவானம் மிகத்தொலைவில் இருந்தது பெரியவர்களின் செருப்பு கூட மிகப்பெரியதாக தோன்றியது நண்பர்கள் ஒன்று சேர்ந்து குளிக்கப் போனால் கண்மாய் கூட பெரிய கடலை போல் தோற்றமளிக்கும் சிறிய தட்டில் உண்டு சிறிய உடைகள் உடுத்தி சிறிய தலையணையில் உறங்கி எழுவோம் ஆனால் இன்று   இதைக் கண்டா பிரமித்தேன் ? என்று அந்தக் காட்சி சுருங்கிப் போய் விடுகின்றது


 உலகம் முழுவதும் பல்லாயிரம் பக்கங்கள் பால்ய வயதின் நினைவுகள் பலராலும் எழுதப்பட்டிருக்கின்றன அவை திரும்ப திரும்ப வாசிக்க படுவதற்கான காரணம் பால்ய வயதின் காட்சிகள் அனுபவங்கள் உணர்வுகளில் இருந்து நாம் கற்றுக் கொண்டே இருக்கிறோம் அல்லது இன்றைய உலகை புரிந்து கொள்கிறோம் என்பதே என்று எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் விளக்குகின்றார்


என்னுடைய சிறுவயதில் நானும் என் தம்பியும் வளர்ந்தது அம்மாச்சியின் வீட்டில்தான் அப்போது அந்த வீடு மிகப்பெரியதாக காட்சியளித்தது அங்கிருந்த மர மேஜை மிகப் பெரிதாக தோன்றியது ரெண்டு பேரும் ஒரே மேஜையில் உட்கார்ந்து எழுதுவோம் ஆனால் இன்று பார்க்கும்போது அது எவ்வளவு சிறிய மேஜை அந்த வீடு அவ்வளவு பெரிய வீடு அல்ல என்று தோன்றுகிறது உண்மையில் ஆசிரியர் இங்கு ஆச்சரியப் பட்டதில் வியப்பில்லை இத்தகைய வியப்பு நம்மில் நிறைய பேருக்கு ஏற்படும் நாங்கள் விளையாடிய அந்த மொட்டைமாடி கூட மிகச் சிறியதுதான் ஆனால் அன்று அது மிகப்பெரியதாக தோன்றியது


உலகம் மாறவில்லை ஆனால் நாம் வளர்ந்தவுடன் உலகம் வேறு தோற்றம் கொண்டு விடுகிறது எப்போது உலகம் மாறுகிறது ?எவ்விதம் மாறுகிறது ?அந்த மாற்றத்தை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் ?


காகிதம் மடங்கி கொள்வது போல நாம் பல நேரங்களில் மடங்கி கொண்டு விடுகிறோம் காவலர் உங்களை சாலையில் நிறுத்தி மிரட்டும் குரலில் கேள்விகள் கேட்டால் உடனே மடங்கி போய் விடுகிறீர்கள் அதிகாரிகள் உங்கள் மீது குற்றம் சுமத்தினால் நீங்கள் மடங்கிப் போய் விடுகிறீர்கள் மகனோ மகளோ உங்கள் விருப்பத்தை மீறி செயல்பட்டால் உடனே மடங்கிப் போய் விடுகிறீர்கள் இப்படி ஓராயிரம் முறை மனிதர்கள் அடங்கிப் போகிறார்கள் 


சூழலின் முன்பு ஒரு மனிதன் மடங்கிக் கொள்ளும் போது அவ்வளவு தான் தன்னால் செய்ய முடியும் என்று நம்புகிறான் ஆனால் சில காலம் சென்ற பிறகு தான் ஏன் அப்படி மடங்கி போனோம் என்று நினைத்து நினைத்து துயரம் அடைகிறான் 


பெண்களில் பலர் இந்த துயரத்தை வாழ்நாள் முழுவதும் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்று ஆசிரியர் கூறுகிறார் இது மிகவும் எதார்த்தமான உண்மை. 


சூழ்நிலை தரும் அழுத்தமும் நெருக்கடியும் ஒவ்வொருநாளும் மனிதர்களை இப்படி மடங்கிக் கொண்டே இருக்கிறது சிலரை மண்டியிடச் செய்கிறது சிலரை தனித்து அழ வைக்கிறது சிலரை மௌனமாக ஓடச் செய்கிறது  இதிலிருந்து எவரும் தப்ப முடியாது


பகுதி 28  -  தன்னை இழந்தவர்கள்


லாக் டவுன் நாட்களில் அரசு உயரதிகாரியாக உள்ள எனது நண்பர் தனது பிள்ளைகளுடன் கேரம் விளையாட தொடங்கினார் ஆரம்பத்தில் மதிய நேரம் மட்டும் விளையாடிக் கொண்டிருந்த அவருக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமாகி விடவே இரவு பதினோரு மணி வரை சலிக்காமல் விளையாட ஆரம்பித்தார் மகனுக்கோ மகளுக்கோ விருப்பமில்லை என்று எழுந்து கொள்ள முயன்றால் கோபம் கொண்டு விடுவார் அவருக்காக மனைவி நீண்ட நேரம் துணையாக விளையாட வேண்டி இருந்தது


 லாக் டவுன் என்பதால் அவர் அலுவலகம் போகவில்லை வெளியே யாரையும் சந்திக்கவும் முடியாது என்பதால் சதா விளையாடிக் கொண்டே இருந்தார் அது ஒரு விளையாட்டு என்பதே அவருக்கு மறந்து போய்விட்டது விளையாடுவதற்கு ஆட்கள் வேண்டும் என்பதற்காக மனைவி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு கிளம்பிப் போனார் அங்கு பூர்வீக வீட்டில் ஆட்கள் நிறைய  இருந்ததால் விளையாடிக் கொண்டே இருந்தார் இப்படி விடாது விளையாடிக் கொண்டிருந்தவர் திடீரென ஒருநாள் மதியம் பாதி விளையாட்டில் எழுந்துகொண்டு கேரம் போர்டு தூக்கி கிணற்றில் போட்டுவிட்டார்


லாக் டவுன் நண்பரை செயல் அற்றவராக மாற்றியிருந்தது அலுவலகம் அதிகாரம் பரபரப்பு என இருந்தவருக்கு அந்த உலகம் தன்னைவிட்டு பறிக்கப்பட்டதும் விளையாட்டில் தனது அதிகாரத்தை வேகத்தை காட்டத் துவங்கிவிட்டார்


பொருளாதார நெருக்கடிகள் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் இதுபோன்ற புதிய மன நெருக்கடிகளை லாக்டோன் காலத்தில் பலரும் சந்தித்திருக்கிறார்கள் 


சிலர் ஒரு நாளில் ஏழெட்டு முறை சாப்பிட்டு இருக்கிறார்கள் சிலர் அதிகமான நேரம் உடற்பயிற்சி செய்து கை கால் வலி ஏற்பட்டு சிகிச்சை எடுத்து இருக்கிறார்கள் சிலருக்கு இரவில் உறக்கம் வரவே இல்லை சிலர் ஒரு நாளில் ஐந்து சினிமா பார்த்திருக்கிறார்கள் ஒரு சிலர் புதிய கலைகளை கற்றுக்கொள்ள முயன்று இருக்கிறார்கள் தோட்ட வேலைகள் மீன் வளர்ப்பது பொம்மை செய்வது சமைக்க கற்றுக் கொள்வது என ஏதேதோ வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் வெளியுலகம் என்பது எத்தனை ஆயிரம் சக்கரங்கள் கொண்டது என்பதை ஊரடங்கு காலத்தில்தான் முழுமையாக அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது 


நானும் இந்த  லாக் டவுன் இல் நிறைய கற்றுக்கொள்ள தொடங்கினேன் என்னிடம் உள்ள 300க்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்து அதன் சுருக்கத்தை எழுத ஆரம்பித்தேன் ஏதேனும் ஒரு வகையில் இந்த  லாக் டவுன் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று யோசித்தேன் செயல் படுத்திக் கொண்டிருக்கிறேன்


பகுதி 29  -   தனிமையும் கனவுகளும்


எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர் பஞ்சாப் மாநிலத்தின் கசெளளி இல் பிறந்தவர் இவர் ஒரு நேர்காணலில் அன்றாடம் தனக்கு வரும் கனவுகளை ஒரு நோட்டில் குறித்து வைத்துக் கொண்டு வருவதாக சொல்கிறார் 


திப்பு சுல்தான் தனது கனவுகளை இதுபோல தொடர்ந்து பதிவு செய்து வந்ததோடு அவற்றிற்கு விளக்கம் என்னவென்று ஆராய்ந்து இருக்கிறார் அவை தனி நூலாக வெளிவந்துள்ளன


 ரஸ்கின் பாண்ட்யிற்க்கு முப்பதாவது வயதில் காமன்வெல்த் பரிசு கிடைத்துள்ளது குழந்தைகளுக்காக அவர் எழுதிய உலகம் வண்ணமயமானது சுவாரசியமானது அவர் ஒருபோதும் சிறார்களுக்கு அறிவுரை சொல்வதில்லை

 

 ஒருமுறை பள்ளி ஒன்றுக்கு சிறப்பு ஆசிரியராக ஒரே ஒரு வகுப்பு எடுக்க அவரை  அழைத்திருக்கிறார்கள்  மாணவர்களின் விளையாட்டுத் தனத்தைனையும் குறும்ப்பினையும் கண்டிக்க மனம் இன்றி சுதந்திரமாக அனுமதித்திருக்கிறார் சிறுவர்களின் விளையாட்டுத் தனத்தை கண்டிக்க முடியாது அது அவர்களின் உற்சாக மனதின் வெளிப்பாடு அதை ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் ரஸ்கின் பாண்ட்டின் இந்த மனநிலைதான் அவர் குழந்தைகளுக்காக எழுதுவதன் முக்கிய காரணி என்று ராமகிருஷ்ணன் அவர்கள் விளக்குகிறார்


சிறுவர்கள் ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அதன் அர்த்தங்களைப் பற்றி கவலைப்படாமல் வாசிக்கிறார்கள் அர்த்தங்களை முழுமையாக புரிந்து கொள்வது மிக  அபூர்வமாகவே காணப்படுகிறது  நிகழ்வுகளின் சுவாரஸ்யமும்  விநோதமும் அவர்களைத் தொடர்ந்து படிக்க வைக்கிறது


ஒருவன் தன் பத்து வயதில் அணிந்து கொண்ட சட்டை அவனுடைய 20 வயதில் அவனுக்கு பொருந்துவதில்லை ஆனால் அவன் பத்து வயதில் படித்த புத்தகம் அவனுக்கு 80 வயது ஆகும் போதும் பிடித்தமானதாக இருக்கிறது கூடவே வளர்ந்து கொண்டிருக்கிறது அதுதான் நல்ல புத்தகத்தின் அடையாளம் என்று ஆசிரியர் விளக்குகிறார்


பகுதி 30  -  எழுதும் நாட்களில்


 ஜப்பானிய எழுத்தாளரான கென்ஸாபுரோ ஒயி நோபல் பரிசு பெற்ற பின்பு தான் எழுதப்போவதில்லை தன்னுடைய வேலை முடிந்துவிட்டது என்று ஒரு பேட்டி கொடுக்கிறார் 

 

பத்திரிகையாளர்கள் ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்கின்றனர் அதற்கு அவர் சொல்கிறார் என் எழுத்திற்கு அடிப்படையாக ஒரே ஒரு காரணம் இருந்தது அது என் மகன்  ஹிக்காரி மூளை வளர்ச்சியற்ற அவன் நலம் அடைய வேண்டும் என்பதற்காகவே எழுதினேன் அந்தப் பணியை சரியாக செய்து விட்டதாக உணர்கிறேன் ஆகவே இனி எழுதத் தேவையில்லை என்று கூறுகிறார் அவரது வாழ்க்கையில் நடந்த உண்மைகளை அறிந்தால் இந்தப்பதிவு எவ்வளவு நிஜமானது என்பதை உணர முடியும்


 கென்ஸாபுரோ ஒயி  மூளை வளர்ச்சி குன்றிய தனது மகனுக்கு ஹிக்காரி என்று பெயர் வைக்கிறார் அதன் பொருள் வெளிச்சம் 

 

அவன் குழந்தையாக இருந்தபோது மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றபோது அவனுக்கு மூளையில் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அதை செய்யாவிட்டால் உயிர் வாழ முடியாது அப்படியே செய்தாலும் அவன் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்கிறார் இதைத் தவிர வேறு வழி இருக்கிறதா என்று மருத்துவரிடம் கென்ஸாபுரோ ஒயி கேட்கிறார் ஆனால் மருத்துவர் அவன் உங்களுக்கு வீண் சுமை போல் ஆகிவிடுவான் என்று கூறுகிறார்

 

 பின்னர் அவரும் அவரது மனைவியும் ஹிக்காரி யை தாங்களே கவனித்து வளர்ப்பதாக முடிவு எடுக்கின்றனர் நிறைய கவனம் எடுத்துக் கொள்கின்றனர் அவனை மீட்டெடுக்க மிகவும் சிரமப்படுகின்றனர்


தன் மனைவியின் உறுதியான நிதானமான இடைவிடாத செயல்பாடும் ஆழ்ந்த நம்பிக்கையுமே தன் மகனை மீட்டெடுத்தது என்கிறார் 


பேச்சு வராத ஹிக்காரிக்கு ஆர்வம் உருவாக்குவதற்காக விதவிதமான பறவைகளின் குரலை கொண்ட ஒலிநாடாக்கள் ஐ வீட்டில் ஒலிக்க விட்டிருக்கிறார்கள் அவன் பறவைகளின் குரல் வழியாகவே உலகை அறிந்திருக்கிறான் பறவைகளின் குரலைக் கேட்கும் போது அவன் சந்தோஷம் அடைவான் ஆனால் எந்த எதிர்வினையும் தரமாட்டான் இப்படி நாள்தோறும் புதுப்புது பறவைகளின் ஒலியை வீட்டில் ஒலிக்க செய்திருக்கிறார் ஒவ்வொரு நாளும் தன் மகனின் மௌனம் தங்கள் மீது பெரும் பாரமாக இறங்கியது என்று கூறுகிறார் பல இரவுகள் அழுது இருப்பதாக சொல்கிறார் 


வேதனைதான் எழுத்தின் மூல ஊற்று  உலகம் அறியாத தந்தையின் கண்ணீர் தான் எழுத்தாக மாறி நோபல்பரிசு வரையான அங்கீகாரத்தை பெற்றுத் தந்திருக்கிறது


ஆறு வயதான மகனை அழைத்துக்கொண்டு கென்ஸாபுரோ ஒரு நாள் காட்டிற்குள் சென்றார் அங்கே ஒரு பறவையின் குரலைக் கேட்டு எதிர்வினை தரும் விதமாக ஹிக்காரி நீர்க்கோழி என்ற முதல் வார்த்தையை பேசினான் அந்த மகிழ்ச்சிக்கு இணையே கிடையாது என்கிறார் தன் மகனின் மீட்சிக்கான நம்பிக்கையை உருவாக்கும் விதமாகவே தனது எழுத்து மாறியது ஆகவே தன்னுடைய எழுத்தின் நோக்கம் குணப்படுத்துதல் இது என் மகனை மட்டுமல்ல அவனைப்போல தனிக்கவனம் செலுத்த வேண்டிய யாரோ ஒரு தந்தைக்கு தாய்க்கு உதவி செய்யும் என்று நம்பினேன் அதுதான் நடந்தது என்கிறார் 


பத்து வயதானபோது மொசார்ட், பீத்தோவன் என உலக புகழ்பெற்ற இசை மேதைகளின் இசையை கென்ஸாபுரோ அறிமுகம் செய்திருக்கிறார் மொசார்ட்தடின் எந்த இசைத் துணுக்கை கேட்டாலும் அவன் அது எந்த இசைக்கோர்வை என்று சொல்லிவிடுவான் வளர்ந்து பெரியவனாகி இன்று அவன் ஒரு இசையமைப்பாளராக ஆகி இருக்கிறான் அவனது இசைத்தட்டுகள் பல லட்சம் விற்பனையாகி சாதனை செய்திருக்கிறது


சிறப்பு கவனம் எடுக்க வேண்டிய குழந்தைகளை உலகம் ஏன் புறக்கணிக்கிறது?அவமதிக்கிறது? புரிந்து கொள்ள மறுக்கிறது ?அந்தப் பெற்றோர்களின் அடக்கப்பட்ட கண்ணீரை மனத்துயரை புரிந்துகொள்ளாமல் ஏன் பரிகாசம் செய்கிறார்கள்? இந்த உலகில் மன்னிக்க முடியாத குற்றம் இதுபோன்ற பெற்றோர்களை அவமதிப்பதாகும் என்று ஆசிரியர் விளக்குகிறார் உண்மைதானே உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்கலாமே. 


சிறப்பு கவனம் வேண்டுகிற குழந்தைகளின் மௌனம் என்பது தனித்துவமான மொழி அதைப் புரிந்து கொண்ட பெற்றோர்களே அந்தப் பிள்ளைகளை சரியாக வளர்கிறார்கள் உருவாக்குகிறார்கள் நோயிலிருந்து குணப்படுத்த மருத்துவம் மட்டுமே உதவி செய்வதில்லை இயற்கையின் வழியிலும் நம்பிக்கையான சொற்களின் மூலம் மீட்சியை உருவாக்க முடியும் என்கிறார்


 இதில் இந்த கதையை படிக்கும்போது அந்தத் தாய் தந்தையரின் மனோநிலை நம் கண்முன் வந்து செல்கிறது அவர்கள் எடுத்த அறிவுப்பூர்வமான முடிவுகள் செயல்பாடுகள் நம்மை நெகிழ வைக்கிறது 

 

ஒவ்வொரு குழந்தைகளின் வளர்ப்பிலும் பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியம் அவர்களுடைய தெளிவான சிந்தனை மற்றும் செயல்பாட்டினை பார்த்துதான் குழந்தைகள் வளர்கின்றனர் இன்றைய குழந்தைகள் நம்முடைய வருங்கால நாட்டின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உயர வேண்டும்


தொடரும்


நன்றி 


தோழமையுடன் 


சரோஜினி கனகசபை





Tuesday, January 18, 2022

சிறிய உண்மைகள்

  சிறிய உண்மைகள் - எஸ் ராமகிருஷ்ணன்

 

 பகுதி 7  - ஆயிரம் நன்றிகள்

யாசுனாரி கவாபத்தா Thank You என்ற ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார்  

இவருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது.


இக்கதையில் ஒரு பேருந்து ஓட்டுனரின் பயணத்தில் தான் சந்திக்கும் அனைவரையும் மகிழ்ச்சி கொள்ள செய்யும்  அவருடைய உயர்ந்த செயலை ச குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் 


பேருந்து ஓட்டுனர் தன்னை கடந்து செல்லும் குதிரை வண்டிகள் வாகனங்கள் எல்லாவற்றிற்கும் நன்றி சொல்கிறார் உண்மையான மகிழ்ச்சியோடு அவர் தனக்காக வழிவிடும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நன்றி சொல்கிறார் மலைப்பாதையில் எதிரே வரும் குதிரைகளுக்கு தனது பேருந்தின் வெளிச்சம் கண்ணை உறுத்த கூடும் என்பதால் குதிரை வண்டியை கடந்துபோகும் அவர் விளக்குகளை அணைத்து விடுகிறார் மேலும் அந்த குதிரை வண்டி ஓட்டும்  நபருக்கும் நன்றி சொல்கிறார் 35 மைல் செல்லும் அந்த பயணத்தில் அவர் ஒரு நூறு முறை நன்றி சொல்லி விடுகிறார்


நன்றி தெரிவிக்கும் பழக்கத்தை நமக்கு சிறு வயதில் வீட்டில் சொல்லிக் கொடுப்பார்கள் ஆனால் அது மனதில் பதியாது வாழ்க்கைதான் நன்றியின் மகத்துவத்தை நமக்கு புரிய வைக்கிறது என்கிறார் ஆசிரியர்


நம் குழந்தைகளுக்கு நாம் தவறு செய்யும்போது Sorry  சொல்லும் பழக்கத்தையும் பிறர் செய்யும் உதவிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும் எனும் பழக்கத்தையும் கண்டிப்பாக உருவாக்க வேண்டும் சில குழந்தைகள் தான் என்ன தவறு செய்திருந்தாலும் Sorry எனும் வார்த்தையை தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடம் சொல்வதில்லை ஆனால் இதனை கண்டிப்பாக குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே பழக்கப்படுத்த வேண்டும் 


ஜப்பானின் இயல்பு வாழ்க்கையில் நன்றி சொல்லுதல் கலந்திருக்கிறது ஒரு நாளில் எத்தனை முறை நன்றி சொல்வார்கள் என்ற கணக்கே இல்லை மனிதர்களுக்கு மட்டும் இல்லை இயற்கைக்கும் ஜப்பானியர்கள் நன்றி சொல்கிறார்கள் இயற்கை மனிதர்களை மகிழ்வித்து கொண்டே இருக்கிறது  அதை மனிதர்கள் பொருட்படுத்துவதில்லை அரிதாகவே உணர்ந்து கொள்கிறார்கள் என்று ஆசிரியர் கூறுகிறார் 


பேருந்து ஓட்டுநருக்கு பெயரே இல்லை ஒருவேளை புத்தர் அந்தப் பேருந்தின் சாரதியாக  இருந்திருந்தால்  இப்படித்தான் நடந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது என்கிறார் திரு ராமகிருஷ்ணன் அவர்கள்


பகுதி 16  - மகிழ்ச்சியின் தூதுவன்


இப்பகுதியில் ஆசிரியர் தபால்காரர் களையே மகிழ்ச்சியின் தூதுவன் என்று  விழிக்கிறார் 


மேலும் எழுத்தாளர் ஜான் பிரைன் தபால்காரர்கள் குறித்து கீழ்கண்டவாறு மிக அருமையாக விவரிக்கிறார்


 விண்ணுலகிலிருந்து ஒரு தேவதூதன் வருவது போலவே தபால்காரர் நம் வீதிக்கு வருகிறார் அவரது கையில் உள்ள கடிதங்கள் எத்தனை பேரை மகிழ்ச்சிப்படுத்த போகின்றன என்று அவருக்கு தெரியும் உண்மையில் அவர் தான் மகிழ்ச்சியின் தூதுவர் ஆனால் அதேநேரம் சில கடிதங்கள் சிலரது வாழ்க்கையை புரட்டிப் போடக் கூடியவை எதிர்பாராத செய்திகளை கொண்டவை என்பதையும் அவர் அறிந்திருப்பார் ஒரு துறவியைப் போல அவர் சுக துக்கங்களை ஒன்றாக காண்கிறார் என்கிறார் இது உண்மை தானே 


இன்றைக்கு யாரும் தபால்காரர்காக காத்திருப்பதில்லை இது மின்னஞ்சல் யுகம் ஆனால் சென்ற தலைமுறைக்கு தபால்காரர் தான் உலகம் 


கதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு அது வெளியாகுமா என்று காத்திருந்த கதாசிரியர்கள் ஆகட்டும் வேலைக்கு எழுதி போட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்குமா என்று காத்திருக்கும் இளைஞர்கள் ஆகட்டும் ஊரில் வேலை செய்யும் தந்தையிடமிருந்து வரும் கடிதத்திற்கு காத்திருக்கும் பிள்ளைகள் , மனைவி மற்றும் பெற்றோர்கள்  ஆகட்டும் மேலும் பொங்கல் தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு நண்பர்களிடம் இருந்து வரும் வாழ்த்து அட்டைகள் ஆகட்டும் இவை அனைத்துக்கும்  நம்மிடம் கொண்டு சேர்க்கும் தபால்காரர் அவரவர் கண்ணோட்டத்தில் விண்ணுலகில் இருந்து வரும் தேவதூதன் ஆகத்தான் தோன்றினார்


 இன்றைக்கும் பழைய தபால்களை எடுத்துவைத்து வாசிப்பது மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது 20 ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த  வாழ்த்து அட்டைகள் அனைத்தும் பழைய புகைப்படங்களை பார்க்கும் போது கிடைப்பது போன்ற அளவிலா ஆனந்தத்தைத் தருகிறது இதனை வார்த்தைகளால் விளக்க இயலாது


தபால்காரருக்கு  தெரியாத மனிதர்களே இல்லை அவருக்கு தெரியாத ரகசியம் எதுவும் இல்லை ஆனால் அவர் அதை எதையும் வெளியில் பகிர்ந்து கொள்வதில்லை இன்றைக்கும் மழை நாட்களில் குடையோடு வரும் தபால்காரர்கள் நினைவில் இருக்கிறார்கள் 


நாங்கள் பரிட்சையில்  தேர்வான போது பள்ளியில் இருந்து அனுப்பிய அஞ்சல் அட்டையை கொடுத்து விட்டு சிரித்த முகத்துடன் மிட்டாய் கேட்கும் தபால்காரர் தாத்தா கண் முன் வருகிறார் 


என்னுடைய தாய் தபால்கார தாத்தாவிடம்  என் தந்தையின் சுதந்திர போராட்ட வீரர்களுக்கான பென்சன் தொகை உயர்ந்ததை கூறி மகிழ்ந்ததை  மற்றும் அவரும் மகிழ்வுடன் பென்ஷன் தொகையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு சென்றதை இன்றும் என்றும் நினைவில் அகலா ஞாபகங்கள் 


இத்தகைய சந்தோசங்களை மின்னஞ்சல் என்றைக்கும் நமக்குத் தர இயலாது என்று எழுத்தாளர் கூறுவது உண்மைதான்




Monday, January 17, 2022

சிறிய உண்மைகள்

 சிறிய உண்மைகள் - எஸ் ராமகிருஷ்ணன்


சிறிய உண்மைகள் எனும் கட்டுரைத் தொகுப்பில் ஆசிரியர் கிட்டத்தட்ட முப்பத்தி ஒன்பது கட்டுரைகளை எழுதியுள்ளார் இதில் முன்னுரையாக அவர் கொடுத்துள்ள மிக அருமையான  என்னைக் கவர்ந்த  வார்த்தைகள் சில  :


கடந்த காலத்தின் நினைவுகளால் வழி நடத்தப்படாத மனிதர்கள் எவரேனும் உண்டா என்ன ?  


குளத்தில் வீசி எறியப்பட்ட கற்கள் நீரின் அடியில் ஒன்று சேர்ந்து விடுவது போல நாம் வாசித்த விஷயங்கள் மனதினுள் ஒன்று சேர்ந்து கொள்கின்றன புறவுலகின் நெருக்கடி அதிகமாகும் போது நாம் அகத்தின் குரலால் வழிநடத்தப்பட துவங்குகிறோம் அதுவரை அகத்தின் குரலை நாம் கேட்பதில்லை இது பல்வேறு சூழ்நிலைகளில் நாம் உணரக் கூடிய ஒரு விஷயம் தான் 


கண்ணாடி தொட்டியில் நீந்தும் வண்ண மீன்களை வேடிக்கை பார்க்கும் ஒருவன் மெல்லத்தானும்  நீந்துகுவதாக உணருகிறான் மீனின் கண்களின் வழியே அவன் நீரின் ரகசியத்தை அறிந்து கொள்கிறான் அதுபோன்றதே வாசிப்பும்  என்கிறார் மிகவும் அருமையான உவமை. 



 பகுதி 1 - தெற்கிலிருந்து வரும் குரல் 

 

ஒரு நாவலை வாசிக்கையில் ஒரே நேரம் நாம் பல்வேறு வாழ்க்கையை வாழ்கிறோம் அதுதான் நாவல் வாசிப்பதற்கான முக்கியக் காரணம் என்கிறார் வில்லியம் சரோயன்


டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் நாவலை வாசிக்கும் ஒருவன் பல்வேறு மனிதர்களை நிகழ்வுகளை வரலாற்றின் பேரியக்கத்தை கண்முன்னே காண்கிறான் பேராறு ஒன்றில் நீந்துவது போன்ற அனுபவம் இது 


உண்மையில் இதனை பல நாவல்களை வாசிக்கும்போது நாம் உணர்ந்திருக்கிறோம் சாண்டில்யன் மற்றும் கல்கியின் கதைகள் வாசிக்கும்போது வரலாற்றில் அவர் கூறிய காலத்தில் நாம் வாழ்வது போன்ற ஓர் உணர்வு ஏற்படும்  மேலும் அந்த வரலாற்று கதாபாத்திரங்கள் நம் முன்னே உலவுவது போன்று நமக்குத் தோன்றும் அங்கு நடைபெறக்கூடிய போர்க்காட்சிகள் முதற்கொண்டு நம் கண் முன்னே தோன்றி நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும்.  ஜெயகாந்தனின் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் வாசித்தபோது அதில் வந்த ஹென்றிஎனும் கேரக்டர் நம்மை சுற்றி எங்கேனும் ஓரிடத்தில் நாம் பார்த்த மனிதனாகவே தோன்றியது


பகுதி 2 -  காலம் என்னும் புதிர்


காலம் பற்றிய சிந்தனை இல்லாத எழுத்தாளனே கிடையாது அதிலும் கடந்த காலத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பெரும்பான்மை படைப்பாளிகளின் சவால் கடந்த காலம் என்பது முடிந்து போன நிகழ்வுகளின் தொகுப்பு இல்லை மாறாக அவை நிகழ்காலத்தின் வேர்களாக உள்ளன தனது சொந்த வாழ்வின் வழியாக கால மாற்றத்தையே எழுத்தாளன் பதிவு செய்கிறான் என்று நோபல் பரிசு பெற்ற யாசுனாரி கவாபத்தா கூறுகிறார்


காலம் குறித்து விசித்திரமான கதைகள் இந்தியாவில் நிறைய இருக்கின்றன காலத்தை பகுக்கும்  ரகசிய முறைகளும் இருக்கின்றன ஆப்பிரிக்க பழங்குடி ஒன்றில் அவர்கள் திங்கள் செவ்வாய் என நாட்களைப் பிரித்து கொள்வதில்லை அதற்கு மாறாக நிறங்களின் வழியாக நாட்களை பிரித்துக் கொள்கிறார்கள் சிவப்பு என்பது ஒரு தினம் மஞ்சள் என்பது இன்னொரு தினம்


காலம் மனிதர்களின் உடலின் வழியே தனது அடையாளத்தை பதிவு செய்கிறது முதல் நரையை கண்டபோது திடுக்கிடாத மனிதர் யார் இருக்கிறார்கள் ? நரை என்பது காலத்தின் சிரிப்பு அது நம்மிடம் ரகசியமாக எதையோ சொல்கிறது 


சித்தம் கலங்கியவர்களுக்கு ஏது வயது? அவர்கள் காலமற்ற நிலைகளில்தான் வாழ்கிறார்கள். உண்மை இதனை நாம் அனேக நேரங்களில் கண்கூடாக காண்கிறோம்


பகுதி 3 - மணலின் விதி


 Collection of sand என்ற கட்டுரைத் தொகுப்பில் இதாலோ கால்வினோ விசித்திரமான பழக்கம் கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி எழுதியிருக்கிறார் அந்தப் பெண் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கிருந்து பிடி மண் அள்ளிக் கொண்டு வந்து அதை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு பாதுகாத்து வைப்பது வழக்கம் அந்த ஜாடியின் வெளியே அது எந்த ஊரில் எடுக்கப்பட்ட மண் என்று எழுதி வைத்துக் கொள்வார் நினைவுகளை அழியாமல் பாதுகாக்க தான் இப்படி மணலைக் கொண்டு வருகிறார் போலும் என்று கால்வினோ குறிப்பிடுகிறார் 


 இது ஒரு விசித்திரமான பழக்கம் ஒன்றும் இல்லை நாம் நம் சிறுவயதில் கூட பள்ளியிலிருந்து அழைத்துச் சென்ற சுற்றுலாக்களில்  புது ஊர்களுக்கு சென்று வரும்போது அங்குள்ள கடற்கரை மணலை கற்களை சிப்பிகளை எடுத்து வந்து இருப்போம்


கிராமப்புறங்களில் ஊரை விட்டுப் பிரியும் போது பிடிமண் எடுத்துக் கொண்டு போவார்கள் ஒரு நண்பர் சென்னையில் புது வீடு கட்டும்போது கிராமத்திலிருந்த தனது பூர்வீக வீட்டின் வாசலில் இருந்து பிடிமண் கொண்டு வந்து புது வீட்டின் முன்னால் போட்டுக் கொண்டார் 


மண்ணை நேசிப்பது என்பது ஒரு பிடிமானம் ஒரு பற்று. 


பொதுவாக பெண்கள் தாங்கள் சென்றுவரும் கோயில்களிலிருந்து ஏதேனும் ஒரு பாத்திரத்தை அந்த கோவிலின் மற்றும் ஊரின் நினைவாக வாங்கி வந்து வீடுகளில் வைத்துக் கொள்வார்கள். எனக்கும் அந்த பழக்கம் உண்டு



பகுதி-4 மழையும் குடையும்


 ரிச்சர்ட் கார்சியா என்ற கவிஞரின் கவிதை ஒன்றில் " குடை ஒரு காலத்தில் சீனர்களின் முக்கியமான ஆயுதமாக விளங்கியது ஆனால் இன்றோ அது வெறும் அலங்காரப் பொருள் குடை தன் வரலாற்றை மறந்து விட்டது "என்ற வரியை வாசிக்க முடிந்தது

 

குடையின் தண்டில் ரகசிய கத்தி கொண்ட பதினாறு வகை குடைகளை சீன அரசர்கள் பயன்படுத்தியதாக கூறுகிறார்கள் ஒரு காலத்தில் பிரெஞ்சு அதிபரின் பாதுகாப்பு படையில் குடையை முக்கிய ஆயுதமாக வைத்திருந்தார்கள் 


அம்பர்லா என்ற ஆங்கில வார்த்தை இலத்தின் மொழியில் அம்புரோஸ் எனும் சொல்லிலிருந்து உருவானது இதன் அர்த்தம் நிழல் என்பதாகும் 


பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் குடைகள் பெண்களுக்கான விஷயம் குடை இல்லாமல் பெண் வெளியே வருவது நாகரிகமற்ற செயலாகவும் கருதப்பட்டது


பகுதி ஐந்து - எழுத்தில் பறப்பது


பதின்வயதில் நாம் கற்பனையில் சஞ்சரிக்க துவங்குகிறோம் அந்தக் கற்பனையான பறத்தல்லில் இருந்தே படைப்பு மனநிலை பிறக்கிறது எழுத்தாளன் சொற்களை சேகரித்து வைத்துக் கொள்வதில்லை விண்ணிலிருந்து பெய்யும் மழை போல அது ஒரு அற்புதமாக எழுதும் நேரம் நடக்கிறது என்கிறார் ஆசிரியர்


ரே பிராட்பரிக்குக் கார் ஓட்டத் தெரியாது அத்தோடு அவர் ஒரு முறை கூட விமானத்தில் பயணம் செய்தது கிடையாது விமான பயணம் மீது பெரும் அச்சம் கொண்டவர் விமானம் என்றில்லை உயரமான எந்த இடத்திற்கு சென்றாலும் மயக்கம் வந்துவிடும் விமானத்தில் பறக்கவே பறக்காத பிராட்பரிதான் விண்வெளி பயணம் பற்றி ஏராளமான கதைகள் எழுதி இருக்கிறார் செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை பற்றி ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதி இருக்கிறார் அவரது சொந்த பயணத்திற்கும் எழுத்தில் பிறப்பதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது ராக்கெட் மூலம் விண்வெளிக்கு வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பாகவே பிராட்பரியின் கதைகளில் விண்வெளிக்கு மனிதர்கள் போய் வந்துவிட்டார்கள் ஒரு மனிதன் எப்படி பறப்பதை கற்பனை செய்யமுடியும் என்று சிலர் கேட்கக்கூடும் அதுதான் எழுத்தின் வல்லமை எழுத்தாளன் தான் அறிந்த விஷயங்களை மட்டுமே எழுத முடியும் என்றால் பிராட்பரி எப்படி விமானத்தில் பறப்பதை விண்வெளி பயணத்தை எழுத முடிந்தது


நூற்றுக்கணக்கான அறிவியல் புனை கதைகளை எழுதிய ஐசக் ஐசிமோவிற்கு கம்ப்யூட்டரை உபயோகிக்க தெரியாது அவரது நண்பர் ஒரு முறை கணினி ஒன்றை பரிசாக கொடுத்த போது அதை மேஜையின் ஓரமாக வைத்துவிட்டு தனது டைப்ரைட்டர் மெசினில் தான் ஐசிமோ எழுதினார் ரோபோக்களை எழுத்தில் உருவாக்க முடிந்த ஒரு எழுத்தாளனுக்கு வாழ்க்கையில் ஒரு கணினியை உபயோகிக்க தெரியவில்லை என்பதுதான் நிஜம்


எழுத்தாளர்கள் சொந்த வாழ்க்கையை மட்டும் எழுத வேண்டும் என்றால் அவர் பிறந்த வருடத்திற்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த ஒரு வரியை  கூட எழுத முடியாது எழுத்தாளனின் அனுபவம் என்பது ஒரு பங்கு மட்டுமே அவனது கற்பனையும் பார்த்து கேட்ட அறிந்த அனுபவங்களும் ஒன்றாகி தான் படைப்பாகின்றது. 


பகுதி-6 மொழியே அடையாளம்


நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஐசக் பாஷவிஷ் சிங்கர் இட்டிஷ் மொழியில் எழுதியவர் இவரிடம் மிகக் குறைவானவர்கள் படிக்கும் இட்டிஷ் மொழிகளில் ஏன் எழுதுகிறீர்கள்? என்று கேட்டதற்கு விற்பனையாகும் எண்ணிக்கையை வைத்து புத்தகத்தின் தரத்தை முடிவு செய்யக்கூடாது குறைவான மனிதர்கள் தன் கதையைப் படிக்கக் கூடும் ஆனால் அவர்கள் அந்தக் கதையை தனது தாய்மொழியில் படிக்கிறார்கள் மறைந்து போன நினைவுகளை மீள் உருவாக்கம்  செய்கிறார்கள் ஒரு வகையில் இந்தக் கதைகளே அவர்களின் மீட்சி மரபுத் தொடர்ச்சி என்று சிங்கர் கூறுகிறார். 


இறந்துபோன மொழியாக கருதப்பட்ட தன் மொழியை மீண்டும் மீளுருவாக்கம் செய்ய அவர்  எடுத்த முயற்சி மிகவும் அற்புதமானது.  


இட்டிஷ்மொழியில் போர்க் கருவிகள் ஆயுதங்கள் ராணுவ பயிற்சிகள் பற்றிய சொற்கள் கிடையாது என்பது வியப்பான செய்தி


 தனது மொழி ஆங்கிலத்தை விடவும் சிறப்பானது ஆங்கில மொழியில் லட்சக்கணக்கில் சொற்கள் இருக்கின்றன அதைவிட இட்டிஷ்யில் குறைவே ஆனால் இட்டிஷ் மொழியின் சொற்கள் மனிதர்களின் குணாம்சத்தை ஆளுமையை உணர்ச்சிகளை சொல்வதில் முன்னோடியாக  இருக்கின்றது என்கிறார்


கென்யாவில் புகழ்பெற்ற எழுத்தாளரான நுகூகி வா தியோங் ஓ ஆங்கிலப் பேராசிரியராக வேலை செய்கிறார் ஆனால் தனது தாய் மொழியில் தான் எழுதுகிறார் தனது எழுத்தின் வேலை அமெரிக்க மக்களை மகிழ்விப்பது இல்லை அழிந்துபோன யூதர்களின் நினைவுகளை பாதுகாப்பதே அதுவும் ஒரு மொழி அழியும் போது அதன் புராதன நினைவுகள் யாவும் சேர்ந்து அழிந்து போகின்றன என்கிறார் இவரின் மொழி மீதான பற்று நம்மை நெகிழ வைக்கிறது

 

 பகுதி 13  - நாவலின் வழி தேடுதல்



ஒரு நாவலை வாசிக்கும்போது கதைக்குள் நாம் அறிந்த மனிதர்களை தேடுகிறோம் சில நேரம் நம் உருவமே கூட தெரிவதும் உண்டு கதாபாத்திரங்களின் வழியே நம்மை நாமே அடையாளம் கண்டுகொள்ள முயல்கிறோம் பலர் இறந்து போன வாழ்க்கையை அடைய முடியாத சந்தோசங்களை கதைகளின் வழியே பெறுகிறார்கள் சில அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியில் இருந்து தப்பிக்க கதைகளை வாசிக்கிறார்கள் 


நம் மறக்க முடியாத நினைவுகளை கதைகளாக மாற்றிக்கொண்டு விடுகிறோம் நம் பள்ளி பருவத்தை பற்றி யாராவது கேட்டால் உடனே ஒரு கதை போலத்தானே சொல்ல ஆரம்பிக்கிறோம் 


கதைகளில் நன்மை வெல்ல வேண்டும் என்று பெரும்பான்மை வாசகர்கள் நினைக்கிறார்கள் காரணம் நிஜ வாழ்க்கையில் அப்படி நடப்பது குறைவு தானே


சில ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் ஒரு பேராசிரியர் இளவயதில் காணாமல் போன தனது சகோதரன் ஒருவனை ஒரு நாவலில் வரும் கதாபாத்திரத்தின் வழியாக அடையாளம் கண்டு கொண்டு அந்த எழுத்தாளரை தேடி அமெரிக்கா சென்றிருக்கிறார் எழுத்தாளரும் அதுபோன்ற ஒரு மனிதனை தான் உணவகம் ஒன்றில் சந்தித்த விபரத்தை சொல்லவே அது தன் தம்பி என்பதை கண்டறிந்து அவர்கள் ஒன்றிணைந்து ஒன்றிணைந்து இருக்கிறார்கள் அந்தப் பேராசிரியருக்கு நாவல் என்பது உண்மையை கண்டறிய உதவிய ஒரு வழிகாட்டுதல் மற்றவர்களுக்கு அது வெறும் புனைவு



Wednesday, January 12, 2022

காற்றில் யாரோ நடக்கிறார்கள்

 காற்றில் யாரோ நடக்கிறார்கள்  - 

எஸ் ராமகிருஷ்ணன் 


இந்நூல் 2008ஆம் ஆண்டு முதல் பதிப்பிற்கு வந்துள்ளது இந்நூலில் கிட்டத்தட்ட 50 அத்தியாயங்கள் உள்ளன இந்த அத்தியாயங்கள் கீழ்கண்ட தலைப்பின்கீழ் பிரிக்கப்பட்டுள்ளன அவை  இலக்கியம் கலை திரைப்படம் மற்றும் அனுபவம் பொது என்று பிரிக்கப்பட்டுள்ளது 


இதில் நான் வாசித்த - வாழ்விலே ஒரு முறை  - எனும் தலைப்பு குறித்து இங்கு எழுத போகிறேன்


இத்தலைப்பில் எழுத்தாளர் தான் சந்தித்த மிக எளிமையான மனிதர்கள் மூலம் தான் கற்றுக்கொண்ட விஷயங்களைக் குறித்து எழுதுகிறார்


 "வாழ்வின் நுட்பங்களை புத்தகங்களில் கற்றுக்கொண்டதை விட அதிகமாக என்னை சுற்றியுள்ள மனிதர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன் என்னால் மறக்கவே இயலாத சில நிகழ்வுகள் இருக்கின்றன அந்த நிகழ்வுகள் மிக முக்கியமானவை அந்த செயல்களுக்கு காரணமாக இருந்தவர்கள் எளிய மனிதர்கள் அவர்களுக்கென எவ்விதமான சிறப்பு அடையாளமும் இல்லை ஒரு சிலரின் பெயர்கள் கூட எனக்குத் தெரியாது ஆனால் அவர்களது செயல் என்றும் மறக்க முடியாதபடி நினைவில் தங்கி இருந்தது "என்று கூறுகிறார்


நிகழ்வு  1


ஒரு பழைய ஸ்கூட்டரில் 45 வயது தோற்றமுடைய ஒரு மனிதர் ஒரு பெரிய துணிப்பை ஒன்று பதியம் இட்ட பத்துப்பதினைந்து செடிகள் கொண்டு வருவார் அதனை நட்டு வைப்பதற்காக அவரே கையில் கடப்பாரையும் வைத்திருப்பார் பூங்காவினுள் சில இடங்களை தேர்வு செய்து மண்ணை தோண்டி செடியை நட்டு வைத்து விட்டு தண்ணீர் பிடித்து ஊற்றுவார் பிறகு சில நிமிடங்கள் அதைப் பார்த்தபடியே உட்கார்ந்திருப்பார் அப்போது அவர் அந்த செடிகளோடு பேசுவது போலவே தோன்றும் பின்னர் பூங்காவை ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு சென்று விடுவார் பூங்காக்களில் மட்டுமல்லாது சாலையோரங்களில் கூட இவர் இப்படி மரங்கள் நடுவதை கண்டிருக்கிறேன்

கடந்த 10 ஆண்டுகளில் நான்கைந்து முறை அந்த மனிதரை வெவ்வேறு பூங்காவில் பார்த்திருக்கிறேன்


ஒருமுறை ஜீவா பூங்காவில் அவர் மரம் நட்டு திரும்பும்போது அவர் யார் எப்படி அந்த ஆர்வம் வந்தது என்று கேட்டேன் ஒரு வார்த்தை கூட பதில் பேசவில்லை சிரித்தபடியே தன் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்று விட்டார் அந்த சிரிப்பில் என் செயல் உனக்குப் பிடித்திருந்தால் நீயும் செய்து பாரேன் என்பது ஒளிந்திருந்தது. இதனை வாசிக்கும் போது அவருடைய அந்த சிரிப்பு என் கண் முன்னே தோன்றுகிறது நாமும் ஏன் இவரை பின்பற்றக்கூடாது என்று தோன்றுகிறது 


நிகழ்வு 2


சில ஆண்டுகளுக்கு முன்பாக கும்மிடிப்பூண்டியில் இருந்து ஒரு போஸ்ட் கார்டில் ஒரு கடிதம் வந்தது அதில் தான் கண் பார்வையற்றவர்களுக்கு வாரம் ஒருமுறை பார்வையற்றவர்கள் காப்பகத்திற்கு சென்று அதைப் படித்துக் காட்டி வருவதாக குறிப்பிட்டிருந்தார் அவரை நேரில் பார்ப்பதற்காக சென்றிருந்தேன் டெய்லராக வேலை செய்து கொண்டிருந்தார் மிகச்சிறிய வீடு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தார்கள் மாதம் 100 ரூபாய்க்கு புத்தகம் வாங்கும் பழக்கம் தனக்கு இருக்கிறது என்று தன் வீட்டில் இருந்த அலமாரியில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை காட்டினார் மிகவும் ஆச்சரியமாக இருந்தது எனக்கு


 அதன் பின்னர் தங்களது பகுதியில் இருந்த ஒரு பார்வையற்ற காப்பகத்திற்கு என்னை அழைத்துச் சென்றார் 30 நபர்கள் அங்கே இருந்தார்கள் என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து எனது கதைகளில் ஒன்றை வாசித்துக் காட்டும் படி கூறினார் நானும் வாசித்துக் காட்டினேன் கதை வாசித்தலின் முடிவில் எழுத்தாளரோடு உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்றதும் அநேகமாக ஒவ்வொருவரும் கதை சார்ந்த தங்களது மனப் பதிவுகளை பகிர்ந்து கொண்டார்கள்  பிரபலமான இலக்கியச் சந்திப்புகளில் ஏற்படாத நெருக்கம் அவர்களோடு கழித்த மாலை நேரத்தில் ஏற்பட்டது இப்படி வாரம் ஒரு எழுத்தாளர் வந்து கதை வாசித்தால் நன்றாக இருக்கும் என்று பார்வையற்ற ஒருவர் ஆதங்கப்பட்ட து மனதை உருக்குவதாக இருந்தது 

 

கடிதம் எழுதிய நண்பரிடம் உங்களுக்கு இதுபோல ஆர்வம் எப்படி உண்டானது என்று கேட்டேன் அவர் ஒரு நாள் மின்சார ரயிலை அருகில் அமர்ந்திருந்த பார்வையற்றவர் நான் மெல்லிய சத்தத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருந்ததை கேட்டுவிட்டு கொஞ்சம் சத்தமாக வாசித்தால் நானும் கேட்க முடியும் என்றார் அப்படி ஆரம்பித்து இப்போது வாரம் ஒரு நாள் இரண்டு மணி நேரம் இவர்களுக்காக செலவழிக்கிறேன் என்றார்


 சொந்த குழந்தைகளுக்கே கதை படித்துச் சொல்லவும் கற்றுத்தரவும் நேரமில்லாத ஆயிரக்கணக்கான மனிதர்களின் மத்தியில் இவரைப் போன்ற ஒரு சிலரின் செய்கை என் மனதில் எப்போதும் மறக்க முடியாததாக உள்ளது என்கிறார் ஆசிரியர்.

 

 உண்மையிலேயே இவருடைய வழியை நாமும் பின்பற்றி பார்வையற்றோர் இல்லங்கள் மற்றும் அனாதை சிறார்கள் வாழுகின்ற அனாதை இல்லங்கள் முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களில் நல்ல கதைகளை அவர்களுக்கு வாசித்து காட்டுவதன்

  மூலம் அவர்களுக்கும் நமக்கும் மன சந்தோசத்தை கொடுக்கும், 


அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கூட இந்த கதை சொல்லும் நிகழ்வு வாரம் ஒருமுறை வகுப்புகளில் நடக்கும் என்றால் அவர்களின் சிந்தனையையும் நம்மால் தூண்ட இயலும்



நிகழ்வு 3


இந்நிகழ்வில் ஒரு ஆசிரியர் கிராம மக்களிடையே அடிப்படை அறிவியல் அறிவு வளர்ப்பதற்காகவும் மூடநம்பிக்கைகளைப் போக்கி அவர்களை தெளிவுபடுத்துவதற்காக காஞ்சிபுரம் ஆற்காடு மாவட்டங்களில் உள்ள கிராமம் கிராமமாக சென்று தனது சொந்த முயற்சியால் விஞ்ஞான பயிற்சிகளை செய்து வருவதாக என்னுடைய நண்பர் ஒருவர் எனக்கு தெரிவித்தார்


 அதனடிப்படையில்  காஞ்சிபுரம் அருகிலுள்ள ஐயங்கார்குளம் என்ற கிராமத்திற்கு சென்று அவரை சந்திப்பதற்காக  நான் காத்திருந்தேன் 6 மணி அளவில் அந்த ஆசிரியர் தனது பைக்கில் கையில் இரண்டு பெரிய பைகளுடன் வந்து சேர்ந்தார் ஊரின் மையமாக இருந்த இடத்தில் அதனை வைத்துவிட்டு யார் வீட்டில் இருந்தோஒரு மர மேஜை வாங்கி வந்தார் பின்னர் தன்னுடைய பையிலிருந்த ஸ்லைட் போடும் கருவி ஒன்றை வெளியே எடுத்து வைத்து தான் கொண்டு வந்திருந்த சில ஸ்லைட்டுகளை அதில் பொருத்தினார் பின்னர் எங்கிருந்தோ மின்சாரம் இழுத்து வந்து சில நிமிடங்களில் இன்னொரு பையிலிருந்த மைக்  மற்றும் ஒலிபெருக்கியை எடுத்து பேசத் துவங்கினார் பத்தே நிமிடங்களில் அந்த இடத்தில் கிராமத்தின் அனைத்து மக்களும் திரண்டனர்  

 

இந்த பிரபஞ்சம் எப்படி உண்டானது? பூமி எப்படி சுற்றுகிறது ? கிரகங்கள் என்றால் என்ன ? அமாவாசை எப்படி வருகிறது? கிரகணம் ஏன் ஏற்படுகிறது ? என்று அடிப்படையான விஞ்ஞான அறிவை கிராம மக்களுக்கு தனது ஸ்லைடுஷோ வழியாக நடத்திக்காட்டினார் இரண்டு மணி நேர நிகழ்ச்சி ஊரே தன்னை மறந்து போயிருந்தது 


ஆயிரம் புத்தகங்கள் கற்றுத்தரும் பாடங்களை விடவும் இந்த எளிய மனிதர்கள் செய்யும் செயல்கள் எனக்கு அதிகம் கற்றுத் தந்திருக்கின்றன இன்னும் சொல்வதாயின் இவர்களின் நிஜமான அக்கறை தான் இன்றும் வாழ்வை நம்பிக்கை கொள்ள வைத்திருக்கின்றன என்று ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார். 


 இயற்கையை நேசிக்கும் அந்த 45  வயது மனிதரைப்போல் மற்றும் பார்வையற்றவர்களுக்கு தனது வாசிப்பின் மூலம் அவர்களின் சிந்தனையை தூண்டிவிடும் அந்த தையற்காரரை போல் மற்றும் கிராம மக்களிடையே உள்ள மூட நம்பிக்கையை அழித்து அடிப்படை விஞ்ஞான அறிவை விதைக்க முயன்று கொண்டிருக்கும் அந்த ஆசிரியரை போல் தன்னால் இயன்ற செயல்களை செய்யும் இத்தகைய மனிதர்கள் இன்னும் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள் நாமும் ஏன் அவர்களில் ஒருவராக இருக்க கூடாது? 

Tuesday, January 11, 2022

கோகிலவாணி யை யாருக்கும் நினைவிருக்காது

 கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது   - 

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்


இந்தக் கதையை படித்த போது நானும் ஒரு பெண் எனும் நிலையில்  மனமுடைந்து போனேன் கோகிலவாணி போல துன்புற்ற துன்புருகின்ற பெண்களை நாம் வாழ்வில் நேருக்கு நேர் நிறைய காண்கிறோம் ஆனால் நம்மால் என்ன செய்ய முடிகிறது?  குறைந்தபட்சம் அவர்களுடைய மனோ நிலையை புரிந்து கொண்டு அவர்களை தவறாக பேசாது இருத்தலே அவர்களுக்கு நாம் செய்யும் உதவி


 இந்த சமூகத்தில் ஒரு ஆண்  சுய ஒழுக்கமின்றி   செய்யக்கூடிய வன்மத்தால் ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை இந்தக் கதை எடுத்துரைக்கிறது ஆசிரியர் அந்தப் பெண்ணின் மனநிலையில் இருந்து இந்தக் கதையை எழுதியுள்ளார் 


இந்தக்கதையின் நாயகி கோகிலவாணி அவளுக்கு 15 வயது ஆகும் போது காதலிப்பதை பற்றிய கற்பனைகள் மனதில் புகுந்து விடுகின்றன பள்ளி நேரத்திலும் அவள் தோழிகளும் ரகசியமாக காதலைப்பற்றி பேசுகிறார்கள் அப்போது சாலையில் பயணத்தில் பொது இடங்களில் பதின்வயது இளைஞர்களை காணும்போது இதில் யார் தன்னை காதலிக்க போகின்றனர் என்று நினைக்க ஆரம்பிக்கிறாள்  அவளுடைய அறியாமையை நினைத்து நாம் இந்த இடத்தில் வருத்தப்பட வேண்டும்.   பதின்வயதில் ஆண் பெண் இருவருக்கும்  சரியான வழிகாட்டுதல் இல்லாமையினால் ஏற்படக்கூடிய உணர்வுதான் இது


பத்தாவது வகுப்போடு படிப்பை முடித்துக்கொண்டு சிலமாதங்கள் அருகாமையில் உள்ள எஸ்டிடி பூத்தில் வேலை செய்கிறாள் எஸ்டிடி பூத் நடத்தும் சொக்கநாதன் தினசரி அவளை கடைக்கு அனுப்பி சிகரெட் வாங்கி வரச் சொல்கிறான் அவள் ஒரு பெண் என்றும் யோசிக்காமல் அவள் முன்பாகவே பச்சை பச்சையாக போனில் பேசுகிறான் தன்னை ஒரு பெண்ணாக கூட அவன் மதிப்பது இல்லையே என்ற ஆதங்கம் கோகிலவாணிக்கு நிறைய இருக்கிறது


 இந்நிலையில் எஸ்டிடி பூத் உரிமையாளர் மாம்பழத்தில் புதிதாக  தொடங்கியிருந்த ஜெராக்ஸ் கடைக்கு அவளை இடம் மாற்றுகிறான் அப்போது அவள் தினமும் மின்சார ரயிலில் போய் வர வேண்டிய அவசியம் ஏற்படுகிறது அப்போது மகேஷ் எனும் பையனை சந்திக்கிறாள் இரண்டு நாட்களில் இரண்டு பேரும் பேசி பழகி விட்டார்கள் அவனும் ஒரு ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன் தான் தினமும் அவளுக்காக டிபன் பாக்ஸில் ஏதாவது ஒரு உணவு கொண்டு வந்து தருவான் பக்கத்தில் உட்கார்ந்தால் கூட அவள் மீது கைபடாமல் நடந்து கொள்கிறான் அவள் போட்டிருக்கும் புதிய உடையோ பாசியோ பொட்டோ ஹேர் கிளிப் எதுவாக இருந்தாலும் உனக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கிறது என்று அவளை பாராட்டுகிறான் அதனால் தான் ஒரு நல்லவனை காதலிப்பதாக  பெருமை கொள்கிறாள் கோகிலவாணி. 


இந்நிலையில் ஒரு நாள் அவள் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது நேர் எதிரில் நின்று கொண்டிருந்த ஒருவன் அவளை பார்த்து கை அசைக்கிறான் தன்னுடைய உள்ளங்கையில் ஐ லவ் யூ   யுவர்ஸ்  துரை என்று எழுதி காண்பிக்கிறான் ஒரு நாள் அவள் ரயிலை விட்டு இறங்கி நடக்கும்போது அவளிடம் வந்து உனக்காகத்தான் தினம் தாம்பரத்தில் இருந்து ரயிலில் வருகிறேன் என்று அவளிடம் கூறுகிறான் மற்றொரு நாள் படத்துக்கு போவோமா என்று கேட்கிறான் அப்போது கோகிலவாணி எனக்கு இதெல்லாம் பிடிக்காது என்று சொல்கிறாள் அப்போ நீ என்ன லவ் பண்ணலையா என்று கேட்கிறான் நான் எதுக்கு உன்ன லவ் பண்ணனும் என்று கோகிலவாணி கேட்கிறாள் பின்னர் அந்த பெண் சொல்கிறாள் நான் மகேஷ் என்பவரை லவ் பண்ணுகிறேன் பிரச்சனை பண்ணாமல் போய்விடு என்கிறாள் அப்போது துரை அவளை பச்சை பச்சையாக திட்டுகிறான் திட்டி விட்டு நீ என்னை லவ் பண்ணித்தான் ஆகணும் நான் முடிவு பண்ணிட்டேன்  அப்படின்னு  அவ கிட்ட சொல்கிறான் 


இதனை கோகிலவாணி தான் விரும்பும் மகேஷிடம் சொல்கிறாள் மகேஷ் அவனிடம்தான் பேசுவதாக சொல்கிறான் ஆனால் துரை மகேஷ்சை அடித்து விடுகிறான் இதனால் அவன் இவளை நேரடியாக பார்த்து இது நமக்கு ஒத்து வராது விலகிக் கொள்வோம் என்கிறான் கோகிலவாணி மனமுடைந்து போகிறாள்


மீண்டும் துரை கோகிலவாணி இடம் வந்து நான் மட்டும் தாண்டி உன்னை லவ் பண்ணுவேன் வேற யாரு உன்னை லவ் பண்ணினாலும் நீ செத்தே உன் மேல ஆசிட்  ஊத்துவேன் பார்த்துக்கோ என்று கடுமையாக திட்டுகிறான் நீ என்ன லவ் பண்றியா இல்லையான்னு இப்பவே தெரியனும் அப்படின்னு சொல்லி மிரட்டுகிறான் அதுமட்டுமின்றி இரண்டு நாட்கள் கழித்து அந்தப் பெண்ணின் மீது ஆசிடை ஊற்றுகிறான் கொதிக்கும் நெருப்பு முகத்தில் நுழைத்து விட்டது போல் எரிய ஆரம்பித்தது துரை கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஓடுவது மட்டும்தான் அவளுக்கு தெரிந்தது அவள் முன்பிருந்த உலகம் மெல்ல புகைமூட்டம் கொண்டு மங்கத் துவங்கியது


கோகிலவாணி 6 வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள் அவள் மருத்துவமனையில் இருந்த நாட்களில் அவளது அப்பாவும் அம்மாவும் உறவினர்களும் மாறி மாறி அவளை மோசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டே இருக்கிறார்கள் 


பெண் மருத்துவர் அவள் முகத்தை துடைத்தபடியே உனக்கு எத்தனை 

லவ்வர் டி என்று நக்கலாக கேட்கிறார் மருந்தாளுநர் அவள் முகத்தில் உள்ள காயத்தை துடைத்தபடியே இனிமே உன்னை ஒரு பையனும் திரும்பி பார்க்க மாட்டான் நீ எங்கு வேணாலும் போகலாம் எந்த நேரம் வேணாலும் வீட்டுக்கு வரலாம் உன்னை யாரு பாலோ பண்ண போகிறார்கள் என்று நக்கல் அடிக்கிறான் கோகிலவாணிக்கு அவர்கள் கூறும்போது ஆத்திரமாக வந்தாலும் வாய் திறந்து பேசவில்லை நாம் செத்தே போயிருக்கலாம் என்று யோசிக்கிறாள் வாழ்க்கையை எப்படி கடந்து செல்லப் போகிறோம் என்று நினைத்து வேதனை கொள்கிறாள்  அந்த வலி ஆசிடின் கொதிப்பை விட அதிகமாக இருந்தது. 


அவள் சாவகாசமாக சுற்றி திரிந்த உலகம் ஒரு நாளில் அவளிடம் இருந்து பிடுங்கி எறியப் பட்டது தோழிகள் குடும்பம் படிப்பு வேலை அத்தனையும்  அவளிடமிருந்து விலகிப் போய் விட்டது மருந்து மாத்திரைகளும் களிம்பு மருந்துகளும் அவளது அன்றாட உலகமாய் இருந்தது அழுது ஓய்ந்து ஒடுங்கிப் போகிறாள்


 இந்நிலையில் ஆசிரியர் அவள் தன்னை பற்றி யோசிப்பதை இவ்வாறு விளக்குகிறார் பல நேரங்களில் தன்னை கழிப்பறை மூலையில் வீசி எறியப்பட்ட பாதி எரிந்து போன தீக்குச்சி போலவே உணர்ந்திருக்கிறாள் தான் ஒரு தலைப்பு செய்தியாக போகிறோம் என்று கோகிலவாணி ஒரு நாள் கூட நினைத்துக் பார்த்திருக்க மாட்டாள் கோகிலவாணி தலைப்பு செய்தியாக அதற்கு நாம் காரணமில்லை என்று ஒதுங்கிக் கொள்ள முடியாது அவள் நம்மை குற்றம் சொல்லவில்லை ஆனால் அவள் நம்மை கண்டு பயப்படுகிறாள் நம் யாவரையும் விட்டு விலகிப் போய் இருக்கிறாள்


உபாசனா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அவளை தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக் கொண்ட போது அவளுக்கு வயது 32 அது ஒரு பார்வையற்றவர்களுக்கான சேவை செய்யும் நிறுவனம் பார்வை குறைபாடு கொண்டவர்களே அங்கு பெரும்பாலும் பணியாற்றிக் கொண்டிருந்தனர் அதனால் யாரும் அவளைக் கேலி செய்வார்கள் என்ற பயமின்றி   அவள் வேலைக்கு போய் வர துவங்கினாள்


சென்ற வருடத்தில் ஒரு நாள் கடற்கரையில் தற்செயலாக துரையை பார்க்கிறாள் அவனுக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது ஏனோ துறையின் மனைவியிடம் போய் பேச வேண்டும் போல் இருந்தது அவளுக்கு அந்தக் குழந்தையையும் கொஞ்சலாமா என்று கூட தோன்றியது ஆனால் அவன் இவளைப் பார்த்ததும் மனைவியிடம் ஏதோ சொல்லி அங்கிருந்து எழுந்து சென்று விட்டான்


 அந்த நிலையில் கோகிலவாணி யோசிக்கிறாள் நாம்தானே துரை மீது கோபமும் வெறுப்பும் கொள்ள வேண்டும் அவன் ஏன் என்னை பார்த்த உடன் எழுந்து ஓடுகிறான் பயமா கடந்தகாலத்தில் நினைவுகள் எதுவும் தன் முன்னால் வந்து நின்று விடக்கூடாது என்ற பதைபதைப்பா என்ற யோசனையுடன் அவர்கள் போவதையே கோகிலவாணி பார்த்துக்கொண்டே இருக்கிறாள்


 ஒரு பெண் மீது ஆசிட் அடித்தவன் என்று அவனைப் பார்த்தால் யாராவது சொல்வார்களா என்ன அவனுக்கு ஆசிட் வீசியது என்பது ஒரு சம்பவம் ஆனால் கோகிலவாணிக்கு? 


உலகம் தன்னை கைவிட்டு யாருமற்ற நெருக்கடிக்கு உள்ளாக்கி வைத்து இருப்பதை உணர்ந்து கொண்டவளை போல நீண்ட நேரத்திற்கு பிறகு ரயில் நிலையத்தை நோக்கி தனியே நடக்க ஆரம்பித்தாள் எதற்காக இவ்வளவு குரூரமான  தண்டனை தனக்கு வழங்கப்பட்டது என்பதை நினைத்து

 அவள் அழுதுகொண்டே இருக்கிறாள்


Monday, January 10, 2022

புத்தனாவது சுலபம்

 புத்தனாவது_சுலபம்

எஸ். ராமகிருஷ்ணன்


இத்தொகுப்பில் மொத்தம் 16 கதைகள் இருக்கிறது இவை அனைத்துமே கதைகளா அல்லது உண்மை சம்பவங்களா என நம்மை நினைத்து வியக்க வைக்கிறது 


அதிலும் புத்தனாவது சுலபம் எனும் கதை ஒரு  51 வயது தந்தைக்கும் 24 வயது பையனுக்கும் இடையே நடக்கும் உணர்வு  போராட்டத்தை எடுத்துரைக்கிறது இத்தகைய தந்தை-மகன் களை நாம் நம்முடைய வாழ்வில் இயல்பாக நிறைய இடங்களில் சந்தித்திருப்போம்


கதையில் வரும் தந்தை பி காம் படித்தவர் கூட்டுறவு பயிற்சி கல்லூரியில் சிறப்பு பயிற்சி முடித்து பால் வளத் துறையில் வேலை செய்கிறார் உயர் பதவிக்காக தபாலில் எம் ஏ தமிழ் படித்திருக்கிறார் அவருடைய மகன் அருண் பொறியியல் கல்லூரியில் படித்தவன் கடைசி வருடத்தில் கல்லூரியிலிருந்து வெளியே வந்துவிட்டான் அவனுடைய கல்லூரி படிப்பை முழுமையாக முடிக்கவில்லை


அருண் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது நண்பனின் பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறான் அதனைக் கண்ட அவனுடைய தந்தை நீ எப்படி பைக் ஓட்டலாம் என்று சண்டையிடுகிறார் வீட்டில் பிரச்சனை ஆரம்பமாகிறது ஆனால் அவன் அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறான் பைக் ஓட்டினா தப்பா?  


 உண்மையில் பைக்

என்பது என் வீட்டிற்கும் இந்த பரந்த உலகிற்குமான  இடைவெளியை குறைத்து விடும் வீட்டிலிருந்து பையனை முடிவில்லாத உலகின் வசீகரத்தை காட்டி இழுத்துக்கொண்டு போய் விடும் என்று பயப்படுகிறார் ஆனால் அவருடைய மனைவியிடம் விபத்து குறித்த பயம் என்று ஒரு பொய்யை சொல்லி நம்ப வைக்கிறார்


அருணின் பள்ளி வயதில் அவனுடைய அம்மா அவனைக் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருப்பாள் நான் கவலைப்பட்டது இல்லை ஆனால் அவன் படிப்பை முடித்த நாளிலிருந்து நான் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறேன் அவனது அம்மா கவலைப்படுவதை நிறுத்திவிட்டாள் மிகுந்த சினேக பாவத்துடன் அவனது தரப்பு நியாயங்களுக்காக என்னோடு சண்டையிடுகிறவளாக மாறி போய் விட்டாள் இது எல்லாம் எப்படி நடக்கிறது என்று வியப்புடன் யோசிக்கிறார். 


அவனது அம்மாவிற்கு அருண் பைக் ஓட்டுவது பிடித்திருக்கிறது அவள் பல நேரங்களில் அருண் பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டு கோவிலுக்கு போகிறாள் கடைகளுக்கு போகிறாள் அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே போகிறார்கள் ஆனால் என்னால் அப்படி பைக்கில் போக முடியவில்லை ஒரு நாள் என்னை அலுவலகத்திற்கு பைக்கில் கொண்டு விட்ட போது கூட அவன் இயல்பாக பைக் ஓட்டவில்லை  என்று கூறுகிறார். 


சில சமயங்களில் ஒரு வாரகாலம் அருண் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி போய் விடுவான் எங்கே போகிறான் என்று கேட்டால் என் மனைவி பிரண்ட் பார்க்க போயிருப்பான் என்று சொல்வாள் பையன்களுக்காக  பொய் சொல்வதை அம்மாக்கள் விரும்புகிறார்கள் என்று சொல்கிறார்


அருண் எங்களோடு தான் இருக்கிறான் ஆனால் எங்கள் வீட்டிற்குள் அவனுக்காக தனித்தீவு ஒன்று இருப்பதைப் போலவே நான் உணர்கிறேன் அங்கே அவனது உடைகள் மட்டுமே காயப் போட பட்டிருக்கின்றன அவனது பைக் நிற்கிறது அவனுடைய மேஜையில் லேப்டாப் ஓடிக்கொண்டிருக்கிறது அவன் வாங்கி வளர்க்கும் ஒரு மீன்குஞ்சு  தொட்டி இருக்கிறது வேறு ஒரு மனிதருக்கு அந்த தீவில் இடம் கிடையாது 


டேபிள் வெயிட்டாக உள்ள கண்ணாடி கோளத்தினுள் உள்ள மரத்தை நம்மால் எப்படி கண்ணால் மட்டுமே பார்க்க முடியுமோ கையால் தொட முடியாதோ அப்படியான ஒரு இடைவெளியை நெருக்கம் கொள்ளவே முடியாத சாத்தியமின்மையை அருண் உருவாக்கி வைத்திருக்கிறான் அப்படி இருப்பது எனக்கு பிடிக்கவில்லை என்று புலம்புகிறார். 



இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் தந்தை நம்மிடம் ஒரு உண்மையை கூறுகிறார் நானும் இளைஞனாக இருந்தபோது இதே குற்றச்சாட்டுகளை சந்தித்திருக்கிறேன் நானும் பதில் பேசாமல் வீட்டை விட்டு போய் இருக்கிறேன் இன்றும் அதை நான் நன்றாகவே உணர்ந்து இருக்கிறேன் நான் செய்ததை தான் என் மகனும் செய்கிறான் இருப்பினும் ஒரு தந்தையாக அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை நீங்கள் தகப்பன் ஆகும் நாளில் இதை உணர்வீர்கள் என்கிறார்


புத்தகத்தில் ஒருவரி...


"ஒவ்வொரு தந்தையும் புத்தனை பாதுகாத்த தந்தையைப் போல உலகிடமிருந்து தன் பிள்ளையைப் பாதுகாக்கவே செய்கிறான்... ஆனால் உலகம்தான் கடைசியில் வெல்லுகிறது"  

ஆம் "புத்தனாவது சுலபம்தான்"

ஏனெனில்... இங்கே ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அவர்களுக்கு நாள்தோறும் ஏதாவது போதித்துக்கொண்டே இருக்கிறது...


மிகவும் அருமையான கதை  அந்த தந்தை மனம்விட்டுப் புலம்பும்  அந்த வார்த்தைகள் அனைத்தும் நம் மனதினுள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது

.

Sunday, January 9, 2022

 நூலக மனிதர்கள் 

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்


 அத்தியாயம் 4 - புத்தக திருடன்


இந்த அத்தியாயத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒரு 30 வயது நபர் இரண்டு புத்தகங்களை நூலகத்திலிருந்து திருடி செல்கிறார். 

 மனம் போல் வாழ்வு என்ற ஜேம்ஸ் ஆலன் புத்தகம் மற்றும் எம் எஸ் உதயமூர்த்தி அவர்கள் எழுதிய எண்ணங்கள் எனும் புத்தகம் இவை இரண்டுமே சுய முன்னேற்றம் தொடர்பான நூல்கள் . 


புத்தகம் திருடி பிடிபட்ட ஒருவனை அன்றுதான் முதன் முதன்முதலாக பார்த்தேன் வேலையில்லாமல் இருப்பவனின் தோற்றம் அழுக்கடைந்து போன பேண்ட் முழுக்கை சட்டை ஆறடியை தொடும் உயரம் ரப்பர் செருப்புகள்  இதுதான் அந்த நபரின் தோற்றம் என்று எழுத்தாளர் ராமகிருஷ்ணன் விளக்குகிறார். 


புத்தகம் வாங்க முடியாத அவனின் நிலைதான் திருட வைக்கிறது அது தவறுதான் என்றாலும் திருடி படிக்கும் அளவு அவனுக்கு வாசிப்பில் விருப்பம் இருப்பதை யோசிக்க வேண்டியிருந்தது


புத்தகத் திருட்டு நடக்காத நூலகமே இல்லை சென்னை புத்தக கண்காட்சியில் எங்கள் அரங்கிற்கு ஒருவன் வருகை தந்து எனது உபபாண்டவம் நாவலை திருடிக்கொண்டு போனதோடு அப்படி திருடி வந்ததாக பத்திரிகைகளில் பேட்டி கொடுத்திருந்தான் இப்படியான வாசகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று ஆசிரியர் கூறுகிறார்


புத்தகங்களை சொந்தமாக்கிக் கொள்வதில் அடையும் மகிழ்ச்சி அபூர்வமானது அதை எளிதாக விளக்கி சொல்லிவிடமுடியாது சிலர் புத்தகத்தை இரவல் தரவே மாட்டார்கள் அது புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் சிலரோ புத்தகத்தை கடனாக வாங்கி சென்றால் ஒருபோதும் திருப்பித் தர மாட்டார்கள்


 இது உண்மை எனக்கும் இதே போல் நடந்து இருக்கிறது நான் வாங்கிய காற்றில் யாரோ நடக்கிறார்கள் என்கிற திரு ராமகிருஷ்ணன் அவர்களின் புத்தகம் மற்றும் வாழ நினைத்தால் வாழலாம் எனும் டாக்டர் ருத்ரன் எழுதிய புத்தகமும் என்னிடம் இருந்து யாரோ வாங்கிச் சென்று விட்டார்கள் இப்படி நிறைய புத்தகங்களை நான் இழந்திருக்கிறேன்

புத்தகங்கள் தொலைந்து போகும் போது மிகவும் வருத்தமாக இருக்கும்


ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ் ஒன்றில் இப்படி நூலகங்களில் இருந்து புத்தகங்களை தேடி சேகரித்து ஒருவன் தனக்கென சிறிய நூலகம் ஒன்றை அமைத்துக் கொண்டது செய்தியாக வந்திருக்கிறது இதுதான் உலகின் விசித்திரமான நூலகம் என்று ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார்கள்


புத்தக அங்காடி களை அரசு உருவாக்கி மலிவு விலையில் நல்ல புத்தகங்களை தரலாம் ஒரு ஊருக்கு ஒரு புத்தக அங்காடியை அரசே நடத்தினால் பதிப்பாளர்கள் மற்றும் ஊரில் உள்ள மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராக கூடியவர்கள் ,பொதுமக்கள் அனைவரும் பயன் பெற இயலும் புத்த அங்காடிளை அரசசே ஏன் துவஙகக் கூடாது என்று இங்கு எழுத்தாளர் கேட்கிறார் இது  உண்மையிலேயே வரவேற்கத்தக்க கேள்வி. 


கேரளாவில் எழுத்தாளர்களுக்கான கூட்டுறவு சங்கம் இருக்கிறது அவர்களே நூல்களை வெளியிடுகிறார்கள் மாவட்ட நூலகங்களில் தனக்கு தேவையான நூல்களை வாங்கிக் கொள்கிறார்கள் புத்தக கடைகள் இல்லாத கோயில் வளாகங்களே அங்கு இல்லை இதை ஏன் நாமும் பின்பற்றக்கூடாது சிந்திக்க வேண்டிய கேள்விதான் இது


அத்தியாயம் 5  - கதையின் முடிவு


ஒரு நாவலுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் கஷ்டங்கள் தோல்விகள் வரலாம் ஆனால் கதையின் முடிவு எப்போதும் சுகமாக இருக்கவேண்டும் என்ற ஆழமான நம்பிக்கை வாசகர்கள் மனதில் இருக்கிறது சுபமான முடிவு இல்லாத கதைகளை வாசகர்கள் விரும்புவதில்லை காதல் கதையாக இருந்தால் மட்டும் துயரமான முடிவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது


கதைகளைப் போல வாழ்க்கை இல்லை என்று வாசகர்களுக்குத் தெரியும் ஆனால் வாழ்வில் கிடைக்காத மகிழ்ச்சி கதைகளில் கிடைக்கட்டும் என நினைக்கிறார்கள் அது தவறு இல்லை ஆனால் எல்லா கதைகளுக்கும் சுபமான முடிவை எழுதமுடியாது . நிஜம் அப்படி இல்லையே 


வெற்றிகளில் இருந்து கற்றுக் கொள்வதைவிட தோல்வியிலிருந்து அதிகம் கற்றுக் கொள்கிறோம் ஆசிரியரின் இக்கூற்று  மிகவும் எதார்த்தமான உண்மை என்று எனக்கு தோன்றுகிறது


எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தான் சந்தித்த மனிதர்களை குறித்து இங்கு விளக்குகிறார் . நாவல்களை மட்டுமே வாசிக்கும் ஒருவரை நானறிவேன் 50 வயது இருக்கும் ஒரு சாயலில் டி எஸ் பாலையா போன்ற தோற்றம் இருக்கும் அவசர அவசரமாக தான் நூலகத்திற்கு வருவார் நாவல்களை மட்டும்தான் எடுத்து படிப்பார் ஆங்காங்கே புத்தகத்தில் அடிக்கோடிட்டு அவரது கருத்தை கோபமாக எழுதியிருப்பார் அவரைப் பொருத்தவரை நாவல் சுலபமாக முடிய வேண்டும் இல்லாவிட்டால் அதை கடுமையாக விமர்சித்து எழுதி விடுவார் எழுத இடம் இல்லை என்றால் அந்த கடைசி பக்கத்தை கிழித்து எறிந்து விடுவார் இது அவரது வழக்கம் இதற்காக எத்தனையோ முறை நூலகத்தில் அதன் பொறுப்பாளர் இடம் திட்டு வாங்கியிருக்கிறார் 


அவருக்கு நாவல் என்பது வெறும் கதை இல்லை குடும்பத்து மனிதர்களைப்போல நிஜமானவர்கள் அவர்களுக்கு நடக்கிற சுகதுக்கங்களை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது கதாபாத்திரங்களுக்கு முடிவில் நல்லது நடக்கும் போது அது தனக்கே நடப்பது போல் நினைத்துக் கொள்கிறார்


நல்லது நடக்க வேண்டும் என்ற நம்பிக்கை மனித மனதில் ஆழமாக பதிந்து போய் இருக்கிறது அதுவும் கதைகளில் நல்லது நடக்காத போது அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை கிராமத்தில் நடக்கும் பாவைக்கூத்து கூட ராமாயணம் பட்டாபிஷேகத்துடன் முடிந்துவிடும் சீதையை ராமன் சந்தேகம் கொண்டு காட்டுக்கு அனுப்பியது , கானகத்தில் இன்னலுற்ற லவன், குசன் கதையோ சொல்லமாட்டார்கள்


நாவலின் கடைசி பக்கத்தை கிழிக்கும் மனிதருக்கு வாழ்க்கையில் இவ்வளவு பேரை சந்திக்கவும் அவர்களுடன் உறவாடவும் வாய்ப்பு  கிடைத்திருக்காது நாவல் தான் அவருக்கு பெரிய உலகை அடையாளம் காட்டியது


 சின்னஞ்சிறு ஊர்களில் வாழ்பவர்களுக்கு பெரிய உலகம் புத்தகம் வழியேதான் அறிமுகமாகிறது இன்றைக்கும் நாவலை மட்டுமே வாசிக்கும் பலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு புத்தகம் என்றாலே நாவல்தான் போர்முனையில் பதுங்குகுழியில் இருந்தபடியே நாவல் வாசித்த ராணுவ வீரர்களை பற்றி படித்திருக்கிறேன் அவர்கள் நாவல் முடியக் கூடாது என்று ஆசைப்படுவார்களாம் என்று திரு ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார்


ஒரு நாவலை ஆண் வாசிப்பதற்கும் பெண் வாசிப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது பெண்கள் நாவலில் உள்ள சின்னஞ்சிறு விஷயங்களைக்கூட நுட்பமாக கவனிக்கிறார்கள் அதேநேரம் சுபமான முடிவு தான் கதைகள் இடம் பெற வேண்டும் என்று கறாராக சொல்வதில்லை பெண்களின் வாழ்க்கையில் சுகமும் சந்தோசமும் அரிதானது ஆகவே அவர்கள் கதையில் வரும் கஷ்டங்களை ஒரு பெண் எப்படி எதிர்கொள்கிறாள் எவ்வாறு எதிர் வினை புரிகிறாள் எந்த இடத்தில் அவள் அங்கீகரிக்கப்படுகிறாள் எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள் என்பதையே கவனிக்கிறார்கள் நாவலில் தனக்கு பிடிக்காத விஷயங்களை கடந்து போய் விடுகிறார்கள் நாவலின் முடிவுக்கு அப்பாலும் கதை இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரிகிறது எழுத்துச் சித்தர் ஜெயகாந்தன்  அவர்களின் கதைகளில் வரும் பெண் கதாபாத்திரங்களில் பெண்களின் சிந்தனையில் இந்த தெளிவை பார்க்கலாம்


 என்ன ஒரு சிந்தனை எழுத்தாளர் திரு ராமகிருஷ்ணன் அவர்களுக்கு! உண்மையிலேயே பெண்களின் மனம் எதனை சிந்திக்கும் எப்படி சிந்திக்கும் என்பதை மிகவும் எதார்த்தமாக  எழுதி இருக்கிறார். 


இறுதியில் புத்தகத்தோடு ஒருவன் கொள்ளும் உறவு விசித்திரமானது ஆழமானது அதனால்தான் எழுத்தாளனிடம் வாசகன் கோபமாக பேசும் போதும் கடுமையாக விமர்சனம் எழுதும் போதும் உரிமையாக கண்டிக்கும் போதும் புன்முறுவலுடன் ஏற்றுக் கொள்கிறார்கள்

 வாசகனை ஒருபோதும் எதிரியாக நினைத்தது இல்லை . எதன் மீது தான் மனிதர்கள் கோபம் கொள்ளவில்லை புத்தகம் மட்டும் விதிவிலக்கா என்ன என்று இந்த அத்தியாயத்தை முடித்துள்ளார் . 


நன்றி


சரோஜினி கனகசபை

Saturday, January 8, 2022

 நூலக மனிதர்கள் 

எஸ் ராமகிருஷ்ணன் 


அத்தியாயம் 3 - லாசராவின் வாசகி 


இந்த அத்தியாயத்தில் தோழர் ராமகிருஷ்ணன் அவர்கள் லா.சா.ராவின் தீவிர வாசகியான 

ஒரு பெண்ணை குறித்து எழுதுகிறார் .


ஒரு முறை எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் நூலகத்தில் புத்தகம் படிக்க சென்றிருந்தபோது ஒருவர் நூலகரிடம் லா.சா.ராவின் அபிதா இருக்கிறதா ?என்று கேட்கிறார் உடனே அந்த நூலகர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களை காட்டி இவரிடம் உள்ளது என்று சொல்கிறார் புத்தகத்தை எடுக்க வந்த அந்த மனிதர் 'படிச்சிட்டு ரிட்டன் பண்ணிடுங்க என் மக படிக்கணும்னு ஆசை படுறா 'என்கிறார்


 அவர் சைக்கிளில் பூ விற்பவர் அவரிடம் உங்களுக்கு லா.சா.ராவை அவ்வளவு பிடிக்குமா என்று ராமகிருஷ்ணன் அவர்கள் கேட்கிறார் அதற்கு அவர் 

 'நான் ஒரு கைநாட்டு படிக்கத் தெரியாது ஆனா என் மக படிப்பா கல்யாணமாகி ரைஸ்மில் தெருவில் குடியிருக்கா கைக்குழந்தையை வச்சுக்கிட்டு வீட்டில் இருக்கிறவ அதான் பகல்ல புக்கு படிச்சிட்டு இருப்பா ' என்கிறார்

 

எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் கீழ்க்கண்டவாறு அந்தப் பெண்ணை குறித்து எழுதுகிறார் பூக்காரரின் 

மகளுக்கு லா.சா.ரா.வை பிடிக்கும் என்பது சந்தோஷம் அளித்தது அந்தப் பெண்ணின் பெயர் , என்ன படித்திருக்கிறார் என்றோ நான் கேட்டுக் கொள்ளவில்லை ஆனால் அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அன்று மாலையே அப்புத்தகத்தை நூலகத்தில் திருப்பிக் கொடுத்தேன் உடனே அந்த உடனே அந்த பூக்கார படித்துவிட்டீர்களா என்று கேட்கிறார் அதற்கு நான்  ஏற்கனவே படித்திருக்கிறேன் லா.சா.ரா திரும்ப திரும்ப படிக்க வேண்டியவர் பிடித்தமான சங்கீதத்தை அடிக்கடி கேட்பது போல எப்போதும் வாசித்துக் கொண்டே இருக்கலாம் என்று ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார் அப்போ பூக்காரர் என் மகளும் அப்படித்தான் சொல்றா அவளுக்கு வேற புத்தகம் ஒன்றும் பிடிக்கல தான். 

லா. சா. ரா மட்டும் தான் படிக்கிறாள் மகளுக்கு கூட ஜனனி தான் பேர் வச்சிருக்கா புதுசா ஏதாவது லா.சா.ரா புத்தகம் வந்திருக்கான்னு கேட்டுகிட்டே இருக்கா உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க தம்பி என்கிறார் ஆசிரியரும் நிச்சயம் சொல்கிறேன் என்கிறார்


 யாரோ ஒரு பெண் வீட்டில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு இத்தனை ஆசையாக படிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது இதுதான் உண்மையான வாசிப்பு அந்த தந்தையிடம் பணம் இல்லை ஒருவேளை கையில் நிறைய பணம் இருந்தால் அவளுக்காக அத்தனை புத்தகங்களையும் வாங்கி கொடுத்து விடுவார் அவர்களைப் போன்றவர்களுக்கு தான் நூலகம் கைகொடுத்தது என்கிறார் .

 

லா சா.ரா குறித்து ஆசிரியர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் எழுத்துக்களில் ஒரு துளி வெறுப்பு கிடையாது துவேசம் கிடையாது எவரையும் பற்றிய புகாரும் கிடையாது எளிய சொற்களைக் கூட மந்திரங்கள் ஆக்கிய மகத்தான படைப்பாளி அவர் வாழ்வின் உண்மைகளை கவித்துவமாக எழுதியவர் எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காமல் எழுதிக் கொண்டிருந்தவர் உலகளவில் கொண்டாடப்பட வேண்டிய எழுத்தாளர் இதனை அவரது வாசகர்கள் நன்றாக  உணர்ந்து இருக்கிறார்கள்


லா சாரா தன்னுடைய எழுத்து குறித்து கீழ்க்கண்டவாறு கூறுகிறார் 


"என்னுடைய எழுத்தில் சங்கீதத்தின் ஈடுபாடு இருக்கிறது சங்கீதம் ஓவியம் எழுத்து போன்ற எல்லா கலைகளும் எதை நோக்கி நகர்கின்றன ? மௌனத்தை நோக்கிதான் மௌனம்தான் எனக்கு எப்போதுமே முக்கியமானதாக இருக்கிறது பேசிக்கொண்டே இருக்கும் போது இடையில் திடீரென்று பேச்சு நின்று விடும். அற்புதமான கணங்கள் அவை. மனது நிறைந்து போவது போல் தோன்றும் அதே சமயம் என்ன நேரப் போகிறதோ என்ற பயமும் இருக்கும் ஆனால் அனேக நேரங்களில் மௌனத்தை நோக்கி போகிறேன் என்று சொல்லிவிட்டு எழுத்தாளன் நிறைய பேசுகிறான். நான் நிறைய பேசுகிறேன் ஒருவர் மனதை தொட்டு '"அட இது எனக்கு நேர்ந்தது இதை ஏன் என்னால எழுத முடியலையே இந்த ஆள் எழுதி இருக்கிறானே! என் மனதில் ஓசையை எழுப்புகிறான் " என்று வாசகன் நன்றி செலுத்துகிறான் பாருங்கள் அது போலான எழுத்தை தான் நான் நல்ல எழுத்து என்று நினைக்கிறேன் "என்கிறார் 


லா.சா.ரா யாரென்றே தெரியாத அந்தப் பூ விற்பவர் தன் மகள் மூலம் கேட்டு கேட்டு லா.சா.ராவை மிக உயர்ந்த இடத்தில் வைத்து கொண்டாடினார் உலகம் அறியாமல் வளர்ந்த ஒரு பெண்ணுக்கு நல்லாசிரியன் போல லா. சா. ரா வழிகாட்டுகிறார் என்பது மகத்தான விஷயம். 


நூலகங்கள் குறித்து எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் கீழ்கண்டவாறு கூறுகிறார். 


 எப்போதும் நூலகத்திற்கு புதிய நூல்கள் வருவது மிக தாமதமாகவே வருகிறது ஆகவே புதிய புத்தகங்களை உடனே படிக்க முடியாத நிலை வாசகர்களுக்கு ஏற்படுகிறது சில நல்ல புத்தகங்கள் நூலகத்தால் வாங்கபடுவதே இல்லை ஏன் என்று ஒரு காரணமும் கேட்க முடியாது அப்படி ஒரு முறை என் புத்தகங்கள் நிராகரிக்கப்பட்டன உடனே நூலக தேர்வு கமிட்டியிடம் சண்டை போட்டேன் நிராகரிக்கப்பட்டால் காரணம் சொல்லத் தேவையில்லை என்கிறார் நூலக ஆணையை குழுமத் தலைவர். 

 

சாகித்திய அகாதமி விருது வாங்கிய எனது சஞ்சாரம் நாவல் கூட நூலகத்திற்கு வாங்கப்படவில்லை. 


புதிய நூல் கட்டுகளை அவிழ்த்து பதிவேட்டில் பதிந்து நூலகத்தில் வைப்பதற்கு ஓராண்டுக்கும் மேல் ஆகிவிடுகிறது தேவையான புத்தகங்கள் இல்லை பணியாளர்கள் குறைவு என்பதே இதற்குக் காரணம் ஒவ்வொரு நூலகமும் இதுபோன்ற பணிகளுக்கு கல்லூரியுடன் இணைந்து தன்னார்வ தொண்டர்களை உருவாக்க வேண்டும் புத்தகக் கொடைகளையும் உருவாக்க வேண்டும் என்று மிக அருமையான கருத்தை அவர் இந்நூலில் விளக்கியுள்ளார். 


லாசராவின் ரசிகையான ரசிகையான அந்தப்பெண்ணை ஒருமுறையேனும் பார்த்து பேசி இருக்க வேண்டுமென்று 

எஸ் ராமகிருஷ்ணன் இந்நூலில் விளக்குகிறார் எனக்கும் கூட அந்த பெண்ணை பார்த்து பேச வேண்டும் என்னும் ஆசை இப்போது நிலவுகிறது. 


நன்றி


சரோஜினி கனகசபை

நூலக மனிதர்கள்

 நூலக மனிதர்கள் -  எஸ் ராமகிருஷ்ணன் 


எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய நூலக மனிதர்கள் எனும் புத்தகம்  என் கைக்கு தற்போதுதான் கிடைத்தது இதனைப் படிக்க வேண்டும் எனும் ஆவல் வெகு நாட்களாக எனக்கு இருந்தது 


தற்போது இதில் நான் படித்தது இரண்டு அத்தியாயங்கள் 

முதல் அத்தியாயம் -  படிப்பதற்கு பரிசு இரண்டாம் அத்தியாயம் -  தந்தையின் நிழலில்

 இந்த இரு அத்தியாயங்களை குறித்து தற்போது  எழுதப்போகிறேன். 


மனதிற்கு மிகவும் நெருக்கமான உணர்வைத் தரும் எழுத்துக்கள் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களால் நமக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது


அவர்தான் பிறந்த மல்லாங்கிணறு எனும் கிராமப்புற நூலகத்தில் தொடங்கி மிகப்பெரிய நூலகங்கள் வரை படிக்க சென்றிருந்தாலும் ஒவ்வொரு இடத்திலும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் மிக அருமையாக இப்புத்தகத்தில் எழுதியுள்ளார் 


படிப்பதற்கு பரிசு


அவர் மல்லாங்கிணறு நூலகத்தில்  நான் படித்துக் கொண்டிருந்த போது பார்த்து வியந்த சாமிநாத சர்மா என்னும் மஞ்சள் பை மனிதரைப் பற்றி தனது முதல்  அத்தியாயத்தில் கூறியுள்ளார் அவர் தான் படிக்க எடுத்துச்செல்லும் ஒவ்வொரு புத்தகத்தின் உள்ளேயும் அந்த புத்தகத்தை திருப்பி நூலகத்தில் செலுத்தும்போது ஒரு ரூபாய் நோட்டை உள்ளே வைத்து யாரோ ஒரு முகம் அறியாத வாசகன் இந்த நூலைப் படிப்பதற்கு பரிசாக வைத்துச் செல்கிறார் 


அவர் வைத்துச்  சென்ற பணத்தை தவறுதலாக வைத்து சென்றுவிட்டார் என்று நான் பலமுறை நினைத்தேன் என்று ஆசிரியர் கூறுகிறார் ஆனால் ஒவ்வொரு முறை அவர் திருப்பிச் செலுத்தும் எல்லா புத்தகங்களிலும் அப்பணம் இருப்பதை நான் கண்டேன் மேலும் அப்பணத்தை எடுத்து நான் செலவு செய்யத் தொடங்கினேன் எனக்கு அவர் ரகசியமான பரிசு தரும் தேவதை போல் தோன்றினார் என்று ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார் முகம் தெரியாத அந்த வாசகனை அந்த மஞ்சள் பை காரர் தனது தோழனாக கருதுகிறார் 


அந்த மனிதருக்குள்ளும் விந்தை இருக்கிறது தான் மற்றவர்களைப் போன்ற ஒருவன் இல்லை தன் விருப்பங்கள் வேறு விதமானவை தனது வெளிப்பாடு வேறுவிதமானது என அவர் யோசிக்கிறார் எனவே அந்த நூலகத்திற்கு வந்த கடைசி நாள் வரை தான் படித்த புத்தகத்தில் ரூபாய் ஒன்றை வைத்து செல்கிறார்


 உண்மையில் இது ஒரு விளையாட்டு அந்த விளையாட்டின் வழியாக அறியாத ஒரு மனிதனை சந்தோஷப்படுகிறார் என்று ஆசிரியர் எழுதுகிறார் காதலிப்பவர்கள் தான் இப்படி புத்தகங்களில் ஆங்காங்கே சில எழுத்துக்களை வட்டமிட்டு விளையாடுவார்கள் ஆனால் இவர் செய்வது வேறுவிதமானது 


புத்தகங்கள் யாரை மகிழ்ச்சிப்படுத்தும் எவருடைய  வேதனையை ஆற்றுப்படுத்தும் என்று எழுத்தாளருக்கு தெரியாது ஆனால் புத்தகங்கள் சப்தமில்லாமல் மனிதர்கள் வளர்வதற்கும் சிந்திப்பதற்கும் ஆறுதல் அடையவும்  உதவி இருக்கின்றன என்பதே காலம் காட்டும் உண்மை என்று ஆசிரியர் விளக்குகிறார். 


தந்தையின் நிழலில்


விருதுநகர் பொது நூலகத்திற்கு ஒரு தந்தையும் 12 வயதுடைய அவருடைய பையனும் ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் ஞாயிறு மாலையிலும் தொடர்ச்சியாக வருவார்கள் தந்தை நூலகத்தின் நீண்ட அடுக்குகளுக்குள் அந்த பையனை அழைத்துக் கொண்டுபோய் மெல்லிய குரலில் புத்தகங்களை அறிமுகம் செய்துவைத்து பேசிக்கொண்டிருப்பார் அந்த சிறுவன் தலையை ஆட்டியபடியே கேட்டுக் கொண்டிருப்பான் சில நேரம் பெரிய அட்லஸை அவன் கையில் எடுத்துக் கொடுத்து புரட்டிப் பார்க்க சொல்வார் அந்த காட்சி என் மனதை விட்டு அகலாத ஒன்றாக எனக்கு இன்றும் இருக்கிறது


 அந்த தந்தையும் மகனும் போல வேறு எவரும் இப்படி இணக்கமாக நூலகத்திற்கு வந்ததில்லை தன் மகன் எதிர்காலம் குறித்த தந்தையின் கனவு அவரது கண்களில் ஒளிர்வதை காண முடிந்தது


"சிறுவர்கள் புத்தகம் படிப்பதும் பெரியவர்கள் புத்தகம் படிப்பதும் ஒன்றில்லை சிறுவர்கள் புத்தகங்களுக்குள் எதையோ தேடுகிறார்கள் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளே அவர்களை வழிநடத்துகின்றன பெரியவர்களுக்கு கடந்த காலம் பற்றிய ஏக்கமே வாசிக்க வைக்கிறது அல்லது நிகழ்கால பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி ஆறுதல் தேடி புத்தகங்களை நாடுகிறார்கள் என்று ஆசிரியர் இங்கு விளக்குகிறார்


ஆரம்பநிலையில் நல்ல புத்தகங்களை தேர்வு செய்து வாசிக்கவும் வாசித்து அவற்றை விவாதிக்கவும் துணை தேவை தேவை அந்தப் பயிற்சியின் வழியே ஒருவன் ஆழ்ந்து வாசிக்க துவங்கிவிட்டால் பின்பு அவனை அந்த வெளிச்சத்தை உயர்த்திப் பிடித்து பயணிக்கத் தொடங்கி விடுவான் என்பதை ஆசிரியர் இங்கு விளக்குகிறார்


மற்ற வீடுகளில் உள்ள தந்தையைப் போல் மகன் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற கனவு இந்த தந்தைக்கும் இருந்திருக்கக்கூடும் ஆனால் அவரது மட்டும் முக்கியமில்லை என்று உணர்ந்திருக்கிறார் அவனது ஆளுமையை உருவாக்கவே  முயன்றிருக்கிறார் உலக வரைபடங்களை விரித்து வைத்து அவனுக்கு உலகின் மிகப்பெரிய கடல்களை விரல்களால் தொட்டுப் பார்க்க வைத்த அந்த தந்தை மிகவும் மகத்தானவர். 


சில நாட்கள் அந்த தந்தை மகனை ஊரில் நடக்கும் இலக்கியக் கூட்டத்தில் பார்த்திருக்கிறேன் பெரும்பாலும் கடைசி வரிசையில் உட்கார்ந்து இருப்பார்கள் பையனுக்கு நல்ல புத்தகங்களை நல்ல உரைகளை அறிமுகம் செய்யும் அந்த தந்தையை காணும் போது ஏக்கமாக இருக்கும் என்று மிகவும் ரசித்து ஆசிரியர் இந்த இடத்தில் விளக்குகிறார். 


நல்ல புத்தகங்களை நல்ல இசையை கலைகளை நல்ல மனிதர்களை அறிமுகம் செய்வதும் தந்தையின் கடமையே. அதை சரியாக செய்த மனிதராக நூலகத்திற்கு வந்த தந்தையை தான் பார்த்ததாக எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார். 


நான் மிகவும் ரசித்த வரிகள் சில


 சாமுராய்கள் வாட் பயிற்சி துவங்கும் போது வேகவேகமாக வலைவீசி சண்டையிடுவார்கள் எப்போதும் சண்டை வரும் என காத்திருப்பார்கள் வாள் வீச்சு பற்றி காரசாரமாக பேசிக் கொள்வார்கள் ஆனால் அனுபவம் மிகுந்த சாமுராய் தேவை இல்லாமல் வாளை வெளியே எடுக்க மாட்டான் எடுத்தாலும் ஒரே வீச்சில் வேலையை முடித்து விடுவான் அதைப் போலவே அவன் சண்டை செய்வதைப் பற்றி பேசவே மாட்டான் மவுனியாக இருப்பான் 

 

நீண்டகாலம் புத்தகம் படிப்பவர்கள் அப்படியான ஒரு நிலைக்கு சென்று விடுகிறார்கள் அவர்கள் அதிகம் விவாதிப்பதில்லை ஆனால் பேச வேண்டிய அவசியம் வந்தால் சுருக்கமாக அழுத்தமாக தனது கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் அந்த மனப்பக்குவம் புத்தகம் உருவாக்கியதே. 


வெளிச்சம் மௌனமாகவே நமக்கு வழிகாட்டுகிறது புத்தகங்கள் செய்வதும் அது போன்ற ஒரு பணியே சொற்களை நம்மை ஆற்றுபடுத்துகின்றன சந்தோஷம் கொள்ள வைக்கின்றன துயரத்தில் துணை நிற்கின்றன மீட்சி தருகின்றன


 பேசக் கற்றுத் தருவதைப் போலவே படிக்க கற்றுத் தருவதும் பெற்றோரின் கடமையே. 


இந்த நூலில் இன்னும் முப்பது அத்தியாயங்கள் உள்ளன அவற்றைப் படித்து  எழுதுகின்றேன். 


நன்றி


சரோஜினி கனகசபை