Monday, November 8, 2021

கதைகளின் வழியே ஜென்

 மனைவியின் ஆவி!

அவர்கள் அன்னியோன்யமான தம்பதி. 

சாகிற பொழுது “எனக்கு பின்னால், வேறு ஒருத்தியோடு வாழ்வதை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இன்னொரு திருமணம் செய்தால், ஆவியாய் வந்து தொல்லை கொடுப்பேன்” என்றாள்.

மூன்று மாதத்திற்கு பிறகு ஒருத்தியை காதலிக்க ஆரம்பித்தான். அன்றிரவே ஆவி வர ஆரம்பித்தது. எங்கு சந்தித்தார்கள்? என்ன பேசிக்கொண்டார்கள்? என்பதை புட்டு புட்டு வைத்தது

ஒரு ஜென் துறவியை பார்க்க ஆலோசனை தந்தார்கள். எல்லாவற்றையும் கேட்டார். “சாதுர்யமான ஆவி தான். கை நிறைய புளியங்கொட்டைகளை எடுத்துக்கொள். இன்றிரவு ஆவி வரும் பொழுது “இதில் எத்தனை புளியங்கொட்டைகள் இருக்கிறது என கேள். இதற்கு பதில் சொல்லாவிட்டால் இனி அந்த ஆவி வராது” என்றார்.

அன்றிரவும் ஆவி தவறாமல் வந்தது. ”ஜென் துறவியை எல்லாம் பார்க்கிறாய்?” என்றது நக்கலாய்.  “இவ்வளவு பேசுகிறாயே! எத்தனை புளியங்கொட்டைகள் இருக்கிறது என சொல்? என்றார். ஆவியிடமிருந்து பதிலில்லை. அதற்கு பிறகு வரவும் இல்லை. ஆவிகள் கணக்கில் வீக்கா? 

அவனுக்கு தெரிந்திருந்தது எல்லாம் ஆவிக்கும் தெரிந்திருக்கிறது. அவனுக்கு தெரியாதது ஆவிக்கும் தெரியவில்லை. அப்படி என்றால், ஆவி என்பது அவனுடைய மனப்பிராந்தி. 

Illusion.

- "கதைகளின் வழியே ஜென்" புத்தகத்திலிருந்து...

வீட்டின் மூளையில் ஒரு சமையலறை - எழுத்தாளர் அம்பை


என் சகோதரி அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியம் "யாராச்சும் என்னை ரெண்டு நாள் உட்கார வச்சு ஒரு கஞ்சி மட்டும் கொடுத்தா கூட போதும்".அப்போதெல்லாம் எனக்கு அவ்வளவு சிரிப்பாக இருக்கும்.என்ன இவளுக்கு இப்படி ஒரு ஆசையென்று. ஆனால் இப்போது எனக்கே அப்படி யாராவது உணவளித்தால் போதுமென்றிருக்கிறது.

 இதற்கும் எல்லா  நேரமும் சமையலறையோடு இருக்கும் வாழ்க்கை முறை எனக்கில்லை. நான் விரும்பும்போது வெளியில் உணவுண்ண முடியும்.எந்த நேரடி கட்டுப்பாடுகளும் பொருளாதார இடர்ப்பாடுகளும் இல்லை. இருந்தும் ஒரு குடும்பத்தின் தலைமை பொறுப்பாளராக நான் மாறிய பின் எனக்குள் நிகழ்ந்த சமையலறை குறித்த மனமாறுதல்களும் கண்ணோட்டமும் நானே நம்ப முடியாத வகையில் இருந்தது. கிட்டத்தட்ட நான் வகைப்படுத்தியிருந்த எண்ணங்களுக்கு முற்றும் நேரெதிரானவை அவை. 

விடுமுறை நாட்களில் ஓய்வுக்காக உணவகங்களில் வாங்கி சாப்பிட முடிவெடுக்கும் போதெல்லாம் நான் பதற்றம் கொள்கிறேன். அதை இங்கேயே செய்து விடலாம் என்று மறுத்து முன் செல்லும் போது அரிதான விடுமுறை முழுக்க சமையலறையில் விரயமாகி விடும். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் அந்த ஓய்வின்மையை நான் விரும்பினேன். அவ்வாறு உணவு சமைத்து பரிமாறும் போது மட்டுமே நான் என் கடமையை சரிவர செய்கிறேன் என்று எண்ணம் கொள்கிறேன். எத்தனை பிற்போக்கானது. ஆனால் அதுவே உண்மையானது.  

நான் பேசிய அத்தனை முற்போக்கான சொற்களும் உதிர்ந்து நான் வெறும் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு இந்திய குடும்பப் பாங்கான பெண்ணின் பிம்பமென மட்டுமே எஞ்சுகிறேன். 

அம்பையின் எழுத்துக்கள் என் மனதிற்கு மிக நெருக்கமானது. எவரவர் எனக்கு பிரியமானவரோ அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப நான் வடிவமைக்கப்படுகிறேன்.ஏனெனில் நான் அனைவரின் நுண்ணுணர்வுகளோடும் எளிதில் பொருந்தி விடுவேன். இயல்பான கட்டுக்கோப்பும் வகுக்கப்பட்ட பழக்கவழக்கங்களும் கொண்ட நடுத்தர இல்லத்தினரின் அத்தனை குணங்களையும் என் இயல்பில் நான் கொண்டிருந்தேன். ஆனால் என் உள்ளம் இதற்கெல்லாம் அப்பாற்ப்பட்டு தனித்திருந்தது.அது வழக்கமான வரையறைக்குள் அடங்கவில்லை. அப்போது அம்பையின் எழுத்துக்கள் என்னை நானே கண்டடைய வகை செய்தன. என் மிக அரிதான மன ஓட்டங்கள் அதில் இயல்பாய் அமைந்திருக்கும்.கூட்டு அமைப்பில் வாழ்ந்தாலும் நான் என்னளவில் தனியவள்.எனக்கே எனக்கான கனவுகளும் பெருமிதங்களும் அகங்காரமும் சிறுமையும் கொண்டவள். எனக்கான தருணங்களை ரசிப்பவள்.பறத்தலே அடையாளமென கொண்டிருக்க விரும்புபவள். அம்பையின் கதைகளில் அப்படிப்பட்ட பெண்களை நாம் காணலாம்.

அம்பையின் "வீட்டின் மூலையில் ஒரு சமையலறை"மிக மிக யதார்த்தமான என் மனதிற்கு நெருக்கமான சிறுகதை. கதைக்களம் ராஜஸ்தான் கூட்டுக் குடும்பத்தினை மையப்படுத்தியது.தாங்கள் நன்றாக சாப்பிடுவோம் என்பதில் பெருமைக் கொண்டிருக்கும் ஆண்கள். அவர்களை நன்றாக வைத்திருக்கிறோம் என்று பெருமைக் கொண்டிருக்கும் குடும்பத் தலைவி.அத்தனை பெரிய வீட்டில் போனால் போகிறதென்று ஒட்ட வைத்தது போல் ஒரு சமையலறை.ஒரே ஜன்னல். ஜன்னல் வழியாக பார்த்தால் தெரியும் வகையில் அழகிய பச்சை மலைகள். ஆனால் எப்போதும் மலைகளை பார்க்க முடியாத படி துணிகள் உலர்த்தப்படும் கம்பிகள் கட்டப்பட்டிருக்கும். பாத்திரங்களை சமையலறைக்குள் கழுவினால் தரை முழுக்க தண்ணீர் பரவி விடும். 

அந்த இருண்ட காற்றோட்டமில்லாத சமையலறையில் தான் கணக்கில்லா பூரிகளும் சப்ஜிகளும் இனிப்புகளும் வேறு பலகாரங்களும் செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. மிக அறிவாளியான வங்கியில் வேலை பார்க்கும் மருமகளும்,படித்த பிற மொழிகள் பல அறிந்த மமருமகளும்,காதல் திருமணம் செய்துக் கொண்ட புத்திக் கூர்மையும் மாற்று சிந்தனைகளும் கொண்ட தென்னகத்தின் மருமகளும்  அந்த அடுக்களையில் டீ போட்டுக் கொண்டும் சப்பாத்திகள் உருட்டிக் கொண்டும் புலாவ் செய்துக் கொண்டும் தங்கள் விடுமுறைகளை ஓய்வாக செலவிடுகிறார்கள். அந்த சமையலறையை விரிவாக்கம் செய்யும் வேண்டுகோள் ஏளனத்தோடு பயனில்லாத செலவு என நிராகரிக்கப் படுகிறது. அதற்கு பதிலாக மேலும் துணி உலர்த்தும் கம்பிகள் ஜன்னலுக்கு வெளியே தெரியும் மலைகளை மறைத்துக் கட்டப்படுகிறது.

சுற்றுலா செல்ல முடிவு செய்யும் போது பெண்கள் நான்கு மணி இருளுக்குள்ளாக எழுந்து பூரி சுடுகிறார்கள். அப்போது அவர்கள் பேசுவது தொந்தரவு தருவதாகவும் தூக்கத்தினை கெடுப்பதாகவும் இருப்பதாக வீட்டு ஆண்களால் கூறப்படுகிறது. சுற்றுலா செல்லும் இடத்தில் சுட சுட பக்கோடா போடுவதற்காக சிறு அடுப்பு எடுத்துச் செல்லப்பட்டு குழந்தைகளை அடக்கியவாறு அங்கும் அவர்கள் சமைக்கிறார்கள். அந்த வீட்டின் தலைவி ஜீஜி உடல்நலம் குன்றி மயக்கம் அடைகிறாள். தன்னிலை அடைந்தவுடன் அவள் முதலில் அன்றிரவு சமைக்க வேண்டிய உணவுகளை பட்டியலிடுகிறாள்.மருமகள்களை அழைத்து வெகு வேகமாக தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள். தான் சிறு வயதில் திருமணம் செய்து நகைகள் அணிந்து அந்த வீட்டிற்கு வந்தது பற்றியும், தன் அம்மா நன்றாக அலங்கரித்துக் கொள் சமையலறையை கைப்பற்றிக் கொள் என்று தனக்கு அறிவுறுத்தியதாகவும், சிறு வயதில் 3கிலோ ஆட்டா பிசைந்ததனால் கை ரத்தம் கட்டியதாகவும் தன் வாழ்வின் நிகழ்வுகளை கடைசி மருமகளிடம் தன்னை மீறிய நிலையில் சொல்லிக் கொண்டே வருகிறாள்.

 தன் முதல் மகன் மாடியில் இருந்து தவறி விழும் போது தான் சமையலறையில் இருந்ததாகவும், அவன் இறப்பு சடங்குகள் முடிந்த பிறகு வந்து மீதமான பூரிகளை பொறித்ததாகவும் எந்த உணர்வுமற்ற குரலில் கூறுகிறாள். அதை கேட்டு அதிரும் இளைய மருமகள் அவள் காதருகில் குனிந்து இந்த நகைகளுக்கும்  புடவைக்கும் அடியில் இருக்கும் உண்மையான ஜீஜியின் விருப்பங்களை கண்டடைந்து அதை நோக்கி இந்த சமையலறையில் இருந்து விடுபட்டு போகுமாறு கூறுகிறாள். தனக்கென பிடித்தவை எவையென்றே ஜீஜிக்கு தெரியவில்லை. அவள் மன ஆழத்தில் சென்று அவளையே கண்டடையுமாறு மருமகள் உரைப்பதுடன் முடிகிறது சிறுகதை. 

இதுவரை இக்கதையினை நிறைய  முறை படித்திருக்கிறேன். முதன்முறையாக உணர்ந்த அதே மனப்பாரத்தை ஒவ்வொரு முறையும் உணர்கிறேன். ஒவ்வொரு முறையும் இக்கதையுடன் பொறுத்தி பார்க்க எனக்கு தெரிந்த பெண்கள் நினைவில் வந்துக் கொண்டே இருக்கிறார்கள்.

 சமையலறையுடனான பெண்கள் பந்தம் நம் சமூகத்தில் உணர்வு சார்ந்து கட்டமைக்கப்பட்டு விட்டது. ஆதலால் அந்த அமைப்பிலிருந்து சிறிது பிசகி இளைப்பாறுதல் கூட பெண்களை குற்றவுணர்வு கொள்ள செய்து விடுகிறது.இது மாறும் என்பதை விட மேம்பட்டு பரிணாமிக்கும் என்றே தோன்றுகிறது. செயல்கள் இலகுவாகலாம் ஆனால் முற்றொழிய வாய்ப்பில்லை.எத்தனை தூரம் பறந்தாலும் பெரும்பாண்மையான இந்திய பெண்களின் வேர்கள் வீடுகளிலே நிலைக் கொள்கின்றது. 

Wednesday, October 13, 2021

அழகு

 எது அழகு

சிவந்த நிறமா

கூறான மூக்கா

வேல் போன்ற விழிகளா 

வனப்பான உடல் அமைப்பா

வண்ண வண்ண உடைகளா

வித விதமான சிகை அலங்காரங்களா....

விலை உயர்வான நகை அலங்காரங்களா

இவைகளெல்லாம் அழகுதான்

ஆனால், இவைகள் மட்டுமே அழகல்ல....

குழந்தைகளை அன்போடும் பண்போடும் அரவணைத்து வளர்க்கும் பெற்றோர்கள் அழகு

அப்பெற்றோர்களை வயதான காலத்தில் பேணிக்காக்கும் பிள்ளைகள் அழகு....

மனைவியை மட்டம் தட்டாத 

கணவன் அழகு

கணவனை விட்டுக் கொடுக்காத மனைவி அழகு

பெண்களை கண்ணியமாக நடத்தும் ஆண்கள் அழகு 

நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட  பார்வையுடன் கண்ணியம் காக்கும் பெண்கள் அழகு....

தொழிலில்  அறத்தையும், நேர்மையையும் இரு கண்களாக போற்றுபவர்கள் அழகு

கையூட்டு வாங்காத கைகளுக்குச் சொந்தக்ககார்ர்கள் அழகு....

பிறர் மனம் புண்படாமல் பேசும் அதரங்கள் அழகு 

பிறரை ஊக்கப்படுத்தும் சொற்களுக்குச் சொந்தக்கார்ர்கள் அழகு

பிறர் துன்பம் கண்டால் கலங்கும் கண்கள் அழகு

அத்துன்பத்தைக் களைந்திட விரையும் கரங்கள் அழகு 

சமுதாய மேம்பாட்டிற்கு உழைக்கும் மனிதர்கள் யாவரும் அழகு....

மலர்ந்த முகமும், இனிய சொல்லும் கொண்ட மாந்தர்கள் எப்போதும் அழகு 

Wednesday, September 15, 2021

நீட் தற்கொலைகள் தவறான முடிவு

 

அரசியல் என்பது எப்போதும் நிகழ்ந்து கொண்டிருப்பது.  அதில் ஆயிரம் மாற்றங்கள் வரும்.  ஆனால் மாணவர்களின் கடமை என்பது அவர்களுக்கு முன்னால் தரப்பட்டிருக்கும் பாடத் திட்டத்தை படிப்பது மாத்திரமே. 

 இல்லாவிடில் வேறு பாடத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  இல்லை மிகப் பெரிய அநீதி இழைக்கப் படுகிறது என நினைத்தால் அன்று இந்தி எதிர்ப்புக்காக மாணவர்கள் களம் இறங்கி போராடியது போல் களமிறங்க வேண்டும்.

 தற்கொலை செய்து கொள்வது எந்த வித த் திலும் ஆதரிக்க தக்கதல்ல.  பெற்றோர்கள் கல்வியாளர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். 

 குழந்தைகளுக்கு விருப்பமில்லாத கல்வியை அல்லது அவர்களால் முடியாது என அச்சப்படும் கல்வியை அவர்கள் அடைந்தே தீர வேண்டும் என்று நிபந்தனை விதிக்காதீர்கள்.  பிள்ளைகளில் சிலர் மருத்துவர்களாகா விட்டால் நட்டமொன்றுமில்லை.  ஆனால் அனைத்து குழந்தைகளும் தங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும்.

தோழர் எனும் சொல்

 *தோழர் என்ற சொல்*


*1400 -ஆண்டுகளுக்கு* *முன் உருவான உறவும்,  *வார்த்தையும்தான்*  *"தோழர்"*. 


ஆண்டான் அடிமைக் காலத்தில் அடிமை முறையினை ஒழிக்க, ஆதிக்கத்தில் இருந்த திருச் சபைக்கும், அரசனுக்கும் எதிராக கலகம் செய்த கலகக்காரர் , சிலுவையில் ஏற்றி   கொல்லப்பட்ட புரட்சியாளர்  *"இயேசு"* கூட தன்னுடன் இணைந்து நின்ற சக போராளிகளை *"சீடர்கள்"* என்று  குறிப்பிட்டதாகவே வேதாகமம் கூறுகிறது. 


14-நூற்றாண்டுகளுக்கு முன் பாலைவன காட்டரபிகளின் மனிதத்துக்கெதிரான அடிமை முறை, பெண்ணடிமைத்தனம், விபச்சாரம், வட்டி போன்ற சமூகக் கொடுமைகளையும், சிலை வணக்கம் போன்ற மூடத்தனங்களையும்  எதிர்த்து நின்று, ஆயுதமேந்திய யுத்தத்தால்  ஒரு புரட்சிகர அரசினை நிறுவிய இறுதி நபி என அழைக்கப்படும் *முகமது நபியவர்கள்தான்* முதன் முதலாக  தன்னுடன் உறுதுணையாக நின்று போரிட்ட தம் சகாக்களை *"தோழர்கள்"* என்றழைத்தார்.


எங்கெல்லாம் சமூக கொடுமைகள் இருக்கிறதோ, எங்கெல்லாம் அடக்குமுறை அரசுகள், மக்கள் விரோத அரசுகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் அதை எதிர்த்த களத்திலே, மாற்றத்துக்கான போரிலே முன் நிற்பவர்கள் தம் உடன் நிற்பவர்களை *"தோழர்"* என்றழைப்பது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.. 

உலகம் முழுவதுமுள்ள மார்க்சிய சிந்தனையாளர்கள் தங்களை ஒருவருக்கொருவர் தோழர் என அவரவர் மொழியில் அழைப்பது  வெறும் அலங்காரத்துக்காக அல்ல... மாற்றுச் சிந்தனை கொண்டவர், பொதுநல சிந்தனையாளர்  என்பதன் அங்கீகாரம் அது. அம்பேத்கரிய, பெரியாரிய சிந்தனையாளர்களும் கூட தம் அரசியல் பயண சகாக்களை தோழர் என்றழைப்பதன் காரணமும் அவர்கள்  மனித நேய சிந்தனையாளர்கள், சமூக மாற்றத்துக்கான செயல்பாட்டாளர்கள் என்பதால்தான்.


*"தோழர்"* என்ற  உறவுச் சொல் கேட்டதும் யாருக்கெல்லாம் *காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது* போல் இருக்கிறதோ அவர்களெல்லாம் பெரும்பான்மை மக்களின் மீது தம் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளத் துடிக்கும்  ஆளும் அதிகார  கூட்டத்தவராகவோ, அல்லது அவர்களின் வால்  பிடித்து வாழும் கழிசடை அரசியலுக்கு முட்டு  கொடுப்பவராகவோதான் இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 


மக்களுக்காக வாழ்ந்து மடிந்த மாவீரர்கள் உயர்த்திப் பிடித்த *"தோழர்"* எனும் உறவை முன் நிறுத்துவோம். *உழைக்கும் மக்களிடம் எல்லையற்ற, எதிர்பார்ப்புகளற்ற  அன்பை பகிர்வோம்.*

Wednesday, September 1, 2021

குறளோவியம்

 குறளோவியம் - 

கலைஞர் மு. கருணாநிதி


காலை நேரம், புலவர் கபிலர், பசும் புல் ஒன்றைப் பார்க்கிறார். தரையுடன் ஒட்டிக்கிடக்கும் அந்தச் சிறிய புல்லின் நுனியில், திணையின் அளவைக் காட்டிலும் குறைவான ஒரு பனித்துளி யையும் அவர் காண்கிறார்.


 பனித்துளியை உற்று நோக்குகிறார்.  அந்த பனித்துளியின் அளவுக்குள் - ஆங்கருகே  ஓங்கி உயர்ந்து நிற்கும் பனைமரம் முழுவதும் தெரிகிறது! அந்தக் காட்சி கபிலரைக் கற்பனைச் சிறகடித்துப் பறக்கச்  செய்கிறது! "ஆகா! ஒரு சிறு பனித்துளிக்குள்ளே பக்கத்தேயுள்ள பனைமரம் முழுவதும் தெரிகின்றதே;


 இதே போலத்தான் வள்ளுவரின் குறட்பாவுக்குள்ளும் இந்த வையகத்துக்குத் தேவையான பெரும் பொருள் பொதிந்து கிடக்கிறது" என்கிறார். 


குர்ஆன், பைபிள், பகவத்கீதை போன்றவை, மார்க்க மத நூல்களாகப்  போற்றப் படுகின்றன! 


குறள், ஒரு குறிப்பிட்ட மதத்தின் அல்லது மார்க்கத்தின் வழி காட்டும் நூலாக இல்லாமல், பொதுவான வாழ்க்கை நெறி வகுக்கும் நூலாகத் திகழ்கிறது.

Saturday, August 28, 2021

 குறளோவியம்  

-  கலைஞர் மு. கருணாநிதி


அதிகாரம் - 110    குறிப்பறிதல் ;

பாடல்கள் - 1091, 1094


வைத்தியர் ஊசி குத்துகிறார்;

உடலில் வலி ஏற்படுகிறது.  

ஆனால் அந்த ஊசி வழியே 

உடலுக்குள் செல்கிற மருந்து, 

நோய் தீர்க்கப் பெரிதும் உதவுகிறது. 


வைத்தியரிடம் வேதனை தரும் ஊசியும் இருக்கிறது; நோய் வேதனையை நீக்கும் மருந்தும் அதனுள் இருக்கிறது!.  


இதனை ஓர் அழகிய பெண்ணின் இரு விழி பார்வையுடன் ஒப்பிடுகிறார்.  ஒரு விழி பார்வையால் அவனுக்கு வேதனை உண்டாக்கினாள். மறு விழி பார்வையால் அந்த வேதனையை போக்கினாள் என அவளின் பார்வையின்  சிறப்பை கீழ்கண்ட குறளின் மூலம் விளக்குகிறார். 


"இருநோக்கு இவளுன்கண் உள்ளது ஒரு நோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து"


அப்படி அவள் பார்க்கிறாளே  என்பதற்காக  அந்த இளைஞன் வாளாதிருந்து விட்டானா என்ன? அவனோ ஓர் வம்புகார இளைஞன், காதல் மயக்கத்தில் என்னென்ன சொல்கிறான் பாருங்கள்:


" நான் அவளை பார்க்கும் போது என்னை பார்க்காமல் நிலத்தை பார்கிறாள். நான் அவளை பாராதிருக்கும்போது என்னை பார்த்து மகிழ்கிறாள் " என்று கூறுகிறான்.  இது எவ்வளவு பெரிய பொய் பாருங்கள்;


இவன்தான் அவளை பார்க்கவில்லையே பின்னர் அவள் இவனை பார்ப்பது மட்டும் இவனுக்கு  எப்படி தெரியும்? அதேபோல் இவன் அவளை பார்க்கும் போது நிலத்தை நோக்குகிறாளாமே ; அது  எப்படி? இவனை பார்த்து விட்டு தானே அவள் வேறு பக்கம் நோக்கி திரும்ப முடியும்?  


இந்த பார்வைக்குத் தான் 'பார்க்காமல் பார்க்கும் பார்வை' என்று பெயர் போலும் என்கிறார். 


அவர்கள் கண்களை வேறு பக்கம் திரும்ப அவர்களே முயன்றாலும் அது முடியாமல் ஒருவரையொருவர் பார்த்து கொள்கிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறார் வள்ளுவர் கீழ்க்கண்ட குரளில் 


"யான்நோக்குங் காலை நிலன்நோக்கும்       நோக்காங்கால் 

தான்நோக்கி மெல்ல நகும்"


(மெல்ல நகும் - உள்ளுக்குள் மகிழ்ச்சி யடைவாள்) 


இக் குறளோவியத்தில் கலைஞரின் கற்பனை வளம் மிக அபாரமாக உள்ளது. அனைத்து வயதினரையும் வசீகரிக்கும் விதத்தில் உள்ளது. வாசிக்கும் போது குறளோவிய காட்சிகள் கண்முன்னே நிகழ்வது போன்று  தோன்றுகிறது..

 குறளோவியம் - கலைஞர் கருணாநிதி


வெகு நாட்களாக தேடி கிடைக்காத பொக்கிஷமான இந்நூல் 26 ஆம் ஆண்டின் திருமண நாள் பரிசாக என் கணவரிடமிருந்து இன்று கிடைத்தது.


 நூலை வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து கீழே வைக்க இயலவில்லை. இந்நூலில் 300 குறளோவியங்கள் இடம் பெற்றுள்ளன. 354 குறட்பாக்கள்  பயன்படுத்தி இருக்கிறார். 


 திருக்குறளுக்கு எவ்வளவோ பேர் உரை எழுதி இருந்தாலும் கலைஞர் அவர்களின் அற்புதமான கற்பனா சக்தி நிறைந்த கதைகளுடன் பகுத்தறிவு சிந்தனை கலந்த இக்குறளோவியம் படிப்போர் மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதோடு  மட்டுமல்லாமல் பசுமரத்தாணி போல் பதிந்து போய்விடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. 


 நான் வாசிக்கும் இந்நூலின் சிறப்புகளை நாளை முதல் முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Thursday, August 26, 2021

புத்தனாவது சுலபம் - எஸ். ராமகிருஷ்ணன்

 


சிறுகதை என்பது நீந்திக் கொண்டிருக்கும் மீனைச் சித்திரம் வரைவது போன்றது, அது ஒரு சவால் என்று தோழர் எஸ். ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 பல சிறுகதைகள் உள்ளடக்கிய இந்த நூல் 'புத்தனாவது சுலபம்' . 

வேறுபட்ட கோணங்களில் எழுதியிருக்கிறார், ஒவ்வொரு சிறுகதையின் முடிவிலும் நெஞ்சைத் தொடும் கனமான ஒரு கிளைமேக்ஸ் வைத்து எழுதியுள்ளார். 


'இரண்டு குமிழ்கள்' எனத் தொடங்கும் சிறுகதை கைதி சபீனா மற்றும் பெண் போலிஸ் நிர்மலா பற்றிய ஒரு தொடர் என்று சொல்லலாம். செய்யாத குற்றத்திற்காக சபீனாவை கோர்ட்டு வரை கொண்டு செல்வார்கள். மிக அழகான மனதை தொட்ட கதை. 


'பொய்த்தொண்டை' சிறுகதையில் வரும் வைத்தி அண்ணா கதை சில உண்மையான நிகழ்வுகளை நினைவுக் கூறியது . படித்ததில் பிடித்தது மற்றும் வைத்தி அண்ணாவிற்கு ஏன் இந்த நிலை என்று வருந்தும் அளவுக்கு இருந்தது. 


இறுதியாக காதலின் பிடியில் சிக்கிய கோகிலவாணியின் கதை, காதலித்தவனும் கிடைக்காமல், தன்னைக் காதலித்த ஒருவன் கொண்ட அன்பினால் ஆசிட் வீசும் அளவிற்கு பரிதாபமான நிலையை அடைகிறாள் கோகிலவாணி. 


 காதல் என்றால் வசை, அடி, உதை, எரிப்பு, கொலை இவைதான் காதலின் சின்னங்களா? வன்முறையில்தான் காதல் வேர் ஊன்றியிருக்கிறதா? என்ற நினைவுடன் ரயிலின் பயணத்தில் இருட்டிற்கு கண்கள் முளைத்து அவள் அழுவதைப் பார்த்துக்கொண்டே செல்கின்றன இரண்டு மின் மினிப்பூச்சிகள். 


இளவம்பஞ்சு ஒருபோதும் காற்றைக் கண்டு பயப்படுவதில்லை. அது மரத்திலிருந்து விடுபட்டுப் பறக்கிறது. அந்த விடுபடலை யாராலும் தடுக்கவே முடியாது. காற்றில் பறந்து உலகின் முடிவற்ற நிலப்பரப்புகளை நோக்கி அது பயணிக்கிறது. 

பிள்ளைகளும் அப்படித்தான். அவர்களுக்கு வீடு போதுமானதில்லை. உலகை நோக்கி பறந்து போகவே செய்வார்கள். அதைத் தந்தையால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு தந்தையும் புத்தனை பாதுகாத்த தந்தையைப் போல உலகிடமிருந்து பிள்ளையைப் பாதுகாக்கவே செய்கிறான். ஆனால் உலகம் தான் கடைசியில் வெல்லுகிறது. 


இந்த நூலில் அமைந்துள்ள அனைத்து சிறுகதைகளும் ஏதோ ஒன்றை சொல்லிக்கொடுக்கும். 


எப்படி இந்த சமூகத்தில் பெண் பிள்ளைகள் தன்னை பாதுகாத்துக் கொள்கிறார்கள். அவர்களின் நிலை, வாழ்க்கை முறை, தைரியமான நடை, சில நேரங்களில் நினைக்கத் தோன்றும் முதிர்ச்சி அடைந்த குணத்துடன் முன்னேறி செல்கிறார்கள் என்று. 


அவரவர் வாழ்க்கையில் நிகழும் சின்னச் சின்ன நிகழ்வுகளை எவ்வாறு  கடந்து செல்ல வேண்டும் என்ற ஒரு முழு உணர்வு ஏற்படும் கதைகளின் இறுதியில். மிக அருமையான நூல். படித்ததில் மகிழ்ச்சி. 


டாக்டர். வெ. இறையன்பு


இவரது படைப்புகளுக்கே தனி புத்தகம் போட வேண்டும் கடினமான பணியிலும் இவ்வளவு எழுத்துக்கள்.. நவீன கால சிற்பி..

சகல கலா வல்லுனர்...


வெ. இறையன்பு (Dr V. Irai Anbu, IAS) என்பவர் ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார். எழுத்தாளர், கல்வியாளர், தன்னம்பிக்கை பேச்சாளர் என இவருக்கு பல முகங்கள் உண்டு.


நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்த இறையன்பு பள்ளிக்காலம் தொட்டே அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தன்னை மாற்றிக்கொண்டார்.


இவருடைய திறமை மற்றும் அனுபவம் காரணமாக நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின்னால் அதன் மறுசீரமைப்புப் பணிகளைக் கையாளுவதற்காக அந்நாட்டு திட்டக்குழுவின் ஆலோசகராக அழைக்கப்பட்டார்.


2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் நாள் மு. க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இறையன்பு தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.


விவசாயத்தில் இளங்கலைப் பட்டம்

வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம்

ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம்

தொழிலாளர் மேலாண்மையில் முதுகலைப் பட்டம்

உளவியலில் முதுகலைப் பட்டம்

வர்த்தக நிர்வாகத்தில் முனைவர் பட்டம்

ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம்

மேலாண்மையில் முதுமுனைவர் பட்டம்

இந்தி மொழியில் பிரவீன்

சமஸ்கிருதத்தில் கோவிதஹா

விவசாய இளங்கலைப் பட்டத் தேர்வில் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.

1987-இல் நடைபெற்ற குடியுரிமைப் பணித் தேர்வில் அனைத்திந்திய அளவில் 15-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்தார்.

 

இவரது படைப்புகள்


இலக்கியத்தில் மேலாண்மை

ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்

படிப்பது சுகமே

சிற்பங்களைச் சிதைக்கலாமா

பணிப் பண்பாடு

ஆத்தங்கரை ஓரம்

சாகாவரம்

வாய்க்கால் மீன்கள்

நரிப்பல்

Steps to Super Student

சிம்மாசன சீக்ரட்

துரோகச் சுவடுகள்

ஏழாவது அறிவு பாகம்-1

ஏழாவது அறிவு பாகம்-2

ஏழாவது அறிவு பாகம்-3

அரிதாரம்

ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்

பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்

அழகோ அழகு

சின்னச் சின்ன வெளிச்சங்கள்

உள்ளொளிப் பயணம்

ஓடும் நதியின் ஓசை பாகம்-1

ஓடும் நதியின் ஓசை பாகம்-2

மென்காற்றில் விளை சுகமே

முகத்தில் தெளித்த சாரல்

முடிவு எடுத்தல்

நேரம்

காகிதம்

வனநாயகம்

வரலாறு உணர்த்தும் அறம்

ஆர்வம்

ஆணவம்

மருந்து

மழை

திருவிழாக்கள்

இணையற்ற இந்திய இளைஞர்களே

ரயில் பயணம்

விவாதம்

பொறுமை

எது ஆன்மிகம்

வாய்க்கால் மீன்கள்

பூனாத்தி

வேடிக்கை மனிதர்கள்

முதல் தலைமுறை

நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும்

வாழ்க்கையே ஒரு வழிபாடு

சறுக்கு மரம்

உழைப்பால் உயர்வோம்

சின்னச் சின்ன மின்னல்கள்

திருப்பாவைத் திறன்

திருவெம்பாவை

அன்புள்ள மாணவனே

உச்சியிலிருந்து தொடங்கு

தர்மம்

இயற்கை

மலர்கள்

முதிர்ச்சி

நட்பு

தரிசனம்

சந்தித்ததும் சிந்தித்ததும்

Ancient Yet Modern – Management Concepts in Thirukkural

சுய மரியாதை

இல்லறம் இனிக்க

எது சரியான கல்வி

அச்சம் தவிர்

அவ்வுலகம்

நின்னிலும் நல்லன்

போர்த்தொழில் பழகு

பத்தாயிரம் மைல் பயணம்

வையத் தலைமைகொள்

சிதறு தேங்காய்

வியர்வைக்கு வெகுமதி

மேலே உயரே உச்சியிலே

மனிதன் மாறிவிட்டான்

உன்னோடு ஒரு நிமிஷம்

எப்போதும் இன்புற்றிருக்க

உலகை உலுக்கிய வாசகங்கள்

கேள்வியும் நானே பதிலும் நானே

செய்தி தரும் சேதி

Comparing Titans – Thiruvalluvar and Shakespeare

Random Thoughts

Effective Communication : The Kambar Way

கல்லூரி வாழ்க்கை

நினைவுகள்

பிரிவு

சேமிப்பு

சிக்கனம்

சுத்தம்

தாமதம்

தவம்

தூக்கம்

உடல்

காதல்

கருணை

தனிமை

வாழ்க்கை

வைராக்கியம்

அழகு

நம்பிக்கை

மூளைக்குள் சுற்றுலா

காற்றில் கரையாத நினைவுகள்

நமது அடையாளங்களும்

நளினி ஜமீலா - ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை

 


 

புத்தகம்: நளினி ஜமீலா - ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை

எழுத்தாளர்: தமிழில் குளச்சல் மு.யூசுப


சாதாரணமாக ஒருவரின் சுயசரிதைகளை படிக்கும் போது அவரை போல் வாழ தோன்றும்... உத்வேகம் பிறக்கும். ஆனால் நளினி ஜமீலாவை படிக்கும் போது இந்த சமூகத்தின் மீதான கோவம் அதிகரிக்கும். தலைசாய்ந்து படுத்து தூங்க ஒரு முழம் இடம் கூட இல்லாத ஒரு பாலியல் தொழிலாளியின் கண் வழியே இந்த சமூகம் விரியும். பெண்கள் எவ்வளவு கொடூரமாக அடிமைப்படுத்தப்பட்டு கிடக்கிறார்களென்பதை போகிற போக்கில் சாதாரணமாக நம்மில் கடத்தியிருப்பார்.


இன்று மெத்த படித்தவர்கள் அதிகம் இருக்கும் கேரளாவில் விதை நெல்லுக்கும், அறுவடை நெல்லுக்கும் கணக்குப் பார்க்கும் அளவிற்கு பெண் படித்தால் போதும் என்ற குடும்பத்தில் பிறந்தவர் நளினி ஜமீலா. வாய்ப்புகள், வசதிகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவருக்கு படிப்பு என்பது எட்டாக்கனியாகவே இருந்தது.

 அவருடைய அண்ணன் படிப்பதைப் பார்த்து குடும்பத்தில் இருப்பவர்களிடம் சண்டை போட்டுதான் பள்ளியில் சேர்ந்தார். அதுவும் மூன்றாவது வரை மட்டுமே அவரால் படிக்க முடிந்தது. தந்தையின் ஊதாரிதனம், இயலாமையால் சொந்தவீட்டிலேயே ஒண்டிக்குடித்தனம் நடத்தினர் அவருடைய பெற்றோர். அதனால் படிப்பு அவளுக்கு கனவாகவே போய்விட்டது.  ஒவ்வொரு முறை பள்ளிக்கூடத்தை கடக்கும் போதும் அவர் கண்ணில் தாரை தாரையாய் கண்ணீர் கொட்டும். இயலாமை ஆற்றாமை வெளிப்படும். தந்தையின் செயல்பாடுகளால் அதிகமான கடன் ஏற்பட்டு அவருடைய அண்ணனால் ஏமாற்றப்பட்டு வெளியேற்றப்படுவார்கள். 

குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற சூழலில் மண் வேலைக்கு செல்வார். கிடைக்கும் வீடுகளில் எடுபிடி வேலைகள் செய்வார் . ஒருமுறை நண்பர்கள், நன்கு அறிந்தவர்கள் வீட்டுக்கு செல்லும்போது அவர்களின் உறவினரும் அண்ணனின் ஆசிரியருமான நபர் நளினி ஜமுனாவுக்கு பாலியல் தொல்லை தருவார். யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டுவார். அதன்பின் அந்த வீட்டிற்கு செல்லவே அச்சம் ஏற்படும். வீட்டு வேலையை விடுகிறார். அதற்கான காரணத்தையும் அந்த குடும்பத்தில் இருந்தவர்களுக்கு சொன்னார். ஆனால் நளினி ஜமீலா மீதே குற்றம் திரும்பியதும்.


அறிவு உண்மையை ஆராய்ந்துவேலையை விடவைத்தாலும் வயறு சும்மா இருக்காதே.. மீண்டும் வேலைக்கு செல்கிறார். அங்கேயும் அவருக்கு பாலியல் தொல்லைகள் நின்றபாடில்லை. மண் வேலை செய்யும் இடத்தில் கிறிஸ்தவ பையன் ஒருவரை காதலிப்பார். அதனால் வீட்டில் பிரச்சனை ஏற்படும். ஒரு வேளை திண்பதற்கு சோறு இல்லை என்றாலும் சாதி மதம் முக்கியமாக இருக்கும்.  அந்தளவிற்கு மதம் , சாதி மனிதனை பழக்கி வைத்துள்ளது என்பதை இந்த இடத்தில் உணரமுடியும். காதலித்த பெண்ணுக்காக காத்திருந்து காத்திருந்து பின் இரண்டு ஆண்டுகளில் அவன் தற்கொலை செய்து கொள்வான்.


வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து நளினி ஜமீலாவை குடும்பத்தினர் விரட்டுகின்றனர். வீட்டிலோ வறுமை தேகத்திலோ வழமை.. அதை பொறுக்க முடியாத சில பெண்களால் இவரின் பெயர் ஊர் முழுவதும் தவறாக பேச செய்கிறது. யாருடைய பேச்சையும் காதில் வாங்காமல் தனக்கு சரி என தோன்றுவதை மட்டுமே செய்வார். 18 வயதில் வீட்டை விட்டு வெளியேற்ரப்படுவார்.


போக்கிடமின்றி தன்னை காதலித்த ஒருவனை தேடி செல்வாள். அவன் வேலை செய்த இடத்தில் காத்திருப்பாள். அவன் வரமாட்டான். அவனுடைய நண்பன் உதவுவதாக கூறி வீட்டிற்கு அழைத்து செல்வான். அங்கு காதலின்  நண்பனுக்கு மனைவியாகும் சூழல் உருவாகிறது.


கணவன் ஒரு சாராய வியாபாரி. அவனோடு சேர்ந்து சாராயம் விற்கிறாள். குடிக்கு அடிமையான அவனின் அடியில் இருந்து தப்புவதற்கு இவளும் குடிக்க தொடங்குகிறாள். திருமணமான மூன்று ஆண்டுகளில் அவன் உயிர் இழக்கிறான். 

இரண்டு குழந்தைகளோடு பரிதவித்து நிற்கிறாள். ஆண் குழந்தை உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழக்க, குழந்தையை காப்பாற்ற கூட பணம் இல்லாமல் தவித்து வேதனையில் நிற்கிறாள். வேறு என்ன செய்வது என அவளுக்கு தெரியவில்லை . அவளுக்கு மூலதனம் அவளுடைய அழகு மட்டுமே . அதை வைத்து வியாபாரம் செய்யத் தொடங்குகிறார் . ஆம் பாலியல் தொழிலாளியாக மாறுகிறார்.


இந்த இடத்தில் அவர் மீது கோபம் வருவதற்கு பதில் என்மனம் அவர் மீது அனுதாபம்தான் கொண்டது. ஒரு தேவத்தூதன் வந்து அவரை காப்பாற்றி உதவி செய்திடமாட்டானா என்றுதான் கவலைக்கொள்ள செய்தது. 


கணவன் இறந்த பிறகு மிகப் பெரிய தொகையை கேட்டு நச்சரிக்கும் மாமியார்... விரட்டிவிட்ட குடும்பம்.. எங்கு சென்றாலும் சதைபிண்டமாக மட்டுமே பார்க்கும் சமூகம்.. இந்த பிரச்னைகளில் இருந்து விடுபட தோழி மூலம் பாலியல் தொழிலுக்குள் நுழைகிறார்.  அதன்பின் அவர் சந்திக்கும் பிரச்சினைகள்... தாயாய் மகளை கொஞ்சி மகிழ முடியாத இயலாமை...என சமூகத்தால் விரட்டி அடிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வலிநிறைந்த சாட்சியாய் இருக்கிறார் நளினி ஜமீலா. 


2006ஆம் நளினி ஜமீலாவின் சுயசரிதை வெளியான போது கேரளாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை எற்படுத்தியது. அதனால் அந்த புத்தகம் மீண்டும் திருத்தி எழுதப்பட்டது. சாதாரண பாலியல் தொழிலாளியின் கதை இந்த சமூகத்தை இந்தளவிற்கு பதற செய்ததற்கு என்ன காரணம்? அதிலிருந்த உண்மை..


ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என பல வரைமுறைகளை வைத்துள்ள இந்த சமூகம். ஒரு ஆண் எப்படி இருக்கக்கூடாது என்பதை ஒரு இடத்தில்கூட சொல்வதில்லை. 

எல்லா வேதனைகளையும் கடந்து ஒரு சாதனை பெண்ணாக துணிந்து இந்த சமூகத்தை எதிர்கொண்டிருக்கிறார். 

ஜூவாலாமுகி, A peep into the silenced ஆகிய குறும்படங்களை இயக்கியுள்ளார். பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவி, குறும்பட இயக்குனர், பெண்ணியவாதி, எழுத்தாளர் என பரிணாமித்து இன்று சமூகத்தில் கம்பீரமாய் வலம் வருகிறார் நளினி ஜமீலா. 

Sunday, August 22, 2021

இன்று எங்கள் திருமண நாள்

 காதலின் வெற்றி 

திருமணத்திலா இருக்கிறது 

இல்லை

உண்மையில் திருமணத்திற்கு 

பிறகான ஆயிரமாயிரம் 

சவால் களில் இருக்கிறது 

ஒருவர் துயரை மற்றொருவரிடம்

பகிர்ந்து கொள்வதில். 

குழப்பமான மனநிலையில்

பிரச்சனைகளில் உழலும் போது

ஒருவருக்கொருவர்

உறுதுணையாய்  நின்று 

மனோதிடம்  ஊட்டுவதில்  

மனத் தெளிவுடன் வாழ்வதில் உள்ளது

ஆயிரம் சவால்களை இன்முகத்துடன்

எதிர்கொண்டு உடைத்தெறிவதில்

பணம் சார்ந்ததல்ல வாழ்க்கை 

மனம் சார்ந்தென புரிந்து

மனத் தெளிவுடன் வாழ்வதில் உள்ளது

Sunday, August 15, 2021

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

 மொத்த வாழ்க்கையே வெறும் 29 வருஷம்தான்.. சினிமாவுக்கு பாட்டு எழுதியதோ 5 வருஷம்.. 180 பாட்டுக்கள்தான் எழுதியிருக்கிறார்.. வாழ்நாளில் மொத்தமாக ஈட்டிய காசு, ஒரு லட்சத்து சொச்சம்தான்.. இதுவே பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சுவடு.


படிப்பு ஒன்னும் பெரிசா இல்லை.. வறுமை ஒரு பக்கம் பிச்சு திண்ண, கிடைத்த வேலையை செய்திருக்கிறார்.. விவசாயம் பார்த்தார்.. மாடு மேய்த்தார்.. மாம்பழம் விற்றார்.. உப்பள தொழில் செய்தார்.. இப்படி 17 வகையான வேலை பார்த்துள்ளார்.. ஆனாலும் கையில் காசு தங்கவில்லை.. 


பிறகுதான், சென்னைக்கு கிளம்பி வந்து வாய்ப்பு தேடி, அதில் வெற்றியும் பெற்றார். மக்கள் திலகம் எம்ஜிஆர் நாயகனாக உருவெடுக்க காரணமாக இருந்தது சாட்சாத் பட்டுக்கோட்டையார்தான்!


"நாடோடி மன்னன்" படத்தை முதன்முதலாக டைரக்ட் செய்கிறார் எம்ஜிஆர்.. யார் யாரையோ வைத்து பாட்டு எழுதுகிறார்.. ஆனாலும் திருப்தி இல்லை. கடைசியில் பட்டுக்கோட்டையாரிடம், "உன்கிட்ட பாட்டு இருந்தா குடு கல்யாணம்" என்று கேட்டதுமே , ஒரு பாட்டை நீட்டுகிறார்.


அதில், "சும்மா கிடந்த நிலத்தை" என்று ஆரம்பித்து, "தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது, சிந்திச்சு முன்னேற வேணுமடி" என்ற வரிகளை படித்து பார்த்தார் எம்ஜிஆர்... பிறகு சிரித்துகொண்டே, "நீ ரொம்ப விவரம் கல்யாணம்.. என் காசுல உன் கட்சி கொள்கையை எழுதிடலாம்னு பார்க்கிறியா?" என்று கிண்டலாக கேட்டார்.


ஆனால் கடைசிவரை எம்ஜிஆர் இந்த கவிஞனை மறக்கவே இல்லை.. "என்னுடைய நாற்காலியில் நான்கு கால்களில் 3 கால்கள் யாருடையது என்று எனக்கு தெரியாது.. ஆனால், அதில் ஒரு கால் என் தம்பி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துடையது" என்று புகழ்ந்து கொண்டே இருந்தார்.


சென்னையில் ஒருநாள் இவர் பஸ்ஸில் போயிட்டிருந்தார்.. அப்போது வழியில் ஓர் இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, பழுது பார்க்கும் வேலை நடந்துள்ளது.. அதனால், சிவப்புக்கொடி ஒன்றும் நடப்பட்டிருந்தது...!


அதை பார்த்த கல்யாணசுந்தரம் அருகிலிருந்தோரிடம், ‘‘எங்கே எல்லாம் பள்ளம் விழுந்து அது மேடாக நிரப்பப்பட வேண்டுமோ, அங்கே எல்லாம் சிவப்புக்கொடி பறந்துதான் அந்த பணிகள் நடக்க வேண்டும் போலும்’’ என்றார்.


பாடல் எழுத தொடங்கும்போதெல்லாம், ‘வாழ்க பாரதிதாசன்’ என்று தலைப்பில் எழுதிவிட்டுத்தான் பாட்டு எழுதுவாராம்.. பாரதிதாசன் தலைமையில்தான் இவருக்கு கல்யாணமும் நடந்துள்ளது.


அன்றைய தினம், பக்தி, காதல், வீரம், என்றிருந்த சினிமா பாடல்களுக்கு நடுவில், புரட்சி, பொதுவுடைமை, முற்போக்கு, பகுத்தறிவு, போன்றவற்றினை புகுத்தி பாடல்களின் தடத்தையே மாற்றினார். 


இவர் சொல்லாத தத்துவம் கிடையாது.. சொல்லாத அறிவுரை கிடையாது.. எழுதாத காதல் கிடையாது.. மொத்தத்தில் அவர் இல்லாமல் தமிழே கிடையாது என்ற நிலை உருவானது!


ரொம்ப சிம்பிளான வார்த்தைகளை வைத்துதான் பாட்டு எழுதினார்.. ஆனால் அவைகளில், இனிமை, சிந்தனை சிதறல், அழகியல் நடை, கருத்துசெறிவு, உணர்ச்சி கொந்தளிப்பு, காதல் என அனைத்தையும் வஞ்சனையில்லாமல் நிரப்பி நிரப்பி தந்தார்..!


இவரது ஒவ்வொரு பாட்டும் தமிழகத்தின் தெருக்களிலும் திண்ணைகளிலும் வாசிக்கப்பட்டன - நேசிக்கப்பட்டன.


"குறுக்கு வழியில் வாழ்க்கை தேடும் திருட்டு உலகமடா" என்று அறுதியிட்டு சொன்ன தீர்க்கதரிசி!!  "இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனால் பதுக்கிற வேலை இருக்காது" என்று வர்க்க அரசியலை பேசிய மகான்!


இவரது ஒவ்வொரு வரிகளும் சமுதாய அவலத்தின் செவிற்றில் ஓங்கி அறைந்தது.. தனி மனித தன்னம்பிக்கையை உயர்த்தி பிடித்தது.. முதலாளித்துவத்தை வார்த்தைகளாலேயே குத்தி குத்தி கிழித்தது. 


"கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே, நீ கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே" என்று இவர் எழுதிய காதலும்கூட பொதுவுடைமை பேசியது!


கடைசிவரை சில்லறை விமர்சனங்களில் சிக்காத இந்த கலைஞனின் வாழ்வு, நம் பாரதியைபோலவே இளமையில் முடிவுக்கு வந்தது காலத்தின் கொடுமைதான்...!


மூளைக்கு போகும் ரத்தக்குழாய் வெடித்து சிதறியதால் 29 வயசிலேயே இறந்துவிட்டார்.. இவருக்காக பட்டுக்கோட்டையில் மணிமண்டபம் ஒன்றை திறந்து வைத்த கலைஞர் கருணாநிதிக்கு என் கோடி நன்றிகள்..!


உழைக்கும் வர்க்கத்தின் ஆசைகளையும் ஆவேசத்தையும், ஆதங்கத்தையும் பாடல் வரிகள் மூலம் எழுதி எழுதி தீர்த்தார் இந்த அலங்காரமற்ற மனிதன்.


சமுதாய இருட்டை கழுவிய, இந்த நெருப்பு சூரியனின் பாடல்கள் ஒவ்வொன்றும் எல்லா காலங்களுக்கும் பொருந்தக்கூடியது என்பதை, இந்த தமிழ் சமூகம் என்றென்றும் நன்றியோடு நினைத்து பார்ப்பது அவசியம்

Monday, August 2, 2021

விசாரணை கவிதை

 



‘விசாரணை-சோவியத் காதல் கவிதை 


‘என் காதலா உனக்கு வேண்டும்?’

— ‘ஆமாம்’

‘என் காதல் கறை படிந்தது’

–‘பரவாயில்லை’

‘உன்னிடம் சிலவற்றை உரைக்க வேண்டும்’

— ‘நல்லது! உரைக்கலாம்’

‘உன்னிடமிருந்து சிலவற்றைத்

தெரிந்து கொள்ள வேண்டும்!’

–‘கேள்!’

‘நான் உனக்கே உரியவளானால்…’

— ‘மிகவும் நல்லது!’

‘நீ எனக்குத் தேவைப்பட்டால்….’

–‘கடைக்கண் காட்டினால் போதும்’

‘உன்னை நான் ஏமாற்றிவிட்டால்…’

— ‘பொருட்படுத்தமாட்டேன்’

‘ஆபத்து ஏற்பட்டால்….’

— ‘தலை கொடுக்கவும் தயார்’

‘பாடச் சொன்னால்….’

— ‘பாடுவேன்’

‘ஒரு நண்பனை இழக்கச் சொன்னால்….’

— ‘பாதகமில்லை’

‘யாரையாவது கொல்லச் சொன்னால்…’

— ‘கொன்று விடுவேன்’

‘உன்னைச் சாகச் சொன்னால்…’

— ‘செத்து விடுவேன்’

‘நம் கப்பல் நாசமாகிவிட்டால்….’

— ‘நீ நீரில் மூழ்க விடமாட்டேன்’

‘வலி வேதனைக்கு அஞ்சமாட்டாயா?’

— ‘அஞ்சமாட்டேன்’

‘தடையாக ஒரு சுவர் இருந்தால்…’

— ‘அதைத் தகர்த்தெறிவேன்’

‘ஒரு முடிச்சு இருந்தால்…’

— ‘அதை வெட்டிவிடுவேன்’

‘என்றென்றும் என்னை நீ நேசிப்பாயா?’

— ‘சாகும் வரை நேசிப்பேன்’

‘என் காதலா உனக்கு வேண்டும்?’

— ‘ஆமாம், ஆமாம்’

‘இளைஞனே!

ஒரு போதும் உன்னை நான்

நேசிக்க மாட்டேன்’

— ‘ஏனோ?’

‘நான் அடிமைகளை விரும்புவதில்லை!’

———– ராபெர்த் ரஷ்தேஸ்த்வென்ஸ்க

உள்மன காயங்கள்

 


என்னை நான் எவ்வளவோ 

கட்டுப்படுத்தி வெளியே சிரித்தாலும்  ...

ஏமாற்றங்களால் ஏற்ப்பட்ட 

காயங்கள் உள்ளுக்குள் 

வலித்துக் கொண்டு தான் இருக்கிறது.

என்னை வற்புறுத்தி கட்டாயபடுத்தி 

யாராலும் எதுவும் செய்து விட முடியாது

 என்று நினைத்திருந்தேன்.


ஏனோ நான் என்னை அறியாமலே

 இரக்கப்பட்டு எல்லாவற்றையும்

 மற்றவர்களுக்காக விட்டுக்

 கொடுத்து விடுகிறேன்.


நான் முடிவெடுப்பதை பார்த்தால் 

அறிவாளி போல் இருக்கும்.

அன்புக்காக ஏங்கி அடிமையாகும்

 அடி முட்டாள் தான் நான்

என்னை நான் இதுவரை

 திருப்திபடுத்தியதில்லை 


என் ஒவ்வொரு காலப்பகுதியும்

 என் அன்பை ஒவ்வொருவருக்கு

 பங்கிட்டு கொடுக்கிறது.


என் கூட இருப்பவர்கள் சந்தோசமாய்

 இருந்தால் நான் என்னை இழப்பதில்

 பெருமை அடைவேன்.


ஆனால் அவர்கள் நலன் மட்டுமே

 முக்கியமாகக் கருதி 

வாழ்கிறார்கள் என்று நான்

 உணரும் போது கிடைக்கும்

 தனிமையில் நான் 

என்னை வருத்துகின்றேன்.


என்னதான் நான் என்னை

 சமாதானப்படுத்தி சந்தோசமாக

 இருப்பதாக காட்டிக்கொண்டாலும் 


சில பொய்களும் துரோகங்களும்

 என்னை தினமும் உள்ளுக்குள்

 அழவைத்து கொண்டுதான் இருக்கிறது.


Wednesday, July 28, 2021

இளவயது விதவை பெண்களின் நிலை

 


சிறுவயதில் விதவையான பெண்களை

 நிரந்தரமான விதவைகளாக

 வைத்திருப்பதற்கு எல்லா ஏற்பாடுகளை யும்

 இந்த சமூகம் செய்து வைத்திருக்கிறது. 


"அவ புருசன் செத்து பத்து வருச

மாச்சு. எந்த ஆம்பளையையும் ஏறெடுத்தும் 

பாக்கமாட்டா. நாக்குமேல பல்லப் போட்டு

ஒரு வார்த்த அவளப் பேசிற முடியாது.


எதுக்கும் எடம் கொடுக்கமாட்டா நெருப்பு

மாதிரி இருப்பா"என்று ஒரு பெண்ணைச்

சொல்லிசொல்லியே மனோ ரீதியாக

 அவளைப் பலவீனப் படுத்தி

 "புனிதம்"என்னும் புதை

குழிக்குள் அவளைத் தள்ளி விட்டு

விடுகிறார்கள். 


அவளுக்கு மறுமணம்

குறித்த சிந்தனையே எழாதவாறு அவ்

வளவு ஜாக்கிரதையாகப் பார்த்துக்

கொள்கிறார்கள் .

அவளும் அவளை அறியாமலேயே

அந்த "புனிதத்திற்குள்"

சிக்கி தன்னுடைய ஆசாபாசங்களைச் 

சாகடித்துக் கொள்கிறாள்.


மூடநம்பிக்கையென்பது 

சாமியாடுவது மண்சோறு

சாப்பிடுவது அலகுகுத்தி ஆடுவது 

மட்டுமல்ல இதுவும் ஒருவகையான

மூடநம்பிக்கைதான்.

                      

முதல் குரல் புத்தக சுருக்கம்

நூல்: முதல் குரல்

ஆசிரியர்: பாரதி பாஸ்கர்


பாரதி பாஸ்கர் - நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான பெயர். பண்டிகைக்கால சன் தொலைக்காட்சி பட்டிமன்றங்களில், தனக்கென தனியிடத்தைப் பெற்றிருப்பவர். தன் பேச்சுத்திறமையால் நம் பலரது மனங்களைக் கொள்ளை கொண்டவர். இந்நூலுக்கு முன்னரே ஆசிரியரின் 'சிறகை விரி, பற!' மற்றும் 'நீ நதி போல ஓடிக்கொண்டிரு...' நூல்களை வாசித்திருக்கிறேன்.


'முதல் குரல்' - இங்கு, மூன்று பிரிவுகள் ஒரே நூலில் - ஒன்பது கட்டுரைகள், ஒன்பது சிறுகதைகள், எட்டு பதிவுகள். 


கட்டுரைகள் பற்றி:


'முதல் குரல்' கட்டுரையினூடே நூல் ஆரம்பமாகிறது. ஆண்கள் மட்டுமே ஒரு காலத்தில் தன்வசப்படுத்தியிருந்த மேடைப் பேச்சைப் பெண்களாலும் நிகழ்த்த முடியும் என்று காட்டிய சரஸ்வதி பாய் பற்றிய கட்டுரை அது. அவ்வளவு எளிதாகப் பெண்களைச் சமூகம் அங்கீகரித்துவிடுகிறதா என்ன? சரஸ்வதி பாய் பட்ட அவஸ்தைகளையும், அவதூறு வார்த்தைகளையும் விவரிக்கிறது கட்டுரை.


ஐஸ் ஹவுஸ் - சென்னை மெரீனா கடற்கரையருகே அமைந்திருக்கும் ஓர் அதிசயக் கட்டிடம். அக்கட்டிடம் பாரதிக்குப் பள்ளி நாட்களில் வகுப்பறையாக இருந்திருக்கிறது. பள்ளிக்கால நினைவுகளைப் பதிவிட்டதோடு, அக்கட்டத்தின் பின்னணியை, அங்கு நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்திருக்கிறார். 


எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றி ஒரு கட்டுரை. அவரின் வெற்றிக்குப் பின்னணியில் அவர் கணவர் இருந்திருக்கிறார். வழக்கமான நமது கூற்றை இங்கு மாற்றிக் கூறலாம், ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஓர் ஆண் இருக்கக்கூடும் என்று. அல்லவோ!


சிறுகதைகள் பற்றி:


முத்தான ஒன்பது கதைகள் நமக்காக. 


'பூப்போல பூப்போல' என்றொரு கதை. தத்தெடுத்த பச்சிளங்குழந்தையைப் பேணி வளர்க்க, மகப்பேறு விடுமுறை வேண்டிப் போராடி வெற்றி பெறும் ஒரு பெண் பற்றியது. என்னை மிகவும் கவர்ந்த கதை. 


'அப்பா என்னும் வில்லன்' என்றொரு கதை. பெரும்பாலும் அப்பாக்கள் பிள்ளைகளுக்கு வில்லனாகத்தான் தெரிகிறார்கள். இங்கு கௌரிக்கும் அப்படித்தான். எப்போது பார்த்தாலும் 'படி, படி' என்று அவளை விரட்டும் அப்பா. அந்த வில்லன் எப்படி அவளுக்கு ஹீரோவாக மாறுகிறார் என்பதுதான் கதை. கதையோட்டம் மி்க அழகு! கடைசியில் ஒரு வரி வரும். "இந்தப் பெருமைமிக்க விருதை வாங்க உங்களோடு 49 பேர் போட்டி போட்டார்கள். அவர்களிடம் இல்லாதது, உங்களிடம் இருப்பது என்ன?" என்று கௌரியிடம் கேட்பார்கள். அதற்கு அவளின் பதில்: என் அப்பா. 


'1-2-3-4-1' என்று எண்களைத் தலைப்பாகக் கொண்ட ஒரு கதை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்களே. அதனைக் கண்முன் காட்டும் ஒரு கதை. வீட்டிலிருக்கும் திலகாவிற்குத் தன் பக்கத்து வீட்டு மைதிலியைப் போல வங்கிப்பணிக்குச் செல்ல ஆசை. மைதிலிக்கோ, அவள் மேலதிகாரி அஞ்சனா பதவிமீது ஆசை. அஞ்சனாக்கு வங்கியின் நிர்வாக அதிகாரி மீனா மஹாதேவன்மீது பொறாமை. மீனா மஹாதேவன் இறுதியில் முதலில் குறிப்பிட்ட திலகாவைக் கண்டு, 'அட இவள்போல நம்மால் நிம்மதியாக வாழ முடியவில்லையே' என்று ஏங்குவதாய்க் கதை முடிகிறது. எவருக்கும் இருப்பதில் திருப்தி இருப்பதில்லை, இல்லாதவற்றை எண்ணியே ஏங்கித் தவிக்கிறோம், இல்லை!


'வெங்கட் மற்றும் விக்ரம்' என்றொரு கதை. என்னதான் ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே தட்டில் கைகழுவும் நண்பர்கள் என்றாலும் ஒரு கட்டத்தில் பிரிவு என்பது எதார்த்தம், அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று நிதர்சனத்தைக் குறிப்பிடும் ஓர் அழகான கதை.

பெண் முன்னேற்றம் பற்றி நிறைய பேசிவரும் பாரதி, பெண்களுக்காக எழுதிய பதிவுகளில் சில இங்கு இடம்பெறுகின்றன. ஒரு பெண் என்னதான் தொழிலில், வேலையில் சிறந்துவிளங்கினாலும், அவள் வெற்றிக்கு வயிற்றெரிச்சலோடு சில விமர்சனங்கள், 'என்னதான் அவள் இந்த ஆபிஸில் பெரிய ஆளாக இருந்தாலும், வேலையில் ஜொலித்தாலும், அவள் ஒரு நல்ல அம்மாவாக, மனைவியாக, மருமகளாக, மகளாக இல்லையே!' என்றும், 'அவள் எப்படி இந்த இடத்துக்கு வந்தாளென்னு எனக்குத் தெரியாதா? அந்த மேனேஜரோட குலுங்கிக் குலுங்கி அவள் சிரிக்கும்போதே எனக்குத் தெரியும்' என்றும் ஏன் வந்து விழுகின்றன என்று வினவுகிறார். உண்மைதானே! சமூகம் ஏனோ பெண்களைக் குற்றவுணர்வுடனே வைத்துக்கொள்ள விரும்புகிறது. 


அலுவலகத்தில் அழும் பெண்களைப் பற்றிய ஒரு கட்டுரை. சில பெண்கள் அலுவலகங்களில் எங்கும் அழுகை, எதிலும் அழுகை என்று கண்ணீரை ஒரு பாதுகாப்புக் கவசமாக பயன்படுத்துவதைப் பேசுகிறது. அது கூடாது என்கிறார் பாரதி. 'நீ முன்னேற விழைகிறாயல்லவா? அப்படியெனில் சிரமங்களையும் சவால்களையும் கூடுதலாக நீ சந்தித்துதான் ஆக வேண்டும்' என்று பெண்களுக்குக் கனிவுடன் அறிவுறுத்துகிறார்.


கட்டுரைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக ஆண் - பெண் புரிதல் பற்றி, சம உரிமை பற்றி அவர் பயன்படுத்திய கீழுள்ள வரிகளைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்:


'என் வீட்டுக்காரருக்கு வெந்நீர் வைத்துக்கொள்ளக்கூடத் தெரியாது!' என்று நாம் சொல்வது நம் கணவர்களுக்கு அவமானம். 'என் மனைவிக்குக் கரண்ட் பில் கூடக் கட்டத் தெரியாது' என்று கணவர்கள் சொல்வது மனைவிகளுக்கு அவமானம்.


மொத்தத்தில் முதல் குரல் - பெண்களின் குரல், சம உரிமைக்கான குரல்!

Saturday, July 24, 2021

சிறிது வெளிச்சம் எஸ் ராமகிருஷ்ணன்

என்னை திகைக்க வைத்த சில வரிகள்.

மனிதர்களின் தீராத வாசனையின் பெயர் சிரிப்பு . குழந்தைகளின் சிரிப்பை பார்த்திருக்கிறீர்களா காரணமில்லாத சிரிப்பு அது.  குழந்தைக்கு நினைவுகள் இல்லை அது சிரிப்பை மட்டுமே தன் சந்தோஷத்தின் வெளிப்பாடாக கொண்டிருக்கிறது. 

தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று சிரிப்பை இழப்பது. அதை நாம் உணர்வதே இல்லை நாமும் குழந்தைகளும் சிரிப்பதற்கு காரணத்தை நாடுவதில்லை . 

பனி உருகுவது போல சிரிப்பு அவர்களின் மனதில் இயல்பாக வெளிப்படுகிறது. 

நோயை விட கொடியது தனிமை.  நோயுற்ற நேரங்களில்தான் மனது அடுத்தவர்களின் மீதான தனது உறவை மறுபரிசீலனை செய்து கொள்கிறது . ஏங்குகிறது . 

யாரை நமக்கு மிகவும் பிடித்து இருக்கிறதோ அவர்களுக்கு நாம் ஒரு கடிதம் கூட எழுத மாட்டோம். நம் ஒவ்வொருவர் மனதிலும் எழுத நினைத்து எழுதப்படாமல் விட்ட கடிதங்கள் இருக்கின்றன . நேரடிப் பேச்சில் சொல்ல முடியாததை எழுத்தில் சொல்ல முடியும் எழுத்து மௌனமும் வலிமையும் கொண்டது அதை முழுமையாக நாம் உணரவே இல்லை. பேச்சுமிக ஆனவுடன் எழுத்து சுருங்கிவிட்டது.

 உறவுகள் சுருங்கி விட்ட சூழலில் கடிதம் அவசியமற்ற வடிவமாகவே பலருக்கு தோன்றுகிறது . கடிதம் என்பது வெறும் பரிமாற்றம் மட்டுமல்ல. நாம் இன்னொருவரை நேசிக்கிறோம் என்பதன் சாட்சி. நம் மனதின் குரல் .  நேரில் சொல்ல முடியாத தவிப்பை கடிதம் சொல்லிவிடும் . 

மனிதர்களின் கண்டுபிடிப்பில் மகத்தானது சொற்கள் அது தானியத்தைப் போன்றது விளைநிலத்தில் விதைக்கப் படும்போது வளர்ந்து பலன் அளிப்பதோடு இன்னொரு விதையாகவும் மாறுகிறது . விதையாவதும் வீணாக்குவதும் நம் கையில் தான் இருக்கிறது .

கஷ்டத்தை விடவும் அதை மூடி மறைப்பது தான் பெரும் துயரம் . அவமதிப்பு வெறுப்பு என எத்தனையோ வலிகளை தாங்கிக்கொண்டு வாழ்க்கையின் மீதான பற்றுடன் இருக்கிறார்கள் மனிதர்கள். 

வாழ்க்கை அர்த்தம் மிகுந்தது.  ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் ஒரு காரணமும் அவசியமும் இருக்கிறது . 

அதை அறிந்து கொள்வதும் அறியாமல் கடப்பதும் அவரவர் தேடுதல் தொடர்பானது. ஆனால் எந்த மனிதனும் தேவையற்றவன் இல்லை . எந்த வாழ்க்கையும் பயனற்றது மில்லை

திருமணம் என்ற நூற்றாண்டு கால நடைமுறை பாலுறவுக்கான துணை சேர்க்க மட்டும்தானா?  

திருமண முறிவுக்கு ஆண் மட்டுமே காரணம் அல்ல பெண்களும்  காரணமாக இருக்கக்கூடும். பெரும்பான்மையான திருமணங்கள் வணிக ஒப்பந்தங்கள் போலவே நடக்கின்றன. 

உறவை விட பணம் பிரதானமாக விட்டது. எளிய மனிதர்களின் திருமணங்களில் சிறு சண்டைகளும் சச்சரவுகளும் வந்தபோதும் குடும்பம் பிரிவதில்லை .

ஆனால் வசதியான திருமணங்கள் எளிய காரணங்கள் கூட இல்லாமல் பிரிந்து விடுகின்றது என்பதே நிஜம்

பெண்களுக்கு திருமணம் ஏற்படுத்தும் மௌனம் புரிந்து கொள்ள முடியாதது .

அது ஒரு நீர் ஊற்றை போல அவள் கடந்த காலத்தின் நினைவுகளை விட்டு கொண்டே இருக்கிறது . அமைதி எப்போதும் புன்னகையில் தான் வேர்விட்டு இருக்கும் என்பார்கள் .ஆனால் இன்று திருமணம் ஆனதும் பெண்களிடமிருந்து இயல்பான சிரிப்பு மறைந்து போகத் தொடங்குகிறது. ந சிரிப்பதற்கு காரணம் தேவைப்படுகிறது என்பதே நமது அக வீழ்ச்சியின் அடையாளம்தான் .

பேருந்தில் சாலையோரங்களில் அலுவலகங்களில் காண்கிறேன் சிரிப்பை மறந்த பெண்களை எனது பயணங்களில். தன்னை மீறி அவர்கள் சிரிக்கும் தருணங்கள் அரிதானவை . 

ஏதேதோ யோசனைகள் கவலைகள் விளக்கமுடியாத திகைப்பு போன்றவற்றுடன் கூடிய  முகங்களையே பொதுவெளியில் அதிகம் காணமுடிகிறது 

காலில் அப்பிய ஈர களிமண்ணைப் போல மனவேதனை களோடு தான் பெண் தன் வாழ்வினை கடந்து போகிறாள்

பனியில் வாழும் பெண்குயின் தன் இணையை தேர்வு செய்வதற்கு காதலுடனும் தேடுகிறது . கண்டுகொள்கிறது. தேடி சேர்ந்த பிறகு ஒரு போதும் வேறு ஒரு பெண்ணை நாடுவதே இல்லை .

சில வேளைகளில் பெண் துணை இறந்துவிட்டால் அந்த ஏக்கத்துடன் அதே இடத்தை சுற்றி சுற்றி வருகிறது. வேறு எந்த பெண்ணையும் திரும்பிக்கூட பார்க்க மறுக்கிறது இணை சேரும் மிருகங்கள் கூட தங்களுக்குள் அன்புடன் இருக்கின்றன. 

நவநாகரீகம் கொண்ட மனிதன் மட்டுமே திருமண விஷயத்தில் வாலில்லாத நாயை நினைவுபடுத்துகிறான். அதுதான் கவலை அளிக்கிறது

புத்தகங்கள் கற்றுத்தரும் நீதி 

போதனைகளை விட எளிய மனிதர்களின் நடைமுறை சாத்தியங்கள் வாழ்வினை மேம்படுத்த உதவுகின்றன . 

குடும்பம் என்பது சேர்ந்து சாப்பிடுவது சேர்ந்து உறங்குவதற்கான இடம் மட்டுமல்ல  சேர்ந்து வாழ்வதற்கான வெளியும் கூட. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு புரிந்து கொள்ளும் மனதும் தன்னை திருத்திக் கொள்ளும் அக்கறையும் பரஸ்பர அன்பும் திறந்த உரையாடல்களும் அவசியம் .அது தவறுவதே இன்றைய குடும்ப விரிசலின் அடிப்படைக் காரணம் என்பேன். 

சிறுவர்கள் எப்பொழுதும் கேள்விகளால் சூழப்பட்டு இருக்கிறார்கள் .உலகின் ஒவ்வொரு செயலும் ஏன் நடக்கிறது என்ற கேள்வி அவர்களுக்குள் இயல்பாக எழுகிறது. 

புரிந்துகொள்ளவும் ரசிக்கவும் யோசிக்கவும் விரும்புகிறார்கள் .நமக்கு அதற்கான நேரம் இல்லை விருப்பம் இல்லை அப்படி குழந்தைகள் வளர வேண்டும் என்ற தேவை இல்லை என்ற மனப்பாங்கு நமக்குள் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. 

பள்ளியில் படிக்க வைப்பது மட்டுமே தங்களது ஒரே வேலை என்று பெரும்பான்மையான பெற்றோர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்

 மாணவனுக்கு கல்வியை மட்டுமே பள்ளி அறிமுகம் செய்யும் . வீடு தான் நிஜமான பள்ளிக்கூடம் மனித உறவுகளையும் பழக்கவழக்கங்களையும் ருசியையும் விருப்பத்தை ரசனையையும் தனித்திறன் களையும் வீடுதான் அறிமுகப்படுத்துகிறது. 

கற்றுத்தருகிறது 

இன்று உள்ள பிரதான பிரச்சனை கல்வி நிலையங்கள் அனைத்தும்  பணமயமாகி விட்டன என்பது மட்டுமல்ல வீடுகளும் எதையும் சிறுவர்களுக்கு கற்றுத் தருவது இல்லை என்பதும்தான் .

குழந்தைகள்  நமக்கு எதையோ கற்றுத் தருகிறார்கள் . அவர்கள் உணர்த்தும் பாடங்கள் அற்புதமானவை அதை விளக்கிச் கொள்வது அவ்வளவு எளிதல்ல

புத்தகம் வெறும் காகிதம் அல்ல . கண்ணாடி நம் முகத்தைக் காட்டுகிறது என்றால் அகத்தை காட்டுவதற்கு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன 

புத்தகம் இன்னொரு பிரபஞ்சம் அதனுள்ளே இந்த பிரபஞ்சத்தின் தீர்க்கமுடியாத பல புதிருக்கான பதில் காணப்படுகிறது. 

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சுயமாக அனுபவித்து அறிய முடியாத அத்தனையும் புத்தகம் வழியாக மனிதர்களுக்கு எளிதாக அனுபவம் ஆகிறது மனிதர்களின் நினைவுகள் அழிந்து போவது இல்லை அவை எழுத்தில் சொல்லில் வரிகளில் ஒளிந்து கொண்டு தன்னை உயிர்ப்பித்துக் கொள்கின்றன .

புத்தகம் என்பது மூன்று கரை உள்ள ஆறு என்கிறார் கவிஞர் தேவதச்சன் உலகின் நினைவுகளும் கனவுகளும் நம்பிக்கைகளும் ஒன்று கலந்து உருவானதே புத்தகம் அதுவே உலகின் ஒப்பற்ற அதிசயம். 

வாழ்க்கை இடமிருந்து எதைக் கற்றுக் கொண்டு இருக்கிறோம் எதை கைவிட்டு இருக்கிறோம் எதைக் கடந்து வந்திருக்கிறோம் என்பது தான் ஒவ்வொரு தலைமுறையின் பிரச்சனையும் முதியவர்களின் கேள்விகள் அறியாமையிலிருந்து எழுவதில்லை மாறாக ஆதங்கத்தில் இயலாமையில் வயதிலிருந்தே உருவாகிறது என்பதை நாம் ஏன் மறந்து போனோம்

Wednesday, July 21, 2021

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிறு குறிப்பு

 


வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்


''நீ மிகவும் மோசமாகத் தேர்வு எழுதியிருக்கிறாய்; கணிதம், பெளதிகம் இரண்டைத் தவிர, வேறு எந்தப் பாடத்திலும் தேர்வு பெறவில்லை; மொழிகளில் உனக்குப் போதிய அறிவு இல்லை; இந்தநிலையில், நீ இங்குச் சேர விரும்புகிறாய். அது, உன் அறிவுக்கு மீறிய ஆசையாகும். 


நீ மறுபடியும் பயிற்சிப் பள்ளிக்குச் சென்று படித்துத் தேர்ச்சி பெற வேண்டும். அப்படித் தேர்ச்சிபெற்று வந்தால், நான் உன்னைச் சேர்த்துக்கொள்கிறேன்'' - 


இது, தொழில்நுணுக்கக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் தோற்ற ஒருவரைப் பார்த்து... ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத் தலைவர் சொன்னது. பின்னாளில், அந்தத் தேர்வில் தோற்ற மனிதர்தான், அகிலம் வியந்த அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 


குழந்தைகளின் மனநிலை! 


''வாழ்க்கையில் தவறே செய்யாதவர்கள், புதிதாக எதையும் முயற்சிக்காதவர்களாகத்தான் இருக்க முடியும்'' என்ற வாழ்க்கையின் இலக்கணத்தை வளரும் தலைமுறையின் இதயங்களில் நிலைநிறுத்திய  ஐன்ஸ்டீன், தாம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஒருகாலத்தில் ஆசிரியர்களால் அவமானப்படுத்தப்பட்டு, விரட்டப்பட்டார். 


அதனால் தான் அவர், குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு இப்படிச் சொன்னார், ''குழந்தைகளின் மனவியல் தெரியாது கற்பிக்கும் ஆசிரியர்கள், ஏறத்தாழ அவர்களுடைய மனவியல்பைக் கொல்லும் கொலைகாரர்களே.'' 


''அவர் ஒரு சிந்தனையாளன்!''


சிறுவயதில் பேச்சு வராமல் சிரமப்பட்ட அவர், எப்போதும் எதையாவது சிந்திப்பதிலேயே கவனத்தைக் கொண்டிருந்தார். இப்படித்தான் ஒருமுறை ஐன்ஸ்டீன், எதையோ தனிமையில் உட்கார்ந்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். 


இதைக் கண்ட அவரது மாமா (ரூடி), ''உன் மகன் ஆல்பர்ட்டைப் பார்... எதையோ ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறான். அவன், ஓர் ஆராய்ச்சியாளன்; சிந்தனையாளன்'' என்று நக்கலாகச் சொல்லிவிட்டார். அவ்வளவுதான்,  ஐன்ஸ்டீன் அன்னைக்குக் கோபம் தலைக்கு மீதேறிவிட்டது. 


எந்தத் தாய், தன் பிள்ளையை விட்டுக்கொடுப்பாள்? காக்கைக்குத் தன் குஞ்சும் பொன் குஞ்சு என்பதுபோல... தன் தம்பியையும் அவர் விட்டுவைக்கவில்லை. ''அவன், ஒரு சிறந்த சிந்தனையாளன்; அறிவாளி... அதனால்தான் அடக்கமாக இருக்கிறான். எதிர்காலத்தில் அவன் ஒரு புகழ்பெற்ற பேராசிரியனாகத் திகழப்போகிறான்'' என்றார், முகத்தில் அடித்ததுபோன்று.


ஐன்ஸ்டீன் அன்னை சொன்னது... நூற்றுக்கு நூறு உண்மை.  ஆம், பிற்காலத்தில் அவர் எல்லா நாட்டவரும் போற்றும்படியாக வாழ்ந்த மிகச் சிறந்த சிந்தனையாளர்; சாகும்வரை அடக்கத்துடனும், எளிமையுடனும் வாழ்ந்தவர். ஆடைகள் அணிவதிலும், அலங்காரம் செய்வதிலும் அவர் அலட்சியமாகவே இருப்பார்; அழுக்கு ஆடையைப் பல நாள்கள்கூட அணிந்திருப்பார்; வெட்டப்படாத தலைமுடியுடன் வீதிகளிலும், விழாக்களிலும் வலம்வருவார்; சில நேரங்களில் செருப்பில்லாமலும், மேலங்கி அணியாமலும் வெளியே செல்வார். 


எளிமைக்கு உதாரணம்!


அப்படிப்பட்ட அந்த எளிமையான மாமேதை, ஓரிடத்துக்கு ஒருமுறை சொற்பொழிவாற்றச் சென்றபோது... அவருடன், அவர் மனைவி எல்ஸா செல்ல முடியவில்லை. ஆதலால், தம் கணவருக்கு வேண்டிய நல்ல ஆடைகளை எடுத்து... ஒரு பெட்டியில் வைத்து அதை அவரிடம் கொடுத்தவர், ''இந்தப் பெட்டியில் நல்ல உடைகள் வைத்திருக்கிறேன். சொற்பொழிவுக்குச் செல்லும்போது நீங்கள் மறந்துவிடாமல், அவைகளை எடுத்து அணிந்துகொள்ளுங்கள்'' என்றார். தன் மனைவி சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்ட ஐன்ஸ்டீன், நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டுத் திரும்பிவந்தார். கணவரைக் கண்டு மகிழ்ச்சியடைந்த எல்ஸா, தாம் கொடுத்து அனுப்பிய பெட்டியை வாங்கித் திறந்துபார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். ஆம், அவர் வைத்த ஆடைகள் அப்படியே இருந்தன. கோபமடைந்த எல்ஜா, தம் கணவரிடம்... ''ஏன் இந்த ஆடைகள் அடுக்கிவைத்தபடியே இருக்கின்றன... அவைகளை நீங்கள் அணிந்துகொள்ளவில்லையா'' என்றார்.


எல்ஸா கேட்டதைக் கண்டு கொஞ்சமும் கவலையடையாத ஐன்ஸ்டீன், சிரித்துக்கொண்டே அவரிடம்... ''அடடா, எனக்கே மறந்தே போய்விட்டது. நீ கோபித்துக்கொள்ள வேண்டாம்'' என்றவர், ''அது இருக்கட்டும். ஆனாலும், எனக்கு ஒரு சந்தேகம்'' என்று அவரிடம் ஒரு கேள்வியை வைத்தார். ''எல்லோரும் என் பேச்சைக் கேட்க வருகிறார்களா அல்லது என் ஆடையைப் பார்க்க வருகிறார்களா'' என்பதே அது. பாவம் எல்ஸாவால் அதற்குப் பதில் சொல்லவே முடியவில்லை. 



வாழ்க்கை என்பது இரண்டு நிலைகள்தான். ஏற்றமும் தாழ்வுமே அது. அதில், சரியாகப் பயணிப்பவர்களே... வெற்றிபெறுகிறார்கள். இந்த வெற்றியின் பயணத்தில் ஐன்ஸ்டீனின் வாழ்வும் அடங்கும். இன்பமும், துன்பமும் அவரை எதிர்கொண்டபோது... எந்தச் சூழலிலும் தன் வழியை மாற்றிக்கொள்ளாதவர்.


 அதனால்தான் அவருக்கு மிக உயர்ந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்கான தொகை அவருக்குக் கிடைத்தபோது, அதை வெறுக்கவே செய்தார். ''எதை நான் விரும்பவில்லையோ, அது என்னைத் தேடி வருகிறது'' என்று முணுமுணுத்தார். அத்துடன், தன் மனைவி எல்ஸாவிடம்... ''இந்தப் பணம் நமக்குத் தேவையில்லை. பாதித் தொகையைத் தர்ம காரியங்களுக்கும் மீதித் தொகையை மிலீமாவுக்கும் (ஐன்ஸ்டீனின் முதல் மனைவி) கொடுத்துவிடலாம்'' என்றார். அவர், கருத்துக்கு என்றுமே மறுப்புச் சொன்னதில்லை எல்ஸா. அதனால்தான், அவர்களுடைய இல்லற வாழ்க்கையும் தேனாய் இனித்தது. 



கடைசிவரை எளிமையின் உறைவிடமாய் வாழ்ந்து மறைந்த ஐன்ஸ்டீனிடம்,  அமெரிக்காவில் இந்தியத் தூதராக இருந்த மேத்தா, ''நீங்கள் மகாத்மா காந்தி போன்றவர்'' என்றார். அதற்கு ஐன்ஸ்டீன், ''தயவுசெய்து, என்னை அவரோடு ஒப்பிட்டுப் பேச வேண்டாம். அவர், மனிதகுலத்துக்காக நிறைய தொண்டு செய்திருக்கிறார். நான் என்ன செய்திருக்கிறேன்? ஏதோ, சில விஞ்ஞானக் கோட்பாடுகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவ்வளவுதான்'' என்றார், அடக்கத்துடன்.


''அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது, அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது'' என்று சொன்ன அந்த மாமேதை, கடைசிவரை அதேவழியில் பயணித்ததுடன்... ''மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையே, ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது'' என்று வாழ்ந்து, வரலாற்றிலும் இடம்பிடித்தார்.


விசாவிற்காக காத்திருக்கிறேன் - அம்பேத்கர்

 விசாவிற்காக காத்திருக்கிறேன்

பி. கே. அம்பேத்கார்


பெரிய தத்துவங்கள் எல்லாம் ஒன்றும் இல்லை.. பிற சமூகத்தவர்கள் பசித்தால் சாப்பாடு வாங்கி சாப்பிடுவோம்.. தாகம் எடுத்தால் அருகில் இருக்கும் கடையில் தண்ணீர் வாங்கி குடிப்போம்.. ஒரு இடத்திற்கு போக தனியாக வண்டி அமைத்துக் கொள்வோம்.. சட்டையில் ஒட்டிய அழுக்கை அருகில் இருக்கும் ஏதோ ஓர் நீர்நிலையில் கழுவுவோம்.. கால் வலித்தால் அங்கிருக்கும் நாற்காலியில் உட்காருவோம்.. காசிருந்தால் தங்க இடம் கிடைக்கும்.. 


இவை அனைத்தும் இரண்டு மடங்கு காசிருந்தாலும் 'தீண்டத்தகாதவர்' என்று சமூகம் கூறிய காரணத்தினால் அம்பேத்கருக்கு மறுக்க படுகிறது.. இந்த அனுபவத்தினை சிறுவயதில் இருந்து பெற்றுக்கொண்டே இருக்கிறார்.. நாம் பிரஞ்யையே இல்லாமல் செய்யும் மேற்கண்ட ஒவ்வொரு செயலையும் அவர்கள் காத்திருந்து, பயந்து, யோசித்து, மறைந்து செய்ய வேண்டியுள்ளது.. சில நேரங்களில் அப்படியும் செய்ய இயலாமல் போகிறது.. 


இன்றும் இந்நிலைகள் முற்றாக மாறிவிடவில்லை.. தொடரும் தீண்டாமை குற்றங்கள் குறைந்தபாடில்லை.. புது வடிவம் எடுத்துள்ளதென்று வேண்டுமானால் கூறலாம்.. புத்தகத்தில் வரும் அம்பேத்கரின் சொற்கள் இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது..


மதங்களை கடந்து இந்தியாவில் தீண்டத்தகாதவர் அனைவருக்கும் தீண்டத்தகாதவராகவே இருக்கிறார்.. இவற்றையெல்லாம் தன் வாழ்வின் அனுபவங்களில் இருந்து எடுத்து கூறுகிறார் அம்பேத்கர். அது மிகப்பெரிய தத்துவமாகிப் போகிறது!


அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்..  மிகவும் பாரமான ஒரு உணர்வை கொடுத்துள்ளது இந்த நூல்.. 


சிறிது வெளிச்சம் - எஸ்.ராமகிருஷ்ணன்

 


காதலின் விசித்திரம் புரிந்துகொள்ள முடியாதது.20 வயதில் தோன்றும் காதல் இயற்கையானது. 


ஆனால் ,நடுத்தர வயதில் தோன்றும் காதல் ? அதை எப்படி எதிர்கொள்வது.எப்படிக் கடந்து செல்வது? 45 வயதில் ஏற்படும் எதிர்பாரத காதல் ,

பல ஆண்களைத் தடுமாற வைத்திருக்கிறது.தவறான முடிவுகளுக்கும் கொண்டு சென்றிருக்கிறது.


அதேபோலவே 30 ஐக் கடந்த பெண்ணுக்கு ஏற்படும் காதலும். குடும்பம் ,கணவன் ,குழந்தைகள் என்ற இயல்பான உலகில் இருந்து அவளை வெளியேற்றுகிறது. அவளது அன்றாட வாழ்வு சிடுக்கும் சிக்கலும் ஆகிவிடுகிறது.


குடும்பத்துக்காகவும் , சமூக கட்டுப்பாடுகளுக்காகவும் பெண்ணோ ,ஆணோ தங்களது ரகசிய காதலை வெளியே சொல்லாமல் இருக்கக்கூடும். 


ஆனால் , நடுத்தர வயதில் திடீரென காதல்வசப்படுவது பலருக்கும் நடந்தேறி இருக்கிறது. அதை அவர்கள் எதிர்கொண்ட விதமும் பின்விளைவுகளும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும் கசப்புமானவை.


தங்கள் வயதை மறந்து அவர்கள் நடந்துக்கொள்ளும் விளையாட்டுத்தனம் ஒரு பக்கம் என்றால் ,மறுபக்கம் தங்கள் வயதை நினைத்து அவர்கள் போடும் வேஷங்களும் ஒளிவுமறைவுக்களும் இந்தக் காதலை குழப்பத்தின் உச்சத்துக்குக் கொண்டு செல்கின்றன.அல்லது ஆறாத மன வலியை, ஏமாற்றத்தைத் தருகின்றன.


நடுத்தர வயதின் காதல் , அற்ப நாளில் முடிந்து போய்விடும் சிலந்திவலை போன்றது என்று அறிந்தே காதலிக்கத் துவங்குகிறார்கள். 


பல நேரங்களில் அதை கைவிட முடியாமல் தொடரவும் முடியாமல் சிக்கிக்கொண்டு துயரப்படுகிறார்கள்.


கார்ல் மார்க்ஸ் - ஜென்னி

 


நான் முதன் முதலாக படித்த (1987)) ஒரு உண்மையான காதல் கதை கார்ல் மார்க்ஸ் ஜென்னி யினுடையது. எத்தனை முறை படித்தேன் என்பது கணக்கில் இல்லை. தோழர் ராமராஜ் படிக்க சொன்ன கதை. 

"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை

உலகுக்கு புது புது சித்தாந்தங்களை தன் அறிவின் மூலம் பேசிய ஒரு பொதுவுடைமை அறிஞர், பொருளாதார ரீதியாக நிறைய கண்டுபிடிப்புகளும் கட்டுரைகளும் வெளியிட்டவர், அவர்தான் காரல்மார்க்ஸ். 


முதன்முதலில் தன் காதலிக்காக காதல் கடிதங்கள் எழுதியதே  ஆரம்பப்புள்ளி என்றால் யாரால் நம்ப முடியும். காரல் மார்க்ஸ், உலகுக்கு கம்யூனிச சித்தாந்தங்களை வெளிக்கொண்டுவந்தவர். இப்படி அனைத்தையும் உலகுக்கு கொண்டுவந்தவருக்கு வாழ்கை முழுவதும் யார் உறுதுணையாக இருந்திருப்பார் என்றால் அது அவரது மனைவி ஜெனியாகத்தான் இருக்கமுடியும். 


"மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்று நம் ஊரில் ஒரு பழமொழி உண்டு. ஒரு மனிதனை இப்படி ஒருவர் காதலிக்க முடியுமா என்று தெரியவில்லை, வறுமையின் காரணமாக தங்கள் குழந்தைகள் இறக்கும்போது கூட, மார்க்ஸ் மீது எந்த கோபமும் இல்லாமல் நீங்கள் நினைப்பதையே செய்யுங்கள் அதற்கு நான் பக்க பலமாக இருக்கிறேன் என்றவர்தான் ஜெனி. 


இது ஆணாதிக்கத்தால் நடந்ததில்லை, மார்க்ஸ் ஜெனி மீதும், ஜெனி மார்க்ஸ் மீதும் வைத்திருந்த புரிதலினால் அமைந்தது. இவர்கள் கல்யாணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டதில்லை, அவர்களே சிறுவயதிலிருந்து நண்பர்களாகி பின் வாழ்க்கை துணைவர்களாய் நிச்சயித்து கொண்டது. இது ஒரு புரிதலால் உண்டான இருவரின் கதை.


பால்யவயதில் அடாவடியாக சுற்றித்திரிந்த மார்க்ஸ், ஒரு பக்கம் வீட்டின் வறுமையில் சிக்கித்தவித்துள்ளார். ஆனால்  ஜெனியின் வீடோ பணக்கார குடும்பம். காரல் மார்க்ஸ் தன் உயர்படிப்பிற்காக படிக்கச்செல்லும்வரை அவருக்கு சமூகத்தின் மீது எந்த ஒரு அக்கறையும் இருந்ததில்லை. அவருக்கு இருந்த ஒரே அக்கறை ஜெனி மட்டும்தான். 


கல்லூரிக்கு சென்றவுடன் ஜெனிக்காக மதுகுடித்துவிட்டு நண்பர்களுடன் காதல் பாட்டு, கவிதை, ஜெனிக்கு காதல் கடிதம் என அனைத்தையும் எழுதிவிட்டு ஜெனியின் பதில் கடிதத்திற்காக காத்திருந்திருந்தார். இப்படி போய்க்கொண்டிருந்தவர் வாழ்ககையில்தான் சமூகத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது. இதுவரை காதலுடன் மட்டும் பயணித்த காரல், அதன்பின் சமுகத்தையும் தன்னுடன் சேர்த்து பயணிக்கத்தொடங்கினார்.


மார்க்ஸுக்கு படிப்பு முடிந்தது. இங்கு ஊரில் அழகியான ஜெனியை திருமணம் செய்ய வரன்கள் வந்துகொண்டே இருக்கிறது. ஜெனி அதை எல்லாவற்ரையும் நிராகரிக்கிறார். மார்க்ஸை மட்டும்தான் திருமணம் செய்வேன் என்கிறாள். 


நீங்கள் நினைப்பது போன்று இவர்கள் குடும்பத்தில் பணக்கார, ஏழை சண்டை எதுவும் இவர்கள் காதல் கதைகளில் இல்லை. ஜெனியின் அப்பாவுக்கு மிகவும்பிடித்தமான ஒருவர் காரல்மார்க்ஸ். ஜெனியின் வீட்டில் காதலுக்கு பச்சைக்கொடிதான். 


ஆனால், மார்க்ஸின் வீட்டில்தான் பிரச்சனையே. மார்க்ஸின் குடும்பம் கிறிஸ்துவர்களாக மதம் மாறியிருந்தாலும் பூர்விகமாக யூதர்கள். அதுதான் இங்கு பிரச்சனையே, மார்க்ஸின் அம்மா "ஒரு யூதன் ஜெர்மன் பெண்ணை திருமணம் செய்வதா நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்" என சொல்லிவிட்டார். இதனையடுத்து காரல் மார்க்ஸ் ஜெனியை திருமணம் செய்யவேண்டுமென்றால் முதலில் ஒரு வேலை ஒரு சின்ன சம்பாத்தியம் வேண்டும் என நினைக்கிறார். ஆதலால், ஜெனியிடம் எனக்காக காத்திரு நான் உன்னை வேலைகிடைத்தவுடன் அழைத்து செல்கிறேன் என்கிறார். ஜெனியும் காத்துக்கொண்டே இருக்கிறாள் ஏழு வருடங்கள் ஓடிவிடுகிறது. 


பின்னர் நண்பர்கள் உதவியுடன் பாரிஸில் வேலை கிடைக்க ஜெனியை திருமணம் செய்துகொள்கிறார், சில நிபந்தனைகளுடன். "நம் திருமணம் ஆடம்பரமாக இல்லாமல் சிறிய முறையில் தேவாலயத்தில் பதிவுசெய்தால் போதுமென்று" கூறுகிறார். வெறும் ஐந்து பேர் கொண்டு நடக்கிறது அவர்கள் திருமணம். பொதுவாக பெண்கள் தனக்கு திருமணம் ஆடம்பரமாக நடக்கவேண்டும் என நினைப்பார்கள். ஆனால் இங்கு ஜெனியோ "எனக்கு நீ கிடைத்தால் போதும், உன்னுடன் நான் வாழ்ந்தால் போதும்" என்று நினைத்திருப்பார் போல அதற்கு சரி என்று சொல்லிவிட்டார்.


இவர்களின் தேன்நிலவுக் கதைகளை கேட்டால் கேலிக்கூத்தாகத்தான் இருக்கும். பத்து பெரிய பெட்டிகள் நிறைய புத்தகங்களை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் மார்க்ஸ். அதற்கு ஜெனியும் நாம் இருவரும் சேர்ந்தே படிப்போம் என்று கூறியுள்ளார். எத்தனை காதலிருந்தால் இப்படி ஒரு சொல் இங்கே வந்திருக்கும்.


 இயற்கையை ரசிக்க சென்ற மார்க்ஸ் வீட்டை பூட்ட மறந்துவிட திருடன் வீட்டில் இருக்கும் அத்தனை பணத்தையும் திருடிவிடுகிறான். இந்த நிகழ்வை ஜெனியிடம் அவர் சொல்ல, ஜெனி விழுந்து விழுந்து சிரிக்கிறார். சிரித்துக்கொண்டே, " நாமும் இனி உழைக்கும் வர்க்கம் ஆகிவிட்டோம் என்கிறார். 

 

காரல் மார்க்ஸுக்கு போக, போக சமூகத்தின் மீது பற்று அதிகமாகிறது. இவர் செய்யும் வேலைகளுக்கு எங்குபார்த்தாலும் எதிர்ப்புகளாக இருக்க நாட்டை விட்டு வெளியனுப்பப்படுகிறார். உடன் மனைவி குழந்தைகள் இருக்கிறார்கள் என்று எந்த யோசனையும் இல்லாதவராக இருக்கிறார் மார்க்ஸ். இவர் இழுத்த இழுப்பிற்கெல்லாம் எதுவும் சொல்லாமல் ஜெனியும் இருக்கிறார்.


 காதலனை பார்த்து எந்த நேரத்திலும் "வீட்டை மட்டும் கவனித்தால் போதும், நீங்கள் நாட்டுக்கு ஒன்று செய்யவேண்டாம்" என சொல்லியதே இல்லை. வறுமையினால் இவர்களுக்கு பிறந்த நான்கு குழந்தைகள் இறந்திருக்கிறது. சுற்றிலும் கடன் நண்பர்கள் உதவியுடன்தான் வாழ்க்கையை ஒட்டியிருக்கிறார்கள். இதுபோன்று நடக்கும்போது கூட மார்க்ஸ் எதோ ஒரு சமூக யோசனையில்தான்  இருந்திருக்கிறார்.


இத்தனை துயரங்களிலும் உடன் இருந்த ஜெனி, மார்க்ஸ் இறக்கும் ஓராண்டுக்கு முன், நோயுற்று கிடக்கிறார். ஒரு அறையில் ஜெனியும், மறு அறையில் மார்க்ஸும்  இருவரும் பார்க்கக்கூட முடியாமல் இருக்கின்றனர். ஜெனி இறந்து கல்லறையில் புதைக்கும் வரை மார்க்ஸை ஜெனியின் உடலை பார்க்க யாரும் அனுமதிக்கவில்லை. அவளின் நோய் தொற்றிவிடும் என அஞ்சினர். இறுதி அஞ்சலிக்கு கடிதம் எழுதி அனுப்பினார் மார்க்ஸ். காதல் கடிதங்களில் ஆரம்பித்த அவர்களின் காதல்,  அதே காதல் கடிதத்தோடு முடிகிறது. .


 அதில் "அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன். அவள் எனக்கு கிடைத்தது ஒரு வரம்" என்று அதில் எழுதியுள்ளார். 

சிறிது வெளிச்சம் - எஸ். ராமகிருஷ்ணன்

 


வீடு மாறிப் போவது என்பது வெளிக்காட்டிக்கொள்ள முடியாத ஊமை வலி.அதிலும் சொந்த வீட்டில் குடியிருந்துவிட்டு பொருளாதாரக் காரணங்களுக்காக வாடகை வீட்டுக்குப் போவது , மனமறிந்த வேதனை .அந்தப் பிரிவு , துண்டிகப்பட்ட பல்லியின் வால்போல நமக்குள்ளாகவே துடித்துக்கொண்டு இருக்கக்கூடியது.


வாடகை வீடோ , சொந்த வீடோ எதுவாயினும் , நாம் வசிக்கத் துவங்கியதும் நம் ஆசைகளும் ஏமாற்றங்களும் படிந்து நமது அந்தரங்க வடிவமாகிவிடுகிறது. 'வீடு'.வீட்டின் சுவர்களுக்கு மட்டும் பேசத்தெரிந்தால் , எவ்வளவு கதைகளைச் சொல்லும் தெரியுமா?

சுவர்கள் நம்மைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றன என்ற சிந்தை நமக்கு இருப்பதில்லை.மாறாக ,ஒரு போர்வை போல நமது அழுகை வெளியே தெரியாமல்தன் அகன்ற கைகளால் சுவர்கள்  மறைத்துக் கொள்கின்றன. சுவரிலிருந்து உதிரும் காரைகளைபோலவே நம் இயலாமைகள் வீடெங்கும் உதிர்ந்து கிடக்கின்றன.


வீட்டின் கதவுகள் , ஒரே நேரத்தில் வெளியில் இருந்து எதுவும் உள்ளே நுழைந்துவிடாமலும் , உள்ளிருந்து ரகசியங்கள் வெளியே போய்விடாமலும் தடுத்துக்கொண்டு இருக்கிறது. வீடு நம் நிர்வாணம் அறிந்த கண்ணாடி. 


வீடு மாறிப்போனவர்களின் பேச்சில் எப்போதாவது வசித்த வீடுகள் பீறிடுகின்றன."அந்த வீட்டில் ஒரு கிணறு இருந்தது அந்த வீட்டின் பின்புறம் நிலா வெளிச்சம் படிக்கட்டில் அடிக்கும்.அந்த வீட்டில் மழை பெய்யும்போது கேட்கும் சத்தம் வேறுவிதமாக இருக்கும்.அந்த வீட்டின் தரை குளிர்ச்சியானது'என்று எதையோ சொல்லி வீட்டின் நினைவுகள் பீறிட்டுவிடாமால் அடக்கிக்கொள்கிறோம்.


சிறுவர்கள் , வசித்த வீடுகளை உடனே மறந்துவிடுவதில்லை. அதை கடந்து செல்லும் சந்தர்பங்களில் எல்லாம் , 'அது நம் வீடுதானே ...! என்று அடையாளம் காட்டுகிறார்கள். 

அந்த வீட்டினை ஏக்கத்துடன் திரும்பிப்பார்க்கிறார்கள். நமக்கும் அப்படிப் பார்க்க வேண்டும் என்று உள்ளூர ஆசை இருக்கக்கூடும்.நாம் தயங்கி நிக்கிறோம்.பல நேரம் சமூக கூச்சங்களுக்கா அதை விலகி விடுகிறோம் .ஆனால் ,  நாம் வசித்த வீடுகள் நம் நினைவில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றது

மௌனம்

 


மௌனம் மனதை கட்டுபடுத்தும் 

சிறையாய் இருப்பினும்

பல வினாக்களுக்கு

விடையாகவும் இருந்துள்ளது

மொழிகள் சொல்லா அன்பை

பல நேரங்களில்

மௌனம் உணர்த்திடும்


வெண்ணிற இரவுகள் - ரஷ்ய நாவல் கதை சுருக்கம்

 


வெண்ணிற இரவுகள்

ஆசிரியர் - ஃயோதர் தஸ்தயேவ்ஸ்கி

தமிழில் -ரா.கிருஷ்ணையா


இயக்குனர் ஜனநாதன்  அவர்களால் இயற்கை என்ற திரைப்படம் வெண்ணிற இரவுகள் நாவலை தழுவி எழுக்கப்பட்டதே.


கதையில் கதையின் நாயகன் தஸ்தயேவ்ஸ்கியே.கனவு உலகிலேயே வாழும் நம் நாயகனுக்கு அதிர்ஷ்ட வசமாக ஒரு இரவில் நாஸ்தென்காவின் பரிச்சயம் கிடைக்கிறது.அவர்களுக்குள் ஏற்படும் நான்கு இரவு சந்திப்புகளும் அவர்களின் உரையாடலுமே வெண்ணிற இரவுகள்.


இந்த உலகில் வாழ புடிக்காதவர்களுக்கும் அல்லது வாழ முடியாதவர்களுக்கும் கனவுலகமே ஆறுதல். அப்படி படைக்கபட்ட உலகம் அவனுடையது அவனுக்கானது. அங்கு அவனே ராஜா. அப்படிப்பட்ட கனவுலகில் படைக்கப்பட்ட ராணியை அவன் சந்திக்க நேர்ந்தால், அவளின் காதல் அவனுக்கு கிடைக்க பெறும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவனின் மன ஓட்டமே வெண்ணிற இரவுகள். 


இயற்கை படத்தில் ஒரு வசனம் ' இந்த உலகில் அஃறிணை அனைத்துக்கும் காதல் பற்றி தெளிவு இருக்கிறது. ஆறறிவு படைத்த மனிதனிக்கு தான் இதில் பிரச்சினை வருகிறது'.

எவ்வளவு உண்மை இந்த வரிகள்.


இரவிற்குள் செல்லும் முன் வெஸ்கியின் வரலாறு கொஞ்சம் திக்குமுக்காடத்தான் செய்கிறது.


யாருக்குத்தான் சோகம் கஷ்டம் இல்லை. இருக்கட்டும் ஒரு எழுத்தாளனுக்கு இவ்வளவு கொடிய அனுபவங்கள் அமையக்கூடுமா ?


பீட்டர்ஸ்பர்க் நகரத்திலிருந்து தொடங்கும் கதை 1848 ல் எழுதப்பட்டதொன்று. பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் விசித்திரமான நிலைமையையும் அதற்கு பின்னால் அமைந்த கரைந்து போன இரவின் தாக்கத்தையும் விவரிக்கும் நூல், 


தஸ்தயேவ்ஸ்கி இளமைப்பருவம் அது, 

 பீட்டர்ஸ்பர்க் நகரத்தை விட்டு எல்லாரும் வெளிநகரம் புகுவதாயும், தான் தனித்துவிடப்பட்ட ஒரு ஜடமென உணர்கிறார் வெஸ்கி. விவரமறிந்தது முதல் இந்நாள் வரை தனிமையைத் தவிர வேறு எதையும் அனுபவிக்காத அந்த ஜீவன் நாஸ்தென்கா எனும் பெண்ணை சந்திக்கிறது.


காதல் விரக்தியில் ஏற்கனவே தடுமாறியிருந்த அப்பெண்ணின் நிலையுணர்ந்து முதன்முதலாய் மனம்விட்டு பேச தொடங்குகிறார் வெஸ்கி. இருவரின் உரையாடல் நான்கு நாட்கள் வரை நீடிக்கிறது. அவ்வளவுதான் கதை.


 இந்நான்கு நாட்களுக்குள் இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள்.இவர்கள் நட்பு காதலில் முடிந்ததா ? இல்லை  தனிமையையே தஸ்தவெஸ்கி தழுவிக்கொண்டாரா ? சுயநலம் என்று சொல்லாமல் யதார்த்தமாய் இருந்தது ஒவ்வொரு வரிகளும். இடையிடையே கொஞ்சம் நாடகத்தின் வழக்காய் பேச்சுவார்த்தை தொடர்வதால் கொஞ்சம் சோர்வு தட்டுவதாய் இருந்தது.


வெண்ணிற இரவுகள் காதலினால் மூழ்கியதா ? இல்லை ஏமாற்றத்தால் முடிந்ததா ? அடுத்த இரவிற்காய் காத்துக்கொண்டிருக்கிறார் ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி.

ஆயிஷா - நாவல் கதை சுருக்கம்

 



புத்தகம் - ஆயிஷா 

ஆசிரியர் - ரா.நடராஜன்


 இதைப் படித்து முடிக்கும் போது நிச்சயம் உங்கள் மனதை ஒரு சோகம் கவ்வும்.


ஒரு அறிவியல் ஆசிரியை தனது அறிவியல் புத்தகத்துக்கு எழுதிய முன்னுரை யாக இந்த ஆயிஷா குறுநாவல் உள்ளது.


துறுதுறு பத்தாம் வகுப்பு மாணவி ஆயிஷா. கேள்விகளால் ஆன ஆயிஷா. விடைகளை மட்டுமே எதிர்பார்க்கும் ஆசிரியர்களுக்கு கேள்விகளால் ஆன ஆயிஷா பிரச்சினை ஆகிறாள். இந்த கதை சொல்லும் ஆசிரியைக்கும் அப்படியே.


ஆனாலும் ஆயிஷா துரத்தித் துரத்திக் கேட்கும் கேள்விகளில் செக்குமாடாய் கல்வி கற்பிப்பதில் செத்துப் போயிருந்த ஆசிரியை முதல் முறையாய் ஆசிரியையாக பிறப்பெடுக்கிறார். தொடர்ந்து ஆயிஷா கேள்விகளால் ஆசிரியையோடு மிகப் பெரிய உறவுக் கோட்டையை எழுப்புகிறாள். அது அந்த ஆசிரியை புதிதாய் வாசிக்க, கற்றுக்கொள்ள, தேட உயிர்ப்புத் தருகிறது.


10 ம் வகுப்பு மாணவி ஆயிஷா 11 ஆம் வகுப்பு மாணவிக்கு கணக்கு சொல்லித்தரும் போது அவளின் அறிவு அங்கே கொண்டாடப்படுவதற்கு மாறாக தண்டிக்கப்படுகிறது. அறிவைக் கொலை செய்யப்படும்போது உண்டாகும் வலி, வேதனை, ரணம் இங்கே யாரால் புரிந்து கொள்ளப்படுகிறது.


சின்னச் சின்ன கேள்விகளால் ஆயிஷா தன் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்கிறாள். ஆனால் அதே அறிவியலே அவளை நம்மிடமிருந்து பிரித்தெடுக்கும் போது நம் மனதை மெல்லக் கவ்வும் வலியைத் தவிர்க்க முடியவில்லை.


இந்த குறு நாவலை எழுதியவர் இரா.நடராசன். இவர் பள்ளி தலைமை ஆசிரியர், 50 க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர், சிறுவர் இலக்கியத்திற்கான சாகித்திய அகாடமி விருது பெற்றவர். இவர் இப்போதெல்லாம் இந்த ஆயிஷா நாவலின் பெயரால் "ஆயிஷா" நடராசன் என்றே அறியப்படுகிறார்.


ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நாவலைத் தான் எழுதியதாக ஆயிஷா நடராசன் குறிப்பிடுகிறார்.


கல்விக்கூட சிந்தனைகள், கல்வி முறையில் மாற்றங்கள் இதுகுறித்தெல்லாம் சமூகம் இப்போதுதான் பேசத்தொடங்கியிருக்கும் நிலையில் 1985ல் ஆயிஷா எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.


குழந்தைகளுக்காக ஆசிரியர்களும், பெற்றோர்களும் தவறாமல் வாசிக்க வேண்டிய புத்தகம்.


பக்கங்கள் முக்கியமில்லை. சில புத்தகங்கள் பல பக்கங்களை தாண்டியும் நமக்குள் எந்த விதமான சலசலப்பையும் ஏற்படுத்தாது, ஆனால் இந்த ஆசிரியரின் எழுத்து நடை நமக்கு வலிகளை ஏற்படுத்தியதோடு உடல் சிலிர்பையும் உண்டாக்குகிறது.


புத்தகத்தை முடிக்கும் போது மனம் கணமாகியிருந்தது

பேரம் பேசுதல்

 


கூடை வியாபாரியை 

அழைத்து, 

கொள்முதல் விலையையும் 

விசாரித்து..........

துணிந்து கேட்ட விலைக்கு 

பணிந்தது வறுமை, 

படிந்தது அடாவடி 

பேரம்............

சொன்னதில் பேர்பாதி 

விலை கேட்டு, 

இரண்டொன்று கூடவே 

இலவசமும் பெற்று, 

பணம் கை மாறும் போது 

சிரித்துக் கொண்டே 

சில்லரை இல்லையென கூறி 

மேலும் இரண்டு ரூபாயை 

குறைத்து.........


அடடா, 

விந்தை உலகின் 

விசித்திர மனிதர்களே, 

எங்கே கற்றீர்கள் இந்த 

பஞ்சதந்திர மந்திரத்தை..........

வேதனை சுமந்து 

வெறுங் கூடையுடன் 

செல்லும் இவர்களின்

நாளைய முதலீட்டிற்காய்

சற்று கருணையைக் 

காட்டுங்கள். 

நினைவலைகள்

 


அம்மாச்சி வீட்டின் நினைவலைகள் 

- நானும் பாண்டிய னும் அமர்ந்து படித்த அந்த டேபிள் அதனுள் அமைந்த இரண்டு தனி தனி shelf (4th to  10th படித்த கால கட்டம் ). கண் முன் நிழல் படமாக தெரிகின்றது.  

- தாத்தாவுடன் செலவழித்த காலகட்டங்கள், சேட்டை செய்து மிக அன்பாக அவரிடம் திட்டு வாங்கிய நாட்கள் 

-மாமாவின் அன்பான வார்த்தைகள் அம்மாச்சி யின் கண்டிப்பு கலந்த அரவணைப்பு. வாழ்வின் இலக்கணத்தை கற்று தந்த விதம். 

- வீட்டின் முன்பு அமைந்த முருங்கை மரம்,  மொட்டை மாடி,  நாங்கள் ஓடி விளையாடிய அழகான சுற்று சுவர். 

- விற்ற போது இழப்பின் வலி அதிகரித்தது. 

இதுவும் கடந்துபோகும் 


கடவுள்



வறுமை 

வாழ்விலும்

அடுத்த 

உயிரை 

அரவணைப்பவர்களை

கடந்து செல்லும் போது... 

கருணை காட்டுங்கள். 

ஒரு வேளை 

இவர்கள் கூட

கடவுளாக 

இருக்கலாம்.


உறவு பாசப்போராட்டம்

 தற்போது பிள்ளைகள் தங்களிடம் பாசமாக இல்லை என்று வருந்தும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

 முதியோர் இல்லங்களுக்கு தள்ளப்படும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் கூட அதிகரித்து தான் வருகிறது இந்த நிலை சரியானதல்ல 

பெற்றோர்களை தன் இல்லத்தில் வைத்து அன்போடு பராமரிக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை என்பதை மறுப்பதற்கில்லை ஆனால் இந்நிலை ஏன் நேர்கிறது என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் 

பெற்றோர் பிள்ளைகளிடம் செலுத்தும் பாசம் உணர்வுபூர்வமானது ஆழமானது பிள்ளைகள் பெற்றோரிடம் செலுத்தும் பாசம் உணர்வுபூர்வமானது அல்ல அறிவுப்பூர்வமானது மட்டுமே

 பெற்றோரிடம்  தன் பிள்ளைகள் பிறந்தது முதல் இன்றுவரை உள்ள அத்தனை நிகழ்வுகளும் நினைவுகளும் அணுவணுவாக  மிக ஆழமாக பதிந்து கிடக்கின்றன.

 ஆழமான உணர்ச்சியால் எழுகிற பாசம் தன்னிச்சையானது . ஆனால் அறிவால் எழுகிற பாசம் ஆக்க பூர்வமானது.

 தாய் தன் குழந்தையிடம் செலுத்தும் பாசம் என்பது இயற்கையின் நியதி .சந்ததி வளர இயற்கை வகுத்துள்ள திட்டம்.

ஆனால் எவ்வளவோ ஒன்றுபட்டு வாழ முயன்றும் பல பிள்ளைகளாலும் பெற்றோர் களாலும் அது முடியாமல் போவது ஏன் என்பதை முதியவர்கள் சிந்திக்க வேண்டும்.

 முதியவர்கள் தங்கள் மனதை பக்குவப்படுத்திக் கொண்டால் அவர்கள் பிள்ளைகளுடன் ஒன்றுபட்டு மகிழ்ச்சியாக வாழ இயலும்.

 மனம் பக்குவப்படும் நிலையில் தங்கள் விருப்பப்படி தங்கள் வரையறைக்கு உட்பட்டு தங்கள் பிள்ளைகளும்  வாழவேண்டும் எனும் எதிர்பார்ப்பு எழாது. 

எதிர்பார்ப்பு இல்லாவிட்டால் ஏமாற்றமும ஏற்படாது.   அப்போது தேவையற்ற உபதேசங்களை செய்யும் பழக்கம் முதியோர்களிடம் இருந்து தானாக விடை பெற்று விடும் 

பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகளே பெரும்பாலும் சொல்லும் காரணம் வீட்டில் அவர்கள் விடாது குறைகூறி பேசுவதையும் அறிவுரை கூறுவதை தாங்க முடியவில்லை.

 தங்கள் பிள்ளைகளையும் மருமகளையும் நெறிப்படுத்தி வழிநடத்துகின்ற பெரும் பொறுப்பை கடவுள் தங்கள் மேல் சுமத்தி உள்ளதாக பெரும்பாலான பெற்றோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் .

இதனால் அவர்கள் ஓயாமல் அறிவுரை சொல்லவும் பிள்ளைகளும் மருமகள்களும் செய்யும் செயல்களை கடுமையாக விமர்சிக்கவும் தலை படுகிறார்கள்.

 தலைமுறை இடைவெளி தாண்டி விஷயங்களைப் புரிந்துகொள்ளும் பக்குவம் பெற்றோருக்கும் இருப்பதில்லை பிள்ளைகளுக்கும் இருப்பதில்லை இதுவே சிக்கல்களுக்கு அடிப்படை காரணமாகும் .

எது சரி எது தவறு என்பதை பெற்றோர் தங்கள் வாழ்க்கை முறை மூலம் போதிக்க வேண்டுமே தவிர தங்கள் வார்த்தைகள் மூலம் அல்ல .

உன்னை அறிந்தால்

பிறந்தோம் வளர்ந்தோம் இறந்தோம் என்றே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே நம்மில் பலரின் எண்ணமாக உள்ளது 

இதுதான் இயற்கையின் திட்டமா ?

எதற்கு இந்த பிறப்பு ?

 என்னில் இருக்கும் நான் யார்?

 நான் என்னவாக இருக்க வேண்டும் இத்தகைய கேள்விகள் ஒரு காலகட்டத்தில் எல்லோர் மனதிலும் வந்து போகும் 

சிலர் மட்டுமே அதற்கான விடையை தேட தொடங்குகிறோம்  வெகு சிலர் மட்டுமே விடையை கண்டடைகிறோம்

தன்னை அறிதலின் அவசியமும் முக்கியத்துவமும் ஒருவரின் வாழ்வை மேன்மை அடையச் செய்யும் 

இப்பிறப்பின் காரணத்தை அறிய முற்படும் போது ஞானம் பிறக்கிறது ஞானத்தின் வழி நிற்கையில் தெளிவு பிறக்கிறது 

நாம் கடந்து வந்த வாழ்க்கை பாதை நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பை நமக்கு அளிக்கிறது

 நமக்கு கிடைக்கும் வாய்ப்பை உணராமல் செல்வோம் எனில் வாழ்வின் மீது நம்பிக்கை பிறக்காது 

தன்னை அறிந்து கொள்ள நம் திறமையை நாம் முதலில் தெரிந்து கொள்ளல்  அவசியம். நம் திறமையை அறிந்து கொள்வது எப்படி?

 எந்த செயலில் நமக்கு இயற்கையாகவே ஈடுபாடு அதிகம் இருக்கிறதோ அதனை மெருகேற்ற வேண்டும் 

நமது கவனம் தொடர்ந்து அதில் செலுத்தப்பட வேண்டும் மற்றவர்களில் இருந்து அது நம்மை பிரித்துக் காட்ட வேண்டும் 

எப்போது நமது எண்ணத்தோடு ஒன்றென அச்செயல்  கலக்கிறதோ அன்றிலிருந்து அது நமக்கு தனி அடையாளத்தை தர ஆரம்பிக்கும் 

நமக்கான வாய்ப்பை நாம் எப்படி தெரிந்து கொள்வது ?

வாய்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் .பொறுமை விழிப்புணர்வுடன் காத்திருக்க வேண்டும் .

வாய்ப்பு கிடைத்தவுடன் செயல்திறனுடன் அசாத்தியமான சாதனைகளை நோக்கி நம் மீதான நம்பிக்கையை பலப்படுத்தி செயல் புரிதலின் மூலம் நல்ல வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் 

கிடைக்கப்பெற்ற வாய்ப்பை திடமாய் பிடித்து எல்லை யில்லா அர்ப்பணிப்புடன் இடைவெளி இல்லா ஈடுபாட்டுடன் வெற்றி தோல்வி என்ற வட்டத்திற்குள் சிக்காமல் உழைப்பை அதிகரித்தல் அவசியம்.

 உழைப்பிற்கான பலன் சில நேரங்களில் தாமதம் அடையலாம்! 

முழுமையான பலன் விரைவில் நம்மை வந்தடையும் எந்த சாதனையும் நம்மால் சாத்தியமே 

நம்மை நாம் அறிந்திருந்தால்

Friday, July 16, 2021

 அம்மா

நீ உயிரோடிருந்த பொழுதுகளைவிட

பன்மடங்கு வலிமையாக

என்மனதை ஆக்கிரமித்திருக்கும்

உன்னை இல்லை என்று

எப்படி நினைப்பது

உன்மறைவுக்கு பிறகு நிகழும்

நிகழ்வுகளில் கூட நீ இருக்கிறாய்

உன் அத்தனை  பாவனைகளுடனும்

என்னுடன் உரையாடி  கொன்டே இருக்கிறாய்

நான் படித்த மற்றும் இனி படிக்கப்போகும்

புத்தகங்களில் இருந்து நான் பெற்ற

மற்றும் பெறப்போகும்  அறிவு எதுவும்

நீ எனக்கு தந்துவிட்டு சென்றிருக்கும்

வாழ்கை அறிவுக்கு ஈடாகாது

ஊமையான துயரங்கள்

நீண்ட இரவுகளாக மாறுகின்றன

இதுவும் கடந்து போகும்.