நூல்: முதல் குரல்
ஆசிரியர்: பாரதி பாஸ்கர்
பாரதி பாஸ்கர் - நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான பெயர். பண்டிகைக்கால சன் தொலைக்காட்சி பட்டிமன்றங்களில், தனக்கென தனியிடத்தைப் பெற்றிருப்பவர். தன் பேச்சுத்திறமையால் நம் பலரது மனங்களைக் கொள்ளை கொண்டவர். இந்நூலுக்கு முன்னரே ஆசிரியரின் 'சிறகை விரி, பற!' மற்றும் 'நீ நதி போல ஓடிக்கொண்டிரு...' நூல்களை வாசித்திருக்கிறேன்.
'முதல் குரல்' - இங்கு, மூன்று பிரிவுகள் ஒரே நூலில் - ஒன்பது கட்டுரைகள், ஒன்பது சிறுகதைகள், எட்டு பதிவுகள்.
கட்டுரைகள் பற்றி:
'முதல் குரல்' கட்டுரையினூடே நூல் ஆரம்பமாகிறது. ஆண்கள் மட்டுமே ஒரு காலத்தில் தன்வசப்படுத்தியிருந்த மேடைப் பேச்சைப் பெண்களாலும் நிகழ்த்த முடியும் என்று காட்டிய சரஸ்வதி பாய் பற்றிய கட்டுரை அது. அவ்வளவு எளிதாகப் பெண்களைச் சமூகம் அங்கீகரித்துவிடுகிறதா என்ன? சரஸ்வதி பாய் பட்ட அவஸ்தைகளையும், அவதூறு வார்த்தைகளையும் விவரிக்கிறது கட்டுரை.
ஐஸ் ஹவுஸ் - சென்னை மெரீனா கடற்கரையருகே அமைந்திருக்கும் ஓர் அதிசயக் கட்டிடம். அக்கட்டிடம் பாரதிக்குப் பள்ளி நாட்களில் வகுப்பறையாக இருந்திருக்கிறது. பள்ளிக்கால நினைவுகளைப் பதிவிட்டதோடு, அக்கட்டத்தின் பின்னணியை, அங்கு நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்திருக்கிறார்.
எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றி ஒரு கட்டுரை. அவரின் வெற்றிக்குப் பின்னணியில் அவர் கணவர் இருந்திருக்கிறார். வழக்கமான நமது கூற்றை இங்கு மாற்றிக் கூறலாம், ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஓர் ஆண் இருக்கக்கூடும் என்று. அல்லவோ!
சிறுகதைகள் பற்றி:
முத்தான ஒன்பது கதைகள் நமக்காக.
'பூப்போல பூப்போல' என்றொரு கதை. தத்தெடுத்த பச்சிளங்குழந்தையைப் பேணி வளர்க்க, மகப்பேறு விடுமுறை வேண்டிப் போராடி வெற்றி பெறும் ஒரு பெண் பற்றியது. என்னை மிகவும் கவர்ந்த கதை.
'அப்பா என்னும் வில்லன்' என்றொரு கதை. பெரும்பாலும் அப்பாக்கள் பிள்ளைகளுக்கு வில்லனாகத்தான் தெரிகிறார்கள். இங்கு கௌரிக்கும் அப்படித்தான். எப்போது பார்த்தாலும் 'படி, படி' என்று அவளை விரட்டும் அப்பா. அந்த வில்லன் எப்படி அவளுக்கு ஹீரோவாக மாறுகிறார் என்பதுதான் கதை. கதையோட்டம் மி்க அழகு! கடைசியில் ஒரு வரி வரும். "இந்தப் பெருமைமிக்க விருதை வாங்க உங்களோடு 49 பேர் போட்டி போட்டார்கள். அவர்களிடம் இல்லாதது, உங்களிடம் இருப்பது என்ன?" என்று கௌரியிடம் கேட்பார்கள். அதற்கு அவளின் பதில்: என் அப்பா.
'1-2-3-4-1' என்று எண்களைத் தலைப்பாகக் கொண்ட ஒரு கதை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்களே. அதனைக் கண்முன் காட்டும் ஒரு கதை. வீட்டிலிருக்கும் திலகாவிற்குத் தன் பக்கத்து வீட்டு மைதிலியைப் போல வங்கிப்பணிக்குச் செல்ல ஆசை. மைதிலிக்கோ, அவள் மேலதிகாரி அஞ்சனா பதவிமீது ஆசை. அஞ்சனாக்கு வங்கியின் நிர்வாக அதிகாரி மீனா மஹாதேவன்மீது பொறாமை. மீனா மஹாதேவன் இறுதியில் முதலில் குறிப்பிட்ட திலகாவைக் கண்டு, 'அட இவள்போல நம்மால் நிம்மதியாக வாழ முடியவில்லையே' என்று ஏங்குவதாய்க் கதை முடிகிறது. எவருக்கும் இருப்பதில் திருப்தி இருப்பதில்லை, இல்லாதவற்றை எண்ணியே ஏங்கித் தவிக்கிறோம், இல்லை!
'வெங்கட் மற்றும் விக்ரம்' என்றொரு கதை. என்னதான் ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே தட்டில் கைகழுவும் நண்பர்கள் என்றாலும் ஒரு கட்டத்தில் பிரிவு என்பது எதார்த்தம், அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று நிதர்சனத்தைக் குறிப்பிடும் ஓர் அழகான கதை.
பெண் முன்னேற்றம் பற்றி நிறைய பேசிவரும் பாரதி, பெண்களுக்காக எழுதிய பதிவுகளில் சில இங்கு இடம்பெறுகின்றன. ஒரு பெண் என்னதான் தொழிலில், வேலையில் சிறந்துவிளங்கினாலும், அவள் வெற்றிக்கு வயிற்றெரிச்சலோடு சில விமர்சனங்கள், 'என்னதான் அவள் இந்த ஆபிஸில் பெரிய ஆளாக இருந்தாலும், வேலையில் ஜொலித்தாலும், அவள் ஒரு நல்ல அம்மாவாக, மனைவியாக, மருமகளாக, மகளாக இல்லையே!' என்றும், 'அவள் எப்படி இந்த இடத்துக்கு வந்தாளென்னு எனக்குத் தெரியாதா? அந்த மேனேஜரோட குலுங்கிக் குலுங்கி அவள் சிரிக்கும்போதே எனக்குத் தெரியும்' என்றும் ஏன் வந்து விழுகின்றன என்று வினவுகிறார். உண்மைதானே! சமூகம் ஏனோ பெண்களைக் குற்றவுணர்வுடனே வைத்துக்கொள்ள விரும்புகிறது.
அலுவலகத்தில் அழும் பெண்களைப் பற்றிய ஒரு கட்டுரை. சில பெண்கள் அலுவலகங்களில் எங்கும் அழுகை, எதிலும் அழுகை என்று கண்ணீரை ஒரு பாதுகாப்புக் கவசமாக பயன்படுத்துவதைப் பேசுகிறது. அது கூடாது என்கிறார் பாரதி. 'நீ முன்னேற விழைகிறாயல்லவா? அப்படியெனில் சிரமங்களையும் சவால்களையும் கூடுதலாக நீ சந்தித்துதான் ஆக வேண்டும்' என்று பெண்களுக்குக் கனிவுடன் அறிவுறுத்துகிறார்.
கட்டுரைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக ஆண் - பெண் புரிதல் பற்றி, சம உரிமை பற்றி அவர் பயன்படுத்திய கீழுள்ள வரிகளைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்:
'என் வீட்டுக்காரருக்கு வெந்நீர் வைத்துக்கொள்ளக்கூடத் தெரியாது!' என்று நாம் சொல்வது நம் கணவர்களுக்கு அவமானம். 'என் மனைவிக்குக் கரண்ட் பில் கூடக் கட்டத் தெரியாது' என்று கணவர்கள் சொல்வது மனைவிகளுக்கு அவமானம்.
மொத்தத்தில் முதல் குரல் - பெண்களின் குரல், சம உரிமைக்கான குரல்!
No comments:
Post a Comment