Monday, January 17, 2022

சிறிய உண்மைகள்

 சிறிய உண்மைகள் - எஸ் ராமகிருஷ்ணன்


சிறிய உண்மைகள் எனும் கட்டுரைத் தொகுப்பில் ஆசிரியர் கிட்டத்தட்ட முப்பத்தி ஒன்பது கட்டுரைகளை எழுதியுள்ளார் இதில் முன்னுரையாக அவர் கொடுத்துள்ள மிக அருமையான  என்னைக் கவர்ந்த  வார்த்தைகள் சில  :


கடந்த காலத்தின் நினைவுகளால் வழி நடத்தப்படாத மனிதர்கள் எவரேனும் உண்டா என்ன ?  


குளத்தில் வீசி எறியப்பட்ட கற்கள் நீரின் அடியில் ஒன்று சேர்ந்து விடுவது போல நாம் வாசித்த விஷயங்கள் மனதினுள் ஒன்று சேர்ந்து கொள்கின்றன புறவுலகின் நெருக்கடி அதிகமாகும் போது நாம் அகத்தின் குரலால் வழிநடத்தப்பட துவங்குகிறோம் அதுவரை அகத்தின் குரலை நாம் கேட்பதில்லை இது பல்வேறு சூழ்நிலைகளில் நாம் உணரக் கூடிய ஒரு விஷயம் தான் 


கண்ணாடி தொட்டியில் நீந்தும் வண்ண மீன்களை வேடிக்கை பார்க்கும் ஒருவன் மெல்லத்தானும்  நீந்துகுவதாக உணருகிறான் மீனின் கண்களின் வழியே அவன் நீரின் ரகசியத்தை அறிந்து கொள்கிறான் அதுபோன்றதே வாசிப்பும்  என்கிறார் மிகவும் அருமையான உவமை. 



 பகுதி 1 - தெற்கிலிருந்து வரும் குரல் 

 

ஒரு நாவலை வாசிக்கையில் ஒரே நேரம் நாம் பல்வேறு வாழ்க்கையை வாழ்கிறோம் அதுதான் நாவல் வாசிப்பதற்கான முக்கியக் காரணம் என்கிறார் வில்லியம் சரோயன்


டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் நாவலை வாசிக்கும் ஒருவன் பல்வேறு மனிதர்களை நிகழ்வுகளை வரலாற்றின் பேரியக்கத்தை கண்முன்னே காண்கிறான் பேராறு ஒன்றில் நீந்துவது போன்ற அனுபவம் இது 


உண்மையில் இதனை பல நாவல்களை வாசிக்கும்போது நாம் உணர்ந்திருக்கிறோம் சாண்டில்யன் மற்றும் கல்கியின் கதைகள் வாசிக்கும்போது வரலாற்றில் அவர் கூறிய காலத்தில் நாம் வாழ்வது போன்ற ஓர் உணர்வு ஏற்படும்  மேலும் அந்த வரலாற்று கதாபாத்திரங்கள் நம் முன்னே உலவுவது போன்று நமக்குத் தோன்றும் அங்கு நடைபெறக்கூடிய போர்க்காட்சிகள் முதற்கொண்டு நம் கண் முன்னே தோன்றி நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும்.  ஜெயகாந்தனின் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் வாசித்தபோது அதில் வந்த ஹென்றிஎனும் கேரக்டர் நம்மை சுற்றி எங்கேனும் ஓரிடத்தில் நாம் பார்த்த மனிதனாகவே தோன்றியது


பகுதி 2 -  காலம் என்னும் புதிர்


காலம் பற்றிய சிந்தனை இல்லாத எழுத்தாளனே கிடையாது அதிலும் கடந்த காலத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பெரும்பான்மை படைப்பாளிகளின் சவால் கடந்த காலம் என்பது முடிந்து போன நிகழ்வுகளின் தொகுப்பு இல்லை மாறாக அவை நிகழ்காலத்தின் வேர்களாக உள்ளன தனது சொந்த வாழ்வின் வழியாக கால மாற்றத்தையே எழுத்தாளன் பதிவு செய்கிறான் என்று நோபல் பரிசு பெற்ற யாசுனாரி கவாபத்தா கூறுகிறார்


காலம் குறித்து விசித்திரமான கதைகள் இந்தியாவில் நிறைய இருக்கின்றன காலத்தை பகுக்கும்  ரகசிய முறைகளும் இருக்கின்றன ஆப்பிரிக்க பழங்குடி ஒன்றில் அவர்கள் திங்கள் செவ்வாய் என நாட்களைப் பிரித்து கொள்வதில்லை அதற்கு மாறாக நிறங்களின் வழியாக நாட்களை பிரித்துக் கொள்கிறார்கள் சிவப்பு என்பது ஒரு தினம் மஞ்சள் என்பது இன்னொரு தினம்


காலம் மனிதர்களின் உடலின் வழியே தனது அடையாளத்தை பதிவு செய்கிறது முதல் நரையை கண்டபோது திடுக்கிடாத மனிதர் யார் இருக்கிறார்கள் ? நரை என்பது காலத்தின் சிரிப்பு அது நம்மிடம் ரகசியமாக எதையோ சொல்கிறது 


சித்தம் கலங்கியவர்களுக்கு ஏது வயது? அவர்கள் காலமற்ற நிலைகளில்தான் வாழ்கிறார்கள். உண்மை இதனை நாம் அனேக நேரங்களில் கண்கூடாக காண்கிறோம்


பகுதி 3 - மணலின் விதி


 Collection of sand என்ற கட்டுரைத் தொகுப்பில் இதாலோ கால்வினோ விசித்திரமான பழக்கம் கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி எழுதியிருக்கிறார் அந்தப் பெண் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கிருந்து பிடி மண் அள்ளிக் கொண்டு வந்து அதை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு பாதுகாத்து வைப்பது வழக்கம் அந்த ஜாடியின் வெளியே அது எந்த ஊரில் எடுக்கப்பட்ட மண் என்று எழுதி வைத்துக் கொள்வார் நினைவுகளை அழியாமல் பாதுகாக்க தான் இப்படி மணலைக் கொண்டு வருகிறார் போலும் என்று கால்வினோ குறிப்பிடுகிறார் 


 இது ஒரு விசித்திரமான பழக்கம் ஒன்றும் இல்லை நாம் நம் சிறுவயதில் கூட பள்ளியிலிருந்து அழைத்துச் சென்ற சுற்றுலாக்களில்  புது ஊர்களுக்கு சென்று வரும்போது அங்குள்ள கடற்கரை மணலை கற்களை சிப்பிகளை எடுத்து வந்து இருப்போம்


கிராமப்புறங்களில் ஊரை விட்டுப் பிரியும் போது பிடிமண் எடுத்துக் கொண்டு போவார்கள் ஒரு நண்பர் சென்னையில் புது வீடு கட்டும்போது கிராமத்திலிருந்த தனது பூர்வீக வீட்டின் வாசலில் இருந்து பிடிமண் கொண்டு வந்து புது வீட்டின் முன்னால் போட்டுக் கொண்டார் 


மண்ணை நேசிப்பது என்பது ஒரு பிடிமானம் ஒரு பற்று. 


பொதுவாக பெண்கள் தாங்கள் சென்றுவரும் கோயில்களிலிருந்து ஏதேனும் ஒரு பாத்திரத்தை அந்த கோவிலின் மற்றும் ஊரின் நினைவாக வாங்கி வந்து வீடுகளில் வைத்துக் கொள்வார்கள். எனக்கும் அந்த பழக்கம் உண்டு



பகுதி-4 மழையும் குடையும்


 ரிச்சர்ட் கார்சியா என்ற கவிஞரின் கவிதை ஒன்றில் " குடை ஒரு காலத்தில் சீனர்களின் முக்கியமான ஆயுதமாக விளங்கியது ஆனால் இன்றோ அது வெறும் அலங்காரப் பொருள் குடை தன் வரலாற்றை மறந்து விட்டது "என்ற வரியை வாசிக்க முடிந்தது

 

குடையின் தண்டில் ரகசிய கத்தி கொண்ட பதினாறு வகை குடைகளை சீன அரசர்கள் பயன்படுத்தியதாக கூறுகிறார்கள் ஒரு காலத்தில் பிரெஞ்சு அதிபரின் பாதுகாப்பு படையில் குடையை முக்கிய ஆயுதமாக வைத்திருந்தார்கள் 


அம்பர்லா என்ற ஆங்கில வார்த்தை இலத்தின் மொழியில் அம்புரோஸ் எனும் சொல்லிலிருந்து உருவானது இதன் அர்த்தம் நிழல் என்பதாகும் 


பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் குடைகள் பெண்களுக்கான விஷயம் குடை இல்லாமல் பெண் வெளியே வருவது நாகரிகமற்ற செயலாகவும் கருதப்பட்டது


பகுதி ஐந்து - எழுத்தில் பறப்பது


பதின்வயதில் நாம் கற்பனையில் சஞ்சரிக்க துவங்குகிறோம் அந்தக் கற்பனையான பறத்தல்லில் இருந்தே படைப்பு மனநிலை பிறக்கிறது எழுத்தாளன் சொற்களை சேகரித்து வைத்துக் கொள்வதில்லை விண்ணிலிருந்து பெய்யும் மழை போல அது ஒரு அற்புதமாக எழுதும் நேரம் நடக்கிறது என்கிறார் ஆசிரியர்


ரே பிராட்பரிக்குக் கார் ஓட்டத் தெரியாது அத்தோடு அவர் ஒரு முறை கூட விமானத்தில் பயணம் செய்தது கிடையாது விமான பயணம் மீது பெரும் அச்சம் கொண்டவர் விமானம் என்றில்லை உயரமான எந்த இடத்திற்கு சென்றாலும் மயக்கம் வந்துவிடும் விமானத்தில் பறக்கவே பறக்காத பிராட்பரிதான் விண்வெளி பயணம் பற்றி ஏராளமான கதைகள் எழுதி இருக்கிறார் செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை பற்றி ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதி இருக்கிறார் அவரது சொந்த பயணத்திற்கும் எழுத்தில் பிறப்பதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது ராக்கெட் மூலம் விண்வெளிக்கு வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பாகவே பிராட்பரியின் கதைகளில் விண்வெளிக்கு மனிதர்கள் போய் வந்துவிட்டார்கள் ஒரு மனிதன் எப்படி பறப்பதை கற்பனை செய்யமுடியும் என்று சிலர் கேட்கக்கூடும் அதுதான் எழுத்தின் வல்லமை எழுத்தாளன் தான் அறிந்த விஷயங்களை மட்டுமே எழுத முடியும் என்றால் பிராட்பரி எப்படி விமானத்தில் பறப்பதை விண்வெளி பயணத்தை எழுத முடிந்தது


நூற்றுக்கணக்கான அறிவியல் புனை கதைகளை எழுதிய ஐசக் ஐசிமோவிற்கு கம்ப்யூட்டரை உபயோகிக்க தெரியாது அவரது நண்பர் ஒரு முறை கணினி ஒன்றை பரிசாக கொடுத்த போது அதை மேஜையின் ஓரமாக வைத்துவிட்டு தனது டைப்ரைட்டர் மெசினில் தான் ஐசிமோ எழுதினார் ரோபோக்களை எழுத்தில் உருவாக்க முடிந்த ஒரு எழுத்தாளனுக்கு வாழ்க்கையில் ஒரு கணினியை உபயோகிக்க தெரியவில்லை என்பதுதான் நிஜம்


எழுத்தாளர்கள் சொந்த வாழ்க்கையை மட்டும் எழுத வேண்டும் என்றால் அவர் பிறந்த வருடத்திற்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த ஒரு வரியை  கூட எழுத முடியாது எழுத்தாளனின் அனுபவம் என்பது ஒரு பங்கு மட்டுமே அவனது கற்பனையும் பார்த்து கேட்ட அறிந்த அனுபவங்களும் ஒன்றாகி தான் படைப்பாகின்றது. 


பகுதி-6 மொழியே அடையாளம்


நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஐசக் பாஷவிஷ் சிங்கர் இட்டிஷ் மொழியில் எழுதியவர் இவரிடம் மிகக் குறைவானவர்கள் படிக்கும் இட்டிஷ் மொழிகளில் ஏன் எழுதுகிறீர்கள்? என்று கேட்டதற்கு விற்பனையாகும் எண்ணிக்கையை வைத்து புத்தகத்தின் தரத்தை முடிவு செய்யக்கூடாது குறைவான மனிதர்கள் தன் கதையைப் படிக்கக் கூடும் ஆனால் அவர்கள் அந்தக் கதையை தனது தாய்மொழியில் படிக்கிறார்கள் மறைந்து போன நினைவுகளை மீள் உருவாக்கம்  செய்கிறார்கள் ஒரு வகையில் இந்தக் கதைகளே அவர்களின் மீட்சி மரபுத் தொடர்ச்சி என்று சிங்கர் கூறுகிறார். 


இறந்துபோன மொழியாக கருதப்பட்ட தன் மொழியை மீண்டும் மீளுருவாக்கம் செய்ய அவர்  எடுத்த முயற்சி மிகவும் அற்புதமானது.  


இட்டிஷ்மொழியில் போர்க் கருவிகள் ஆயுதங்கள் ராணுவ பயிற்சிகள் பற்றிய சொற்கள் கிடையாது என்பது வியப்பான செய்தி


 தனது மொழி ஆங்கிலத்தை விடவும் சிறப்பானது ஆங்கில மொழியில் லட்சக்கணக்கில் சொற்கள் இருக்கின்றன அதைவிட இட்டிஷ்யில் குறைவே ஆனால் இட்டிஷ் மொழியின் சொற்கள் மனிதர்களின் குணாம்சத்தை ஆளுமையை உணர்ச்சிகளை சொல்வதில் முன்னோடியாக  இருக்கின்றது என்கிறார்


கென்யாவில் புகழ்பெற்ற எழுத்தாளரான நுகூகி வா தியோங் ஓ ஆங்கிலப் பேராசிரியராக வேலை செய்கிறார் ஆனால் தனது தாய் மொழியில் தான் எழுதுகிறார் தனது எழுத்தின் வேலை அமெரிக்க மக்களை மகிழ்விப்பது இல்லை அழிந்துபோன யூதர்களின் நினைவுகளை பாதுகாப்பதே அதுவும் ஒரு மொழி அழியும் போது அதன் புராதன நினைவுகள் யாவும் சேர்ந்து அழிந்து போகின்றன என்கிறார் இவரின் மொழி மீதான பற்று நம்மை நெகிழ வைக்கிறது

 

 பகுதி 13  - நாவலின் வழி தேடுதல்



ஒரு நாவலை வாசிக்கும்போது கதைக்குள் நாம் அறிந்த மனிதர்களை தேடுகிறோம் சில நேரம் நம் உருவமே கூட தெரிவதும் உண்டு கதாபாத்திரங்களின் வழியே நம்மை நாமே அடையாளம் கண்டுகொள்ள முயல்கிறோம் பலர் இறந்து போன வாழ்க்கையை அடைய முடியாத சந்தோசங்களை கதைகளின் வழியே பெறுகிறார்கள் சில அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியில் இருந்து தப்பிக்க கதைகளை வாசிக்கிறார்கள் 


நம் மறக்க முடியாத நினைவுகளை கதைகளாக மாற்றிக்கொண்டு விடுகிறோம் நம் பள்ளி பருவத்தை பற்றி யாராவது கேட்டால் உடனே ஒரு கதை போலத்தானே சொல்ல ஆரம்பிக்கிறோம் 


கதைகளில் நன்மை வெல்ல வேண்டும் என்று பெரும்பான்மை வாசகர்கள் நினைக்கிறார்கள் காரணம் நிஜ வாழ்க்கையில் அப்படி நடப்பது குறைவு தானே


சில ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் ஒரு பேராசிரியர் இளவயதில் காணாமல் போன தனது சகோதரன் ஒருவனை ஒரு நாவலில் வரும் கதாபாத்திரத்தின் வழியாக அடையாளம் கண்டு கொண்டு அந்த எழுத்தாளரை தேடி அமெரிக்கா சென்றிருக்கிறார் எழுத்தாளரும் அதுபோன்ற ஒரு மனிதனை தான் உணவகம் ஒன்றில் சந்தித்த விபரத்தை சொல்லவே அது தன் தம்பி என்பதை கண்டறிந்து அவர்கள் ஒன்றிணைந்து ஒன்றிணைந்து இருக்கிறார்கள் அந்தப் பேராசிரியருக்கு நாவல் என்பது உண்மையை கண்டறிய உதவிய ஒரு வழிகாட்டுதல் மற்றவர்களுக்கு அது வெறும் புனைவு



No comments:

Post a Comment