Saturday, July 24, 2021

சிறிது வெளிச்சம் எஸ் ராமகிருஷ்ணன்

என்னை திகைக்க வைத்த சில வரிகள்.

மனிதர்களின் தீராத வாசனையின் பெயர் சிரிப்பு . குழந்தைகளின் சிரிப்பை பார்த்திருக்கிறீர்களா காரணமில்லாத சிரிப்பு அது.  குழந்தைக்கு நினைவுகள் இல்லை அது சிரிப்பை மட்டுமே தன் சந்தோஷத்தின் வெளிப்பாடாக கொண்டிருக்கிறது. 

தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று சிரிப்பை இழப்பது. அதை நாம் உணர்வதே இல்லை நாமும் குழந்தைகளும் சிரிப்பதற்கு காரணத்தை நாடுவதில்லை . 

பனி உருகுவது போல சிரிப்பு அவர்களின் மனதில் இயல்பாக வெளிப்படுகிறது. 

நோயை விட கொடியது தனிமை.  நோயுற்ற நேரங்களில்தான் மனது அடுத்தவர்களின் மீதான தனது உறவை மறுபரிசீலனை செய்து கொள்கிறது . ஏங்குகிறது . 

யாரை நமக்கு மிகவும் பிடித்து இருக்கிறதோ அவர்களுக்கு நாம் ஒரு கடிதம் கூட எழுத மாட்டோம். நம் ஒவ்வொருவர் மனதிலும் எழுத நினைத்து எழுதப்படாமல் விட்ட கடிதங்கள் இருக்கின்றன . நேரடிப் பேச்சில் சொல்ல முடியாததை எழுத்தில் சொல்ல முடியும் எழுத்து மௌனமும் வலிமையும் கொண்டது அதை முழுமையாக நாம் உணரவே இல்லை. பேச்சுமிக ஆனவுடன் எழுத்து சுருங்கிவிட்டது.

 உறவுகள் சுருங்கி விட்ட சூழலில் கடிதம் அவசியமற்ற வடிவமாகவே பலருக்கு தோன்றுகிறது . கடிதம் என்பது வெறும் பரிமாற்றம் மட்டுமல்ல. நாம் இன்னொருவரை நேசிக்கிறோம் என்பதன் சாட்சி. நம் மனதின் குரல் .  நேரில் சொல்ல முடியாத தவிப்பை கடிதம் சொல்லிவிடும் . 

மனிதர்களின் கண்டுபிடிப்பில் மகத்தானது சொற்கள் அது தானியத்தைப் போன்றது விளைநிலத்தில் விதைக்கப் படும்போது வளர்ந்து பலன் அளிப்பதோடு இன்னொரு விதையாகவும் மாறுகிறது . விதையாவதும் வீணாக்குவதும் நம் கையில் தான் இருக்கிறது .

கஷ்டத்தை விடவும் அதை மூடி மறைப்பது தான் பெரும் துயரம் . அவமதிப்பு வெறுப்பு என எத்தனையோ வலிகளை தாங்கிக்கொண்டு வாழ்க்கையின் மீதான பற்றுடன் இருக்கிறார்கள் மனிதர்கள். 

வாழ்க்கை அர்த்தம் மிகுந்தது.  ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் ஒரு காரணமும் அவசியமும் இருக்கிறது . 

அதை அறிந்து கொள்வதும் அறியாமல் கடப்பதும் அவரவர் தேடுதல் தொடர்பானது. ஆனால் எந்த மனிதனும் தேவையற்றவன் இல்லை . எந்த வாழ்க்கையும் பயனற்றது மில்லை

திருமணம் என்ற நூற்றாண்டு கால நடைமுறை பாலுறவுக்கான துணை சேர்க்க மட்டும்தானா?  

திருமண முறிவுக்கு ஆண் மட்டுமே காரணம் அல்ல பெண்களும்  காரணமாக இருக்கக்கூடும். பெரும்பான்மையான திருமணங்கள் வணிக ஒப்பந்தங்கள் போலவே நடக்கின்றன. 

உறவை விட பணம் பிரதானமாக விட்டது. எளிய மனிதர்களின் திருமணங்களில் சிறு சண்டைகளும் சச்சரவுகளும் வந்தபோதும் குடும்பம் பிரிவதில்லை .

ஆனால் வசதியான திருமணங்கள் எளிய காரணங்கள் கூட இல்லாமல் பிரிந்து விடுகின்றது என்பதே நிஜம்

பெண்களுக்கு திருமணம் ஏற்படுத்தும் மௌனம் புரிந்து கொள்ள முடியாதது .

அது ஒரு நீர் ஊற்றை போல அவள் கடந்த காலத்தின் நினைவுகளை விட்டு கொண்டே இருக்கிறது . அமைதி எப்போதும் புன்னகையில் தான் வேர்விட்டு இருக்கும் என்பார்கள் .ஆனால் இன்று திருமணம் ஆனதும் பெண்களிடமிருந்து இயல்பான சிரிப்பு மறைந்து போகத் தொடங்குகிறது. ந சிரிப்பதற்கு காரணம் தேவைப்படுகிறது என்பதே நமது அக வீழ்ச்சியின் அடையாளம்தான் .

பேருந்தில் சாலையோரங்களில் அலுவலகங்களில் காண்கிறேன் சிரிப்பை மறந்த பெண்களை எனது பயணங்களில். தன்னை மீறி அவர்கள் சிரிக்கும் தருணங்கள் அரிதானவை . 

ஏதேதோ யோசனைகள் கவலைகள் விளக்கமுடியாத திகைப்பு போன்றவற்றுடன் கூடிய  முகங்களையே பொதுவெளியில் அதிகம் காணமுடிகிறது 

காலில் அப்பிய ஈர களிமண்ணைப் போல மனவேதனை களோடு தான் பெண் தன் வாழ்வினை கடந்து போகிறாள்

பனியில் வாழும் பெண்குயின் தன் இணையை தேர்வு செய்வதற்கு காதலுடனும் தேடுகிறது . கண்டுகொள்கிறது. தேடி சேர்ந்த பிறகு ஒரு போதும் வேறு ஒரு பெண்ணை நாடுவதே இல்லை .

சில வேளைகளில் பெண் துணை இறந்துவிட்டால் அந்த ஏக்கத்துடன் அதே இடத்தை சுற்றி சுற்றி வருகிறது. வேறு எந்த பெண்ணையும் திரும்பிக்கூட பார்க்க மறுக்கிறது இணை சேரும் மிருகங்கள் கூட தங்களுக்குள் அன்புடன் இருக்கின்றன. 

நவநாகரீகம் கொண்ட மனிதன் மட்டுமே திருமண விஷயத்தில் வாலில்லாத நாயை நினைவுபடுத்துகிறான். அதுதான் கவலை அளிக்கிறது

புத்தகங்கள் கற்றுத்தரும் நீதி 

போதனைகளை விட எளிய மனிதர்களின் நடைமுறை சாத்தியங்கள் வாழ்வினை மேம்படுத்த உதவுகின்றன . 

குடும்பம் என்பது சேர்ந்து சாப்பிடுவது சேர்ந்து உறங்குவதற்கான இடம் மட்டுமல்ல  சேர்ந்து வாழ்வதற்கான வெளியும் கூட. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு புரிந்து கொள்ளும் மனதும் தன்னை திருத்திக் கொள்ளும் அக்கறையும் பரஸ்பர அன்பும் திறந்த உரையாடல்களும் அவசியம் .அது தவறுவதே இன்றைய குடும்ப விரிசலின் அடிப்படைக் காரணம் என்பேன். 

சிறுவர்கள் எப்பொழுதும் கேள்விகளால் சூழப்பட்டு இருக்கிறார்கள் .உலகின் ஒவ்வொரு செயலும் ஏன் நடக்கிறது என்ற கேள்வி அவர்களுக்குள் இயல்பாக எழுகிறது. 

புரிந்துகொள்ளவும் ரசிக்கவும் யோசிக்கவும் விரும்புகிறார்கள் .நமக்கு அதற்கான நேரம் இல்லை விருப்பம் இல்லை அப்படி குழந்தைகள் வளர வேண்டும் என்ற தேவை இல்லை என்ற மனப்பாங்கு நமக்குள் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. 

பள்ளியில் படிக்க வைப்பது மட்டுமே தங்களது ஒரே வேலை என்று பெரும்பான்மையான பெற்றோர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்

 மாணவனுக்கு கல்வியை மட்டுமே பள்ளி அறிமுகம் செய்யும் . வீடு தான் நிஜமான பள்ளிக்கூடம் மனித உறவுகளையும் பழக்கவழக்கங்களையும் ருசியையும் விருப்பத்தை ரசனையையும் தனித்திறன் களையும் வீடுதான் அறிமுகப்படுத்துகிறது. 

கற்றுத்தருகிறது 

இன்று உள்ள பிரதான பிரச்சனை கல்வி நிலையங்கள் அனைத்தும்  பணமயமாகி விட்டன என்பது மட்டுமல்ல வீடுகளும் எதையும் சிறுவர்களுக்கு கற்றுத் தருவது இல்லை என்பதும்தான் .

குழந்தைகள்  நமக்கு எதையோ கற்றுத் தருகிறார்கள் . அவர்கள் உணர்த்தும் பாடங்கள் அற்புதமானவை அதை விளக்கிச் கொள்வது அவ்வளவு எளிதல்ல

புத்தகம் வெறும் காகிதம் அல்ல . கண்ணாடி நம் முகத்தைக் காட்டுகிறது என்றால் அகத்தை காட்டுவதற்கு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன 

புத்தகம் இன்னொரு பிரபஞ்சம் அதனுள்ளே இந்த பிரபஞ்சத்தின் தீர்க்கமுடியாத பல புதிருக்கான பதில் காணப்படுகிறது. 

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சுயமாக அனுபவித்து அறிய முடியாத அத்தனையும் புத்தகம் வழியாக மனிதர்களுக்கு எளிதாக அனுபவம் ஆகிறது மனிதர்களின் நினைவுகள் அழிந்து போவது இல்லை அவை எழுத்தில் சொல்லில் வரிகளில் ஒளிந்து கொண்டு தன்னை உயிர்ப்பித்துக் கொள்கின்றன .

புத்தகம் என்பது மூன்று கரை உள்ள ஆறு என்கிறார் கவிஞர் தேவதச்சன் உலகின் நினைவுகளும் கனவுகளும் நம்பிக்கைகளும் ஒன்று கலந்து உருவானதே புத்தகம் அதுவே உலகின் ஒப்பற்ற அதிசயம். 

வாழ்க்கை இடமிருந்து எதைக் கற்றுக் கொண்டு இருக்கிறோம் எதை கைவிட்டு இருக்கிறோம் எதைக் கடந்து வந்திருக்கிறோம் என்பது தான் ஒவ்வொரு தலைமுறையின் பிரச்சனையும் முதியவர்களின் கேள்விகள் அறியாமையிலிருந்து எழுவதில்லை மாறாக ஆதங்கத்தில் இயலாமையில் வயதிலிருந்தே உருவாகிறது என்பதை நாம் ஏன் மறந்து போனோம்

No comments:

Post a Comment