Friday, January 21, 2022

சிறிய உண்மைகள்

 சிறிய உண்மைகள்  - எஸ் ராமகிருஷ்ணன்


பகுதி 25   - காஃப்காவின் எலி


 இப்பகுதியில் என்னைக் கவர்ந்த  சில பகுதிகள் 

 

பால்ய வயதில் உலகம் மிகப் பெரியதாக இருந்தது வீதி மிகப்பெரியதாக இருந்தது மரங்கள் மிக உயரமாக இருந்தன அடிவானம் மிகத்தொலைவில் இருந்தது பெரியவர்களின் செருப்பு கூட மிகப்பெரியதாக தோன்றியது நண்பர்கள் ஒன்று சேர்ந்து குளிக்கப் போனால் கண்மாய் கூட பெரிய கடலை போல் தோற்றமளிக்கும் சிறிய தட்டில் உண்டு சிறிய உடைகள் உடுத்தி சிறிய தலையணையில் உறங்கி எழுவோம் ஆனால் இன்று   இதைக் கண்டா பிரமித்தேன் ? என்று அந்தக் காட்சி சுருங்கிப் போய் விடுகின்றது


 உலகம் முழுவதும் பல்லாயிரம் பக்கங்கள் பால்ய வயதின் நினைவுகள் பலராலும் எழுதப்பட்டிருக்கின்றன அவை திரும்ப திரும்ப வாசிக்க படுவதற்கான காரணம் பால்ய வயதின் காட்சிகள் அனுபவங்கள் உணர்வுகளில் இருந்து நாம் கற்றுக் கொண்டே இருக்கிறோம் அல்லது இன்றைய உலகை புரிந்து கொள்கிறோம் என்பதே என்று எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் விளக்குகின்றார்


என்னுடைய சிறுவயதில் நானும் என் தம்பியும் வளர்ந்தது அம்மாச்சியின் வீட்டில்தான் அப்போது அந்த வீடு மிகப்பெரியதாக காட்சியளித்தது அங்கிருந்த மர மேஜை மிகப் பெரிதாக தோன்றியது ரெண்டு பேரும் ஒரே மேஜையில் உட்கார்ந்து எழுதுவோம் ஆனால் இன்று பார்க்கும்போது அது எவ்வளவு சிறிய மேஜை அந்த வீடு அவ்வளவு பெரிய வீடு அல்ல என்று தோன்றுகிறது உண்மையில் ஆசிரியர் இங்கு ஆச்சரியப் பட்டதில் வியப்பில்லை இத்தகைய வியப்பு நம்மில் நிறைய பேருக்கு ஏற்படும் நாங்கள் விளையாடிய அந்த மொட்டைமாடி கூட மிகச் சிறியதுதான் ஆனால் அன்று அது மிகப்பெரியதாக தோன்றியது


உலகம் மாறவில்லை ஆனால் நாம் வளர்ந்தவுடன் உலகம் வேறு தோற்றம் கொண்டு விடுகிறது எப்போது உலகம் மாறுகிறது ?எவ்விதம் மாறுகிறது ?அந்த மாற்றத்தை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் ?


காகிதம் மடங்கி கொள்வது போல நாம் பல நேரங்களில் மடங்கி கொண்டு விடுகிறோம் காவலர் உங்களை சாலையில் நிறுத்தி மிரட்டும் குரலில் கேள்விகள் கேட்டால் உடனே மடங்கி போய் விடுகிறீர்கள் அதிகாரிகள் உங்கள் மீது குற்றம் சுமத்தினால் நீங்கள் மடங்கிப் போய் விடுகிறீர்கள் மகனோ மகளோ உங்கள் விருப்பத்தை மீறி செயல்பட்டால் உடனே மடங்கிப் போய் விடுகிறீர்கள் இப்படி ஓராயிரம் முறை மனிதர்கள் அடங்கிப் போகிறார்கள் 


சூழலின் முன்பு ஒரு மனிதன் மடங்கிக் கொள்ளும் போது அவ்வளவு தான் தன்னால் செய்ய முடியும் என்று நம்புகிறான் ஆனால் சில காலம் சென்ற பிறகு தான் ஏன் அப்படி மடங்கி போனோம் என்று நினைத்து நினைத்து துயரம் அடைகிறான் 


பெண்களில் பலர் இந்த துயரத்தை வாழ்நாள் முழுவதும் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்று ஆசிரியர் கூறுகிறார் இது மிகவும் எதார்த்தமான உண்மை. 


சூழ்நிலை தரும் அழுத்தமும் நெருக்கடியும் ஒவ்வொருநாளும் மனிதர்களை இப்படி மடங்கிக் கொண்டே இருக்கிறது சிலரை மண்டியிடச் செய்கிறது சிலரை தனித்து அழ வைக்கிறது சிலரை மௌனமாக ஓடச் செய்கிறது  இதிலிருந்து எவரும் தப்ப முடியாது


பகுதி 28  -  தன்னை இழந்தவர்கள்


லாக் டவுன் நாட்களில் அரசு உயரதிகாரியாக உள்ள எனது நண்பர் தனது பிள்ளைகளுடன் கேரம் விளையாட தொடங்கினார் ஆரம்பத்தில் மதிய நேரம் மட்டும் விளையாடிக் கொண்டிருந்த அவருக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமாகி விடவே இரவு பதினோரு மணி வரை சலிக்காமல் விளையாட ஆரம்பித்தார் மகனுக்கோ மகளுக்கோ விருப்பமில்லை என்று எழுந்து கொள்ள முயன்றால் கோபம் கொண்டு விடுவார் அவருக்காக மனைவி நீண்ட நேரம் துணையாக விளையாட வேண்டி இருந்தது


 லாக் டவுன் என்பதால் அவர் அலுவலகம் போகவில்லை வெளியே யாரையும் சந்திக்கவும் முடியாது என்பதால் சதா விளையாடிக் கொண்டே இருந்தார் அது ஒரு விளையாட்டு என்பதே அவருக்கு மறந்து போய்விட்டது விளையாடுவதற்கு ஆட்கள் வேண்டும் என்பதற்காக மனைவி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு கிளம்பிப் போனார் அங்கு பூர்வீக வீட்டில் ஆட்கள் நிறைய  இருந்ததால் விளையாடிக் கொண்டே இருந்தார் இப்படி விடாது விளையாடிக் கொண்டிருந்தவர் திடீரென ஒருநாள் மதியம் பாதி விளையாட்டில் எழுந்துகொண்டு கேரம் போர்டு தூக்கி கிணற்றில் போட்டுவிட்டார்


லாக் டவுன் நண்பரை செயல் அற்றவராக மாற்றியிருந்தது அலுவலகம் அதிகாரம் பரபரப்பு என இருந்தவருக்கு அந்த உலகம் தன்னைவிட்டு பறிக்கப்பட்டதும் விளையாட்டில் தனது அதிகாரத்தை வேகத்தை காட்டத் துவங்கிவிட்டார்


பொருளாதார நெருக்கடிகள் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் இதுபோன்ற புதிய மன நெருக்கடிகளை லாக்டோன் காலத்தில் பலரும் சந்தித்திருக்கிறார்கள் 


சிலர் ஒரு நாளில் ஏழெட்டு முறை சாப்பிட்டு இருக்கிறார்கள் சிலர் அதிகமான நேரம் உடற்பயிற்சி செய்து கை கால் வலி ஏற்பட்டு சிகிச்சை எடுத்து இருக்கிறார்கள் சிலருக்கு இரவில் உறக்கம் வரவே இல்லை சிலர் ஒரு நாளில் ஐந்து சினிமா பார்த்திருக்கிறார்கள் ஒரு சிலர் புதிய கலைகளை கற்றுக்கொள்ள முயன்று இருக்கிறார்கள் தோட்ட வேலைகள் மீன் வளர்ப்பது பொம்மை செய்வது சமைக்க கற்றுக் கொள்வது என ஏதேதோ வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் வெளியுலகம் என்பது எத்தனை ஆயிரம் சக்கரங்கள் கொண்டது என்பதை ஊரடங்கு காலத்தில்தான் முழுமையாக அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது 


நானும் இந்த  லாக் டவுன் இல் நிறைய கற்றுக்கொள்ள தொடங்கினேன் என்னிடம் உள்ள 300க்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்து அதன் சுருக்கத்தை எழுத ஆரம்பித்தேன் ஏதேனும் ஒரு வகையில் இந்த  லாக் டவுன் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று யோசித்தேன் செயல் படுத்திக் கொண்டிருக்கிறேன்


பகுதி 29  -   தனிமையும் கனவுகளும்


எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர் பஞ்சாப் மாநிலத்தின் கசெளளி இல் பிறந்தவர் இவர் ஒரு நேர்காணலில் அன்றாடம் தனக்கு வரும் கனவுகளை ஒரு நோட்டில் குறித்து வைத்துக் கொண்டு வருவதாக சொல்கிறார் 


திப்பு சுல்தான் தனது கனவுகளை இதுபோல தொடர்ந்து பதிவு செய்து வந்ததோடு அவற்றிற்கு விளக்கம் என்னவென்று ஆராய்ந்து இருக்கிறார் அவை தனி நூலாக வெளிவந்துள்ளன


 ரஸ்கின் பாண்ட்யிற்க்கு முப்பதாவது வயதில் காமன்வெல்த் பரிசு கிடைத்துள்ளது குழந்தைகளுக்காக அவர் எழுதிய உலகம் வண்ணமயமானது சுவாரசியமானது அவர் ஒருபோதும் சிறார்களுக்கு அறிவுரை சொல்வதில்லை

 

 ஒருமுறை பள்ளி ஒன்றுக்கு சிறப்பு ஆசிரியராக ஒரே ஒரு வகுப்பு எடுக்க அவரை  அழைத்திருக்கிறார்கள்  மாணவர்களின் விளையாட்டுத் தனத்தைனையும் குறும்ப்பினையும் கண்டிக்க மனம் இன்றி சுதந்திரமாக அனுமதித்திருக்கிறார் சிறுவர்களின் விளையாட்டுத் தனத்தை கண்டிக்க முடியாது அது அவர்களின் உற்சாக மனதின் வெளிப்பாடு அதை ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் ரஸ்கின் பாண்ட்டின் இந்த மனநிலைதான் அவர் குழந்தைகளுக்காக எழுதுவதன் முக்கிய காரணி என்று ராமகிருஷ்ணன் அவர்கள் விளக்குகிறார்


சிறுவர்கள் ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அதன் அர்த்தங்களைப் பற்றி கவலைப்படாமல் வாசிக்கிறார்கள் அர்த்தங்களை முழுமையாக புரிந்து கொள்வது மிக  அபூர்வமாகவே காணப்படுகிறது  நிகழ்வுகளின் சுவாரஸ்யமும்  விநோதமும் அவர்களைத் தொடர்ந்து படிக்க வைக்கிறது


ஒருவன் தன் பத்து வயதில் அணிந்து கொண்ட சட்டை அவனுடைய 20 வயதில் அவனுக்கு பொருந்துவதில்லை ஆனால் அவன் பத்து வயதில் படித்த புத்தகம் அவனுக்கு 80 வயது ஆகும் போதும் பிடித்தமானதாக இருக்கிறது கூடவே வளர்ந்து கொண்டிருக்கிறது அதுதான் நல்ல புத்தகத்தின் அடையாளம் என்று ஆசிரியர் விளக்குகிறார்


பகுதி 30  -  எழுதும் நாட்களில்


 ஜப்பானிய எழுத்தாளரான கென்ஸாபுரோ ஒயி நோபல் பரிசு பெற்ற பின்பு தான் எழுதப்போவதில்லை தன்னுடைய வேலை முடிந்துவிட்டது என்று ஒரு பேட்டி கொடுக்கிறார் 

 

பத்திரிகையாளர்கள் ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்கின்றனர் அதற்கு அவர் சொல்கிறார் என் எழுத்திற்கு அடிப்படையாக ஒரே ஒரு காரணம் இருந்தது அது என் மகன்  ஹிக்காரி மூளை வளர்ச்சியற்ற அவன் நலம் அடைய வேண்டும் என்பதற்காகவே எழுதினேன் அந்தப் பணியை சரியாக செய்து விட்டதாக உணர்கிறேன் ஆகவே இனி எழுதத் தேவையில்லை என்று கூறுகிறார் அவரது வாழ்க்கையில் நடந்த உண்மைகளை அறிந்தால் இந்தப்பதிவு எவ்வளவு நிஜமானது என்பதை உணர முடியும்


 கென்ஸாபுரோ ஒயி  மூளை வளர்ச்சி குன்றிய தனது மகனுக்கு ஹிக்காரி என்று பெயர் வைக்கிறார் அதன் பொருள் வெளிச்சம் 

 

அவன் குழந்தையாக இருந்தபோது மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றபோது அவனுக்கு மூளையில் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அதை செய்யாவிட்டால் உயிர் வாழ முடியாது அப்படியே செய்தாலும் அவன் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்கிறார் இதைத் தவிர வேறு வழி இருக்கிறதா என்று மருத்துவரிடம் கென்ஸாபுரோ ஒயி கேட்கிறார் ஆனால் மருத்துவர் அவன் உங்களுக்கு வீண் சுமை போல் ஆகிவிடுவான் என்று கூறுகிறார்

 

 பின்னர் அவரும் அவரது மனைவியும் ஹிக்காரி யை தாங்களே கவனித்து வளர்ப்பதாக முடிவு எடுக்கின்றனர் நிறைய கவனம் எடுத்துக் கொள்கின்றனர் அவனை மீட்டெடுக்க மிகவும் சிரமப்படுகின்றனர்


தன் மனைவியின் உறுதியான நிதானமான இடைவிடாத செயல்பாடும் ஆழ்ந்த நம்பிக்கையுமே தன் மகனை மீட்டெடுத்தது என்கிறார் 


பேச்சு வராத ஹிக்காரிக்கு ஆர்வம் உருவாக்குவதற்காக விதவிதமான பறவைகளின் குரலை கொண்ட ஒலிநாடாக்கள் ஐ வீட்டில் ஒலிக்க விட்டிருக்கிறார்கள் அவன் பறவைகளின் குரல் வழியாகவே உலகை அறிந்திருக்கிறான் பறவைகளின் குரலைக் கேட்கும் போது அவன் சந்தோஷம் அடைவான் ஆனால் எந்த எதிர்வினையும் தரமாட்டான் இப்படி நாள்தோறும் புதுப்புது பறவைகளின் ஒலியை வீட்டில் ஒலிக்க செய்திருக்கிறார் ஒவ்வொரு நாளும் தன் மகனின் மௌனம் தங்கள் மீது பெரும் பாரமாக இறங்கியது என்று கூறுகிறார் பல இரவுகள் அழுது இருப்பதாக சொல்கிறார் 


வேதனைதான் எழுத்தின் மூல ஊற்று  உலகம் அறியாத தந்தையின் கண்ணீர் தான் எழுத்தாக மாறி நோபல்பரிசு வரையான அங்கீகாரத்தை பெற்றுத் தந்திருக்கிறது


ஆறு வயதான மகனை அழைத்துக்கொண்டு கென்ஸாபுரோ ஒரு நாள் காட்டிற்குள் சென்றார் அங்கே ஒரு பறவையின் குரலைக் கேட்டு எதிர்வினை தரும் விதமாக ஹிக்காரி நீர்க்கோழி என்ற முதல் வார்த்தையை பேசினான் அந்த மகிழ்ச்சிக்கு இணையே கிடையாது என்கிறார் தன் மகனின் மீட்சிக்கான நம்பிக்கையை உருவாக்கும் விதமாகவே தனது எழுத்து மாறியது ஆகவே தன்னுடைய எழுத்தின் நோக்கம் குணப்படுத்துதல் இது என் மகனை மட்டுமல்ல அவனைப்போல தனிக்கவனம் செலுத்த வேண்டிய யாரோ ஒரு தந்தைக்கு தாய்க்கு உதவி செய்யும் என்று நம்பினேன் அதுதான் நடந்தது என்கிறார் 


பத்து வயதானபோது மொசார்ட், பீத்தோவன் என உலக புகழ்பெற்ற இசை மேதைகளின் இசையை கென்ஸாபுரோ அறிமுகம் செய்திருக்கிறார் மொசார்ட்தடின் எந்த இசைத் துணுக்கை கேட்டாலும் அவன் அது எந்த இசைக்கோர்வை என்று சொல்லிவிடுவான் வளர்ந்து பெரியவனாகி இன்று அவன் ஒரு இசையமைப்பாளராக ஆகி இருக்கிறான் அவனது இசைத்தட்டுகள் பல லட்சம் விற்பனையாகி சாதனை செய்திருக்கிறது


சிறப்பு கவனம் எடுக்க வேண்டிய குழந்தைகளை உலகம் ஏன் புறக்கணிக்கிறது?அவமதிக்கிறது? புரிந்து கொள்ள மறுக்கிறது ?அந்தப் பெற்றோர்களின் அடக்கப்பட்ட கண்ணீரை மனத்துயரை புரிந்துகொள்ளாமல் ஏன் பரிகாசம் செய்கிறார்கள்? இந்த உலகில் மன்னிக்க முடியாத குற்றம் இதுபோன்ற பெற்றோர்களை அவமதிப்பதாகும் என்று ஆசிரியர் விளக்குகிறார் உண்மைதானே உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்கலாமே. 


சிறப்பு கவனம் வேண்டுகிற குழந்தைகளின் மௌனம் என்பது தனித்துவமான மொழி அதைப் புரிந்து கொண்ட பெற்றோர்களே அந்தப் பிள்ளைகளை சரியாக வளர்கிறார்கள் உருவாக்குகிறார்கள் நோயிலிருந்து குணப்படுத்த மருத்துவம் மட்டுமே உதவி செய்வதில்லை இயற்கையின் வழியிலும் நம்பிக்கையான சொற்களின் மூலம் மீட்சியை உருவாக்க முடியும் என்கிறார்


 இதில் இந்த கதையை படிக்கும்போது அந்தத் தாய் தந்தையரின் மனோநிலை நம் கண்முன் வந்து செல்கிறது அவர்கள் எடுத்த அறிவுப்பூர்வமான முடிவுகள் செயல்பாடுகள் நம்மை நெகிழ வைக்கிறது 

 

ஒவ்வொரு குழந்தைகளின் வளர்ப்பிலும் பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியம் அவர்களுடைய தெளிவான சிந்தனை மற்றும் செயல்பாட்டினை பார்த்துதான் குழந்தைகள் வளர்கின்றனர் இன்றைய குழந்தைகள் நம்முடைய வருங்கால நாட்டின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உயர வேண்டும்


தொடரும்


நன்றி 


தோழமையுடன் 


சரோஜினி கனகசபை





No comments:

Post a Comment