புத்தனாவது_சுலபம்
எஸ். ராமகிருஷ்ணன்
இத்தொகுப்பில் மொத்தம் 16 கதைகள் இருக்கிறது இவை அனைத்துமே கதைகளா அல்லது உண்மை சம்பவங்களா என நம்மை நினைத்து வியக்க வைக்கிறது
அதிலும் புத்தனாவது சுலபம் எனும் கதை ஒரு 51 வயது தந்தைக்கும் 24 வயது பையனுக்கும் இடையே நடக்கும் உணர்வு போராட்டத்தை எடுத்துரைக்கிறது இத்தகைய தந்தை-மகன் களை நாம் நம்முடைய வாழ்வில் இயல்பாக நிறைய இடங்களில் சந்தித்திருப்போம்
கதையில் வரும் தந்தை பி காம் படித்தவர் கூட்டுறவு பயிற்சி கல்லூரியில் சிறப்பு பயிற்சி முடித்து பால் வளத் துறையில் வேலை செய்கிறார் உயர் பதவிக்காக தபாலில் எம் ஏ தமிழ் படித்திருக்கிறார் அவருடைய மகன் அருண் பொறியியல் கல்லூரியில் படித்தவன் கடைசி வருடத்தில் கல்லூரியிலிருந்து வெளியே வந்துவிட்டான் அவனுடைய கல்லூரி படிப்பை முழுமையாக முடிக்கவில்லை
அருண் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது நண்பனின் பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறான் அதனைக் கண்ட அவனுடைய தந்தை நீ எப்படி பைக் ஓட்டலாம் என்று சண்டையிடுகிறார் வீட்டில் பிரச்சனை ஆரம்பமாகிறது ஆனால் அவன் அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறான் பைக் ஓட்டினா தப்பா?
உண்மையில் பைக்
என்பது என் வீட்டிற்கும் இந்த பரந்த உலகிற்குமான இடைவெளியை குறைத்து விடும் வீட்டிலிருந்து பையனை முடிவில்லாத உலகின் வசீகரத்தை காட்டி இழுத்துக்கொண்டு போய் விடும் என்று பயப்படுகிறார் ஆனால் அவருடைய மனைவியிடம் விபத்து குறித்த பயம் என்று ஒரு பொய்யை சொல்லி நம்ப வைக்கிறார்
அருணின் பள்ளி வயதில் அவனுடைய அம்மா அவனைக் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருப்பாள் நான் கவலைப்பட்டது இல்லை ஆனால் அவன் படிப்பை முடித்த நாளிலிருந்து நான் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறேன் அவனது அம்மா கவலைப்படுவதை நிறுத்திவிட்டாள் மிகுந்த சினேக பாவத்துடன் அவனது தரப்பு நியாயங்களுக்காக என்னோடு சண்டையிடுகிறவளாக மாறி போய் விட்டாள் இது எல்லாம் எப்படி நடக்கிறது என்று வியப்புடன் யோசிக்கிறார்.
அவனது அம்மாவிற்கு அருண் பைக் ஓட்டுவது பிடித்திருக்கிறது அவள் பல நேரங்களில் அருண் பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டு கோவிலுக்கு போகிறாள் கடைகளுக்கு போகிறாள் அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே போகிறார்கள் ஆனால் என்னால் அப்படி பைக்கில் போக முடியவில்லை ஒரு நாள் என்னை அலுவலகத்திற்கு பைக்கில் கொண்டு விட்ட போது கூட அவன் இயல்பாக பைக் ஓட்டவில்லை என்று கூறுகிறார்.
சில சமயங்களில் ஒரு வாரகாலம் அருண் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி போய் விடுவான் எங்கே போகிறான் என்று கேட்டால் என் மனைவி பிரண்ட் பார்க்க போயிருப்பான் என்று சொல்வாள் பையன்களுக்காக பொய் சொல்வதை அம்மாக்கள் விரும்புகிறார்கள் என்று சொல்கிறார்
அருண் எங்களோடு தான் இருக்கிறான் ஆனால் எங்கள் வீட்டிற்குள் அவனுக்காக தனித்தீவு ஒன்று இருப்பதைப் போலவே நான் உணர்கிறேன் அங்கே அவனது உடைகள் மட்டுமே காயப் போட பட்டிருக்கின்றன அவனது பைக் நிற்கிறது அவனுடைய மேஜையில் லேப்டாப் ஓடிக்கொண்டிருக்கிறது அவன் வாங்கி வளர்க்கும் ஒரு மீன்குஞ்சு தொட்டி இருக்கிறது வேறு ஒரு மனிதருக்கு அந்த தீவில் இடம் கிடையாது
டேபிள் வெயிட்டாக உள்ள கண்ணாடி கோளத்தினுள் உள்ள மரத்தை நம்மால் எப்படி கண்ணால் மட்டுமே பார்க்க முடியுமோ கையால் தொட முடியாதோ அப்படியான ஒரு இடைவெளியை நெருக்கம் கொள்ளவே முடியாத சாத்தியமின்மையை அருண் உருவாக்கி வைத்திருக்கிறான் அப்படி இருப்பது எனக்கு பிடிக்கவில்லை என்று புலம்புகிறார்.
இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் தந்தை நம்மிடம் ஒரு உண்மையை கூறுகிறார் நானும் இளைஞனாக இருந்தபோது இதே குற்றச்சாட்டுகளை சந்தித்திருக்கிறேன் நானும் பதில் பேசாமல் வீட்டை விட்டு போய் இருக்கிறேன் இன்றும் அதை நான் நன்றாகவே உணர்ந்து இருக்கிறேன் நான் செய்ததை தான் என் மகனும் செய்கிறான் இருப்பினும் ஒரு தந்தையாக அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை நீங்கள் தகப்பன் ஆகும் நாளில் இதை உணர்வீர்கள் என்கிறார்
புத்தகத்தில் ஒருவரி...
"ஒவ்வொரு தந்தையும் புத்தனை பாதுகாத்த தந்தையைப் போல உலகிடமிருந்து தன் பிள்ளையைப் பாதுகாக்கவே செய்கிறான்... ஆனால் உலகம்தான் கடைசியில் வெல்லுகிறது"
ஆம் "புத்தனாவது சுலபம்தான்"
ஏனெனில்... இங்கே ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அவர்களுக்கு நாள்தோறும் ஏதாவது போதித்துக்கொண்டே இருக்கிறது...
மிகவும் அருமையான கதை அந்த தந்தை மனம்விட்டுப் புலம்பும் அந்த வார்த்தைகள் அனைத்தும் நம் மனதினுள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது
.
No comments:
Post a Comment