Wednesday, January 12, 2022

காற்றில் யாரோ நடக்கிறார்கள்

 காற்றில் யாரோ நடக்கிறார்கள்  - 

எஸ் ராமகிருஷ்ணன் 


இந்நூல் 2008ஆம் ஆண்டு முதல் பதிப்பிற்கு வந்துள்ளது இந்நூலில் கிட்டத்தட்ட 50 அத்தியாயங்கள் உள்ளன இந்த அத்தியாயங்கள் கீழ்கண்ட தலைப்பின்கீழ் பிரிக்கப்பட்டுள்ளன அவை  இலக்கியம் கலை திரைப்படம் மற்றும் அனுபவம் பொது என்று பிரிக்கப்பட்டுள்ளது 


இதில் நான் வாசித்த - வாழ்விலே ஒரு முறை  - எனும் தலைப்பு குறித்து இங்கு எழுத போகிறேன்


இத்தலைப்பில் எழுத்தாளர் தான் சந்தித்த மிக எளிமையான மனிதர்கள் மூலம் தான் கற்றுக்கொண்ட விஷயங்களைக் குறித்து எழுதுகிறார்


 "வாழ்வின் நுட்பங்களை புத்தகங்களில் கற்றுக்கொண்டதை விட அதிகமாக என்னை சுற்றியுள்ள மனிதர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன் என்னால் மறக்கவே இயலாத சில நிகழ்வுகள் இருக்கின்றன அந்த நிகழ்வுகள் மிக முக்கியமானவை அந்த செயல்களுக்கு காரணமாக இருந்தவர்கள் எளிய மனிதர்கள் அவர்களுக்கென எவ்விதமான சிறப்பு அடையாளமும் இல்லை ஒரு சிலரின் பெயர்கள் கூட எனக்குத் தெரியாது ஆனால் அவர்களது செயல் என்றும் மறக்க முடியாதபடி நினைவில் தங்கி இருந்தது "என்று கூறுகிறார்


நிகழ்வு  1


ஒரு பழைய ஸ்கூட்டரில் 45 வயது தோற்றமுடைய ஒரு மனிதர் ஒரு பெரிய துணிப்பை ஒன்று பதியம் இட்ட பத்துப்பதினைந்து செடிகள் கொண்டு வருவார் அதனை நட்டு வைப்பதற்காக அவரே கையில் கடப்பாரையும் வைத்திருப்பார் பூங்காவினுள் சில இடங்களை தேர்வு செய்து மண்ணை தோண்டி செடியை நட்டு வைத்து விட்டு தண்ணீர் பிடித்து ஊற்றுவார் பிறகு சில நிமிடங்கள் அதைப் பார்த்தபடியே உட்கார்ந்திருப்பார் அப்போது அவர் அந்த செடிகளோடு பேசுவது போலவே தோன்றும் பின்னர் பூங்காவை ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு சென்று விடுவார் பூங்காக்களில் மட்டுமல்லாது சாலையோரங்களில் கூட இவர் இப்படி மரங்கள் நடுவதை கண்டிருக்கிறேன்

கடந்த 10 ஆண்டுகளில் நான்கைந்து முறை அந்த மனிதரை வெவ்வேறு பூங்காவில் பார்த்திருக்கிறேன்


ஒருமுறை ஜீவா பூங்காவில் அவர் மரம் நட்டு திரும்பும்போது அவர் யார் எப்படி அந்த ஆர்வம் வந்தது என்று கேட்டேன் ஒரு வார்த்தை கூட பதில் பேசவில்லை சிரித்தபடியே தன் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்று விட்டார் அந்த சிரிப்பில் என் செயல் உனக்குப் பிடித்திருந்தால் நீயும் செய்து பாரேன் என்பது ஒளிந்திருந்தது. இதனை வாசிக்கும் போது அவருடைய அந்த சிரிப்பு என் கண் முன்னே தோன்றுகிறது நாமும் ஏன் இவரை பின்பற்றக்கூடாது என்று தோன்றுகிறது 


நிகழ்வு 2


சில ஆண்டுகளுக்கு முன்பாக கும்மிடிப்பூண்டியில் இருந்து ஒரு போஸ்ட் கார்டில் ஒரு கடிதம் வந்தது அதில் தான் கண் பார்வையற்றவர்களுக்கு வாரம் ஒருமுறை பார்வையற்றவர்கள் காப்பகத்திற்கு சென்று அதைப் படித்துக் காட்டி வருவதாக குறிப்பிட்டிருந்தார் அவரை நேரில் பார்ப்பதற்காக சென்றிருந்தேன் டெய்லராக வேலை செய்து கொண்டிருந்தார் மிகச்சிறிய வீடு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தார்கள் மாதம் 100 ரூபாய்க்கு புத்தகம் வாங்கும் பழக்கம் தனக்கு இருக்கிறது என்று தன் வீட்டில் இருந்த அலமாரியில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை காட்டினார் மிகவும் ஆச்சரியமாக இருந்தது எனக்கு


 அதன் பின்னர் தங்களது பகுதியில் இருந்த ஒரு பார்வையற்ற காப்பகத்திற்கு என்னை அழைத்துச் சென்றார் 30 நபர்கள் அங்கே இருந்தார்கள் என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து எனது கதைகளில் ஒன்றை வாசித்துக் காட்டும் படி கூறினார் நானும் வாசித்துக் காட்டினேன் கதை வாசித்தலின் முடிவில் எழுத்தாளரோடு உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்றதும் அநேகமாக ஒவ்வொருவரும் கதை சார்ந்த தங்களது மனப் பதிவுகளை பகிர்ந்து கொண்டார்கள்  பிரபலமான இலக்கியச் சந்திப்புகளில் ஏற்படாத நெருக்கம் அவர்களோடு கழித்த மாலை நேரத்தில் ஏற்பட்டது இப்படி வாரம் ஒரு எழுத்தாளர் வந்து கதை வாசித்தால் நன்றாக இருக்கும் என்று பார்வையற்ற ஒருவர் ஆதங்கப்பட்ட து மனதை உருக்குவதாக இருந்தது 

 

கடிதம் எழுதிய நண்பரிடம் உங்களுக்கு இதுபோல ஆர்வம் எப்படி உண்டானது என்று கேட்டேன் அவர் ஒரு நாள் மின்சார ரயிலை அருகில் அமர்ந்திருந்த பார்வையற்றவர் நான் மெல்லிய சத்தத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருந்ததை கேட்டுவிட்டு கொஞ்சம் சத்தமாக வாசித்தால் நானும் கேட்க முடியும் என்றார் அப்படி ஆரம்பித்து இப்போது வாரம் ஒரு நாள் இரண்டு மணி நேரம் இவர்களுக்காக செலவழிக்கிறேன் என்றார்


 சொந்த குழந்தைகளுக்கே கதை படித்துச் சொல்லவும் கற்றுத்தரவும் நேரமில்லாத ஆயிரக்கணக்கான மனிதர்களின் மத்தியில் இவரைப் போன்ற ஒரு சிலரின் செய்கை என் மனதில் எப்போதும் மறக்க முடியாததாக உள்ளது என்கிறார் ஆசிரியர்.

 

 உண்மையிலேயே இவருடைய வழியை நாமும் பின்பற்றி பார்வையற்றோர் இல்லங்கள் மற்றும் அனாதை சிறார்கள் வாழுகின்ற அனாதை இல்லங்கள் முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களில் நல்ல கதைகளை அவர்களுக்கு வாசித்து காட்டுவதன்

  மூலம் அவர்களுக்கும் நமக்கும் மன சந்தோசத்தை கொடுக்கும், 


அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கூட இந்த கதை சொல்லும் நிகழ்வு வாரம் ஒருமுறை வகுப்புகளில் நடக்கும் என்றால் அவர்களின் சிந்தனையையும் நம்மால் தூண்ட இயலும்



நிகழ்வு 3


இந்நிகழ்வில் ஒரு ஆசிரியர் கிராம மக்களிடையே அடிப்படை அறிவியல் அறிவு வளர்ப்பதற்காகவும் மூடநம்பிக்கைகளைப் போக்கி அவர்களை தெளிவுபடுத்துவதற்காக காஞ்சிபுரம் ஆற்காடு மாவட்டங்களில் உள்ள கிராமம் கிராமமாக சென்று தனது சொந்த முயற்சியால் விஞ்ஞான பயிற்சிகளை செய்து வருவதாக என்னுடைய நண்பர் ஒருவர் எனக்கு தெரிவித்தார்


 அதனடிப்படையில்  காஞ்சிபுரம் அருகிலுள்ள ஐயங்கார்குளம் என்ற கிராமத்திற்கு சென்று அவரை சந்திப்பதற்காக  நான் காத்திருந்தேன் 6 மணி அளவில் அந்த ஆசிரியர் தனது பைக்கில் கையில் இரண்டு பெரிய பைகளுடன் வந்து சேர்ந்தார் ஊரின் மையமாக இருந்த இடத்தில் அதனை வைத்துவிட்டு யார் வீட்டில் இருந்தோஒரு மர மேஜை வாங்கி வந்தார் பின்னர் தன்னுடைய பையிலிருந்த ஸ்லைட் போடும் கருவி ஒன்றை வெளியே எடுத்து வைத்து தான் கொண்டு வந்திருந்த சில ஸ்லைட்டுகளை அதில் பொருத்தினார் பின்னர் எங்கிருந்தோ மின்சாரம் இழுத்து வந்து சில நிமிடங்களில் இன்னொரு பையிலிருந்த மைக்  மற்றும் ஒலிபெருக்கியை எடுத்து பேசத் துவங்கினார் பத்தே நிமிடங்களில் அந்த இடத்தில் கிராமத்தின் அனைத்து மக்களும் திரண்டனர்  

 

இந்த பிரபஞ்சம் எப்படி உண்டானது? பூமி எப்படி சுற்றுகிறது ? கிரகங்கள் என்றால் என்ன ? அமாவாசை எப்படி வருகிறது? கிரகணம் ஏன் ஏற்படுகிறது ? என்று அடிப்படையான விஞ்ஞான அறிவை கிராம மக்களுக்கு தனது ஸ்லைடுஷோ வழியாக நடத்திக்காட்டினார் இரண்டு மணி நேர நிகழ்ச்சி ஊரே தன்னை மறந்து போயிருந்தது 


ஆயிரம் புத்தகங்கள் கற்றுத்தரும் பாடங்களை விடவும் இந்த எளிய மனிதர்கள் செய்யும் செயல்கள் எனக்கு அதிகம் கற்றுத் தந்திருக்கின்றன இன்னும் சொல்வதாயின் இவர்களின் நிஜமான அக்கறை தான் இன்றும் வாழ்வை நம்பிக்கை கொள்ள வைத்திருக்கின்றன என்று ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார். 


 இயற்கையை நேசிக்கும் அந்த 45  வயது மனிதரைப்போல் மற்றும் பார்வையற்றவர்களுக்கு தனது வாசிப்பின் மூலம் அவர்களின் சிந்தனையை தூண்டிவிடும் அந்த தையற்காரரை போல் மற்றும் கிராம மக்களிடையே உள்ள மூட நம்பிக்கையை அழித்து அடிப்படை விஞ்ஞான அறிவை விதைக்க முயன்று கொண்டிருக்கும் அந்த ஆசிரியரை போல் தன்னால் இயன்ற செயல்களை செய்யும் இத்தகைய மனிதர்கள் இன்னும் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள் நாமும் ஏன் அவர்களில் ஒருவராக இருக்க கூடாது? 

No comments:

Post a Comment