வீடு மாறிப் போவது என்பது வெளிக்காட்டிக்கொள்ள முடியாத ஊமை வலி.அதிலும் சொந்த வீட்டில் குடியிருந்துவிட்டு பொருளாதாரக் காரணங்களுக்காக வாடகை வீட்டுக்குப் போவது , மனமறிந்த வேதனை .அந்தப் பிரிவு , துண்டிகப்பட்ட பல்லியின் வால்போல நமக்குள்ளாகவே துடித்துக்கொண்டு இருக்கக்கூடியது.
வாடகை வீடோ , சொந்த வீடோ எதுவாயினும் , நாம் வசிக்கத் துவங்கியதும் நம் ஆசைகளும் ஏமாற்றங்களும் படிந்து நமது அந்தரங்க வடிவமாகிவிடுகிறது. 'வீடு'.வீட்டின் சுவர்களுக்கு மட்டும் பேசத்தெரிந்தால் , எவ்வளவு கதைகளைச் சொல்லும் தெரியுமா?
சுவர்கள் நம்மைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றன என்ற சிந்தை நமக்கு இருப்பதில்லை.மாறாக ,ஒரு போர்வை போல நமது அழுகை வெளியே தெரியாமல்தன் அகன்ற கைகளால் சுவர்கள் மறைத்துக் கொள்கின்றன. சுவரிலிருந்து உதிரும் காரைகளைபோலவே நம் இயலாமைகள் வீடெங்கும் உதிர்ந்து கிடக்கின்றன.
வீட்டின் கதவுகள் , ஒரே நேரத்தில் வெளியில் இருந்து எதுவும் உள்ளே நுழைந்துவிடாமலும் , உள்ளிருந்து ரகசியங்கள் வெளியே போய்விடாமலும் தடுத்துக்கொண்டு இருக்கிறது. வீடு நம் நிர்வாணம் அறிந்த கண்ணாடி.
வீடு மாறிப்போனவர்களின் பேச்சில் எப்போதாவது வசித்த வீடுகள் பீறிடுகின்றன."அந்த வீட்டில் ஒரு கிணறு இருந்தது அந்த வீட்டின் பின்புறம் நிலா வெளிச்சம் படிக்கட்டில் அடிக்கும்.அந்த வீட்டில் மழை பெய்யும்போது கேட்கும் சத்தம் வேறுவிதமாக இருக்கும்.அந்த வீட்டின் தரை குளிர்ச்சியானது'என்று எதையோ சொல்லி வீட்டின் நினைவுகள் பீறிட்டுவிடாமால் அடக்கிக்கொள்கிறோம்.
சிறுவர்கள் , வசித்த வீடுகளை உடனே மறந்துவிடுவதில்லை. அதை கடந்து செல்லும் சந்தர்பங்களில் எல்லாம் , 'அது நம் வீடுதானே ...! என்று அடையாளம் காட்டுகிறார்கள்.
அந்த வீட்டினை ஏக்கத்துடன் திரும்பிப்பார்க்கிறார்கள். நமக்கும் அப்படிப் பார்க்க வேண்டும் என்று உள்ளூர ஆசை இருக்கக்கூடும்.நாம் தயங்கி நிக்கிறோம்.பல நேரம் சமூக கூச்சங்களுக்கா அதை விலகி விடுகிறோம் .ஆனால் , நாம் வசித்த வீடுகள் நம் நினைவில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றது
No comments:
Post a Comment