பெண்ணிய நாவல்கள்
பெண்ணியச் சிந்தனை மரபினை இலக்கியவாதிகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தங்கள் படைப்புகளில் பதிவு செய்து வந்துள்ளனர்.
மகாகவி பாரதி தொடங்கி புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், அகிலன், ந.பார்த்தசாரதி, அசோகமித்திரன் , ஜெயகாந்தன், சமுத்திரம், பிரபஞ்சன், லெட்சுமி, சிவசங்கரி , இந்துமதி, இராஜம்கிருஷ்ணன், அம்பை, புதிய மாதவி போன்ற பெண் எழுத்தாளர்களும், பெண்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து
மிக சிறப்பான படைப்புகளைப் படைத்துள்ளனர்.
தமிழில் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தில் பிரதாப முதலியாரின் மனைவியாக வரும் ஞானாம்பாள், கல்வி கற்றவளாகவும், போராடும் குணம் உள்ளவளாகவும் காணப்படுகிறாள். காலம் காலமாக இருந்த பெண்ணடிமைச் சமூகத்தில் இருந்து விடுபடும் முதல் பெண்ணாக இவள் காட்டப்படுகிறாள்.
எம்.வி. வெங்கட்ராம் தம்முடைய ஒரு பெண் பேராடுகிறாள், நித்திய கன்னி ஆகிய நாவல்களைப் பெண்ணிய நோக்கில் எழுதியுள்ளார்.
தலித் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளைக் குறித்து பாமா எழுதிய ‘கருக்கு’ என்ற நாவல் ஒரு தலித் பெண்ணின் வாழ்வியல் பேராட்டத்தைக் பேசுகிறது.
கு.சின்னப்ப பாரதி எழுதிய 'சங்கம்' என்ற நாவல் மலைவாழ் பெண்களைச் சமூகம் எப்படி நடத்தியது என்பதைச் காட்டுகிறது. கந்து வட்டிக்குக் கடன் வாங்கித் திருப்பி அளிக்க முடியாத வெள்ளையன், தன் மனைவி கருமாயியைக் கடன்காரனிடம் ஒப்படைக்க வேண்டிய கொடுமையைச் சங்கம் எனும் நாவல் காட்டுகிறது.
இராஜம்கிருஷ்ணனின் 'தனிமை'
என்ற சிறுகதையில் படிக்காத சென்ற தலைமுறைப் பெண் சந்தித்த பிரச்சனைகள் பற்றி ஒருவிதமாகவும் இன்று படித்த பெண்கள் சந்திக்கும் சிக்கல்களை மற்றொரு விதமாகவும் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தை எதிர்த்து போராடும் போது பெண் தனிமைப்படுத்தப்படுவதையும் சமூகத்தை மாற்ற முயலும் தொடர் நம்பிக்கை குறித்தும் இக்கதையில் கூறியுள்ளார்.
ஜோதிர்லதா கிரிஜாவின் 'அம்மாவின் அந்தரங்கம்' என்ற கதை பெண்கள் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் , கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்தது போதும் என்பதைச் சொல்லிச் செல்கிறது. கணவன் தவறைப் பொறுத்துக் கொண்டு அடங்கி போக வேண்டும் என்பது கண்மூடித்தனமாக வழக்கம். கணவனின் நியாயமற்ற செயலை எதிர்த்து பெண்கள் குரல்கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை இக்கதையின் மூலம் ஆசிரியர் கூறியுள்ளார்.
சுமதிரூபனின் 'அம்மா இது என் உலகம்' என்ற கதையில் விதவிதமான நகை, புடவை, கார் என்று வசதியுடன் பெண் இருந்தாலும் பெண்களுக்குச் சுயசிந்தனை , சுயமதிப்பு மிக முக்கியம் என்பதைக் கூறுவதாக இக்கதை உள்ளது. “புருஷனுக்காகச் சீலகட்டி ….. புருஷனுக்காக நகைபோட்டு அவனுக்காக சாப்பிட்டு அவனுக்காக சிரிச்சு அழுது தன்னைத் தொலைத்த அவலத்தை தாய் கூறியபோது”
இளையதலைமுறையாகிய ஆர்த்தி திருமணம் தன் தாயின் சுயத்தை அழித்துவிட்டதை உணர்வதாக ஆசிரியர் அமைத்துள்ளார்.
பாமாவின் 'பொன்னுத்தாயி' கதையில், பொன்னுத்தாயி படிக்காதவள் நான்கு பிள்ளைகளுக்குப் பிறகும் கணவன் குடித்துவிட்டு அவளை அடிக்கிறான். அவள் கூலியை அடித்து பிடுங்குகிறான். இது நாளும் தொடர்ந்த நிலையில் கணவனிடம் பிள்ளைகளை விட்டுவிட்டு தாய் வீட்டிற்கு வந்து சுயவியாபாரம் செய்து பிழைக்கிறாள் பொன்னுத்தாயி. தன்னை அடித்து இழுத்துப்போக வந்த கணவனை போலீசில் புகார் செய்கிறாள். கணவனே பிள்ளைகளை நீயோ வைத்து காப்பாற்று என்று கூற “பெத்தவதான் பிள்ளைகளை வளர்க்கனும்னு சட்டமா என்ன இங்கு கூட்டியறாத இனி நீ இந்த பக்கமே நீ தலயக்காட்டாத சொல்லிட்டேன் ஆமா“என்று கூறுகிறாள். இத்தொல்லைக்கு முற்றுப்புள்ளியாக தாலியை அறுத்து விடுகிறாள். அதிலுள்ள தங்கத்தை விற்று ஊருக்குள் கடையைத் திறந்து வியாபாரம் செய்கிளாள் என்று முற்போக்காக ஆசிரியர் கதையை முடித்துள்ளது கவனிக்கத்தக்கது. தனக்கான வாழ்வை தானே முடிவு செய்துகொண்டு வாழும் சுயசிந்தனையையும் இக்கதையில் பதிவு செய்துள்ளார்.
தமயந்தியின் 'விலங்களும் ஒரு விலாங்கு மீனும் ' என்ற கதையில், சித்ரா என்ற பெண் தான் விரும்பிய ஆணுடன் அவன் வீட்டிற்கு வந்து பார்க்கிறாள். அவன் வீடோ ஆணாதிக்கத்தின் பிடியில் சிக்கி இருப்பதைப் புரிந்து கொள்கிறாள். காதலுக்காக அடிமை வாழ்வை விரும்பாத அவள் அந்த வீடு தனக்கு சரியாக வராது என்பதை அறிந்து அவனை நிராகரிக்கிறாள். திருமணச் சந்தையில் இதுவரை பெண்கள் நிராகரிக்கப்பட்ட சூழலில் முதன்முதலாக ஆண் நிராகரிக்கப்பட்டதைக் கூறுவதிலிருந்து பெண்களின் சுயசிந்தனை, சுயதைரியம் இக்கதையை படிப்பவரால் அறிந்து கொள்ள முடியும்
மேற்கண்ட கதைகள் பெண்கள் உடலால் அடிமைப்பட்ட நிலையையும் காயம்பட்ட அனுபவத்தையும் கண்ணீரால் வெளிப்படுத்துவதையும் தவிர்த்து எந்த சூழலிலும் சுயம் இழத்தல் கூடாது என்பதை உணர்த்தும் வகையில் கணத்த சொல்லாடல்களில் அற்புதமாக அமைந்துள்ளது.
சமூகத்தில் எந்த நிலையில் இருந்தபோதிலும் பெண்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள், செயலாற்றத் தெரிந்தவர்கள் என்பதைத் தனது படைப்புகள் மூலம், அழுத்தமாகப் பதிவு செய்தவர் ஜெயகாந்தன். அவரது கதைகளில் மேல்தட்டுப் பெண்களை விடவும், நடுத்தர மற்றும் விளிம்புநிலைப் பெண்களே மிகுதியாக இடம் பெற்றுள்ளனர்.
ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள், யுக சந்தி, ஆகிய நாவல்களின் கதைத் தலைவி கங்கா, பெண்ணுக்கு ஏற்படும் அனைத்துச் சிக்கல்களையும் அடைந்து இறுதியில் கங்கையில் மூழ்கி மறைகிறாள்.
ஜன்னலில் காத்திருந்தே வயதாகிப் போன முதிர்கன்னியின் வாழ்க்கைப் பார்வையை கூறும் ' 'நான் ஜன்னலருகே உட்கார்ந்து இருக்கிறேன்'
வறுமையைப் பொருட்படுத்தாமல் கணவனின் அன்பே பெரிதென வாழும் "ராசா வந்துட்டாரு' கன்னியம்மா,
ஐந்து வருடங்கள் பிரிந்திருந்த சகோதரனைக் கண்டதும் பாசத்தில் திக்குமுக்காடும் "மெளனம் ஒரு பாஷை' சுசீலா,
தன் கணவனாகவே இருந்தாலும் அவனுடைய அந்தரத்தில் தலையிடுவது காட்டுமிராண்டித்தனம் என தன் மகனிடமே கூறும் "அந்தரங்கம் புனிதமானது' ரமணியம்மாள்,
உடல் வளர்ச்சிகளில் குறை இருந்தாலும் உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் "குறைப்பிறவி' செல்வி,
காலங்காலமாக விதவைகளுக்கென சமூகம் விதித்து வைத்திருந்த கட்டுகளை உடைத்து வெளியேறும் "யுகசந்தி' கீதா, விதவைப் பேத்தியின் மறுமணத்துக்கு முழு மனதோடு ஒப்புதல் வழங்கும் ‘யுகசந்தி’யின் பழைய தலைமுறைப் பாட்டி,
தவறுகள் குற்றங்கள் அல்ல’ சிறுகதையில் தன்னிடம் தவறாக நடக்க முற்பட்ட மேலதிகாரிக்குப் அவன் திருந்தி வாழ பெருந்தன்மையோடு மன்னிப்பு வழங்கும் ஸ்டெனோ தெரஸா,
ஜெயகாந்தன் அவர்களின் இப்படி எத்தனை எத்தனை பெண் பாத்திரங்கள்! எதை சொல்வது எதை விடுவது என்றே தெரியவில்லை அத்தனை கனமான கதாபாத்திரங்கள்! அத்தனையும் அற்புதமான வார்ப்புகள்!
காலங்காலமாக, பெண்கள் தினம் தினம் எதிர் கொள்ளும் இக்கட்டான சூழலை மிகவும் அழுத்தமாக புதிய மாதவி அவர்கள் கீழ்கண்ட கவிதை வரிகளில் எடுத்துரைக்கிறார்.
" காலில் குத்திய எல்லா முட்களையும்
காலம் எடுத்துவிடுவதில்லை.
பயணங்கள் அதனால்
நின்றுவிடுவதும் இல்லை.
விட்டுக்கொடுத்தல்,
சகிப்புத்தன்மை,
சமரசமாதல் .....
இதெல்லாமாக
அவள்மீது நீங்கள் எழுதி இருப்பது
வாழ்க்கைத்துணை நல சூத்திரங்கள்.
அதில் எப்போதும் அவளைப்
பூஜ்யமாகவே வைத்திருப்பதன் மூலம்
உங்கள் எண்களும்
தங்கள் ‘மதிப்பீடுகளை’
உறுதி செய்து கொள்கின்றன.
ஆம்.
யுகம் யுகமாக
அவள் கதைகளைவிட
அவளின் நிஜங்களே
பயமுறுத்துகின்றன."
இன்றும் கூட தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்துப் போராட முடியாத நிலையில் பெண்கள் இருப்பதை நாம் பல்வேறு செய்திகள் மூலம் அறிய முடிகின்றது.
இத்தகைய சூழலை எதிர்த்து நின்று சுய சிந்தனையுடனும், பொருளாதார சுய சார்புடனும், தன்னம்பிக்கையுடனும், உங்கள் பயணம் தொடரட்டும்!
மகளிர் தின வாழ்த்துக்கள்!
அன்புடன்
திருமதி சரோஜினி கனகசபை